Sunday, January 13, 2013

மனதை நெகிழ வைத்த "பசுமை விகடன்" வாசகர்.வாசகர்களின் மனதில் ஏற்படுத்தும் மனமாற்றத்தையும், நம்பிக்கையையும்  பொறுத்தது ஒரு கட்டுரையின் வெற்றியும் தோல்வியும். சில தினங்களுக்கு முன் அலைபேசி மூலம் பசுமை விகடன் (10-01-13) இதழில் வந்த  எனது மாடித் தோட்டம் பற்றிய கட்டுரையை படித்து விட்டு, வாசகர் ஒருவர்  கட்டுரை நம்பிக்கை அளிப்பதால் பார்க்க வருவதாக கூறினார். நானும் அலுவல் காரணமாய் வெளியூரில் இருந்ததால் எனது இயலாமையை தெரிவித்தேன். திரும்பவும் இரு தினங்கள் கழித்து  தொடர்பு கொண்டு வருவதாக விருப்பம் தெரிவித்தார். எனக்கோ அவர் எதிர்பார்த்து வரும் அம்சம் நம்மிடம் இருக்குமா? என்ற ஐயம், அவரும் விடுவதாக இல்லை இரவு முழுவதும் பயணித்து 13-01-2013 காலை 10.30 மணிக்கு கோவை வந்தார். விசாரித்ததில் 11 மணிநேரப் பயணம், பயணச் செலவு (வருவதற்கு மாத்திரம்) ரூ.135/=   என்றார்.
பசுமை விகடன் கட்டுரைப் பக்கத்துடன் திரு.ஐயாசாமி.


அவரைப் பற்றி.......திரு.P. ஐயாசாமி, வரகுபாடி கிராமம், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  10வது படித்திருக்கிறார். வேறு உபதொழிலில் பணத்தை இழந்ததால் இதனை உபதொழிலாக செய்ய விருப்பதாகக் கூறினார். கட்டுரை அளித்த நம்பிக்கை, பயண நேரம், செலவு இவைகளை கணக்கிட்டு மன நெகிழ்ச்சியடைந்தேன். எல்லாவற்றையும் பரிசோதித்து விடை பெறுமுன் தான் தேடி வந்த அம்சங்கள் இருப்பதாகவும், நிறைய தெரிந்து கொண்டதாகவும் கூறியவுடன் எனது மனம் திருப்தி அடைந்தது. கட்டுரையின் வெற்றி நிறைய அன்பர்கள் அலைபேசியில் அழைத்தது மற்றும்  திரு.P. ஐயாசாமி அவர்களின் தேடுதல் பயணமும் தான் என்பதில் சந்தேகமில்லை.

சிக்கனமாய் தொங்கும்  தொட்டிகளுக்கு நீர் ஊற்றுகிறார்
கை பம்பை இயக்கிப் பார்க்கும்  திரு.ஐயாசாமி.
சுற்றுச்சுவர் பையுடன்
அகத்தி, முருங்கையை பைகளில்  வளர்ப்பதை பரிசோதித்தார்

நேர்காணல் கண்ட திரு. ஜி.பழனிச்சாமி அவர்களுக்கும், நேர்த்தியான புகைபடங்களை எடுத்த திரு.தி. விஜய் அவர்களுக்கும், பிரசுரம் செய்த பசுமை விகடன் ஆசிரியர் குழுவினருக்கும் பொங்கல் வாழ்த்துகளுடன் கூடிய நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.

 

Saturday, January 5, 2013

கால்நடைக் கதிர் - இரு மாத இதழ்துறை வாரியாக பத்திரிக்கைகள் வெளி வரும் இக்காலக் கட்டத்தில் கால்நடைக்களுக்கென்று "கால்நடைக் கதிர்" என்ற இரு மாத இதழை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. வெளியிடுகிறார்கள். மாறிவரும் இச்சுழலில் விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் இத்துறைக்கு தொழில்நுட்பம் சார்ந்த பத்திரிக்கை வருவது துறையின் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். அதே சமயம் பத்திரிக்கையின் வளர்ச்சிக்கு மக்களின் ஆதரவு அவசியம் தேவை. எனவே பத்திரிக்கை நம் இல்லம் தேடிவர கீழ்கண்ட முகவரிக்கு வங்கி வரைவோலை The Director of Extension Education, TANUVAS, CHENNAI-51  என்ற பெயரில் எடுத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி இதழ்களைப் பெறலாம் அல்லது வசிக்கும் ஊரிலுள்ள பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்கள், உழவர் பயிற்சி மையங்களை தொடர்பு கொண்டு சந்தா செலுத்தி இதழ்களைப் பெறலாம்.

ஆண்டுச் சந்தா ரூ 50.00   ரூ. 100.00
ஆயுள் சந்தா   - ரூ400.00   ரூ. 1000.00

விலாசம்:
ஆசிரியர்
கால்நடைக் கதிர்
பேராசிரியர் மற்றும் தலைவர்
கால்நடை உற்பத்தி மற்றும் மேலாண்மைத் துறை
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி
சென்னை - 600 007