Saturday, January 23, 2010

12 வருடங்களில் 1,99,132 விவசாய தற்கொலைகள்

நம் நாட்டில் 1997-2008 வரை 1,99,132 விவசாய தற்கொலைகள் (NCRB). 2008 ஆண்டு மட்டும் 16,196 பேர். முக்கிய தற்கொலை மாநிலங்களான மகாராஷ்ட்ரா, ஆந்திரபிரதேஷ், கர்நாடகா, மத்தியபிரதேஷ், சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களில் மாத்திரம் 10,797 பேர் (66.6%) 2008 ஆண்டு தற்கொலை செய்துள்ளனர்.
Source : Mr. P.Sainath in The Hindu/Cbe dated January 22, 2010

1992 - 2009 வரை சுமார் 18 ஆண்டுகளில் கணக்கில் வந்த ஊழல் தொகை ரூ.7300000,00,00,000 (ரூபாய் எழுபத்திமூன்று லட்சம் கோடி) என “ஆவ்ட் லுக்” (Out look ) நவம்பர் 25, 2009 இதழை பார்த்தபோது பிரமிப்பு ஏற்பட்டது. வருட வாரியாக ஊழலையும் அதன் தொகையினையும் வெளியிட்டுள்ளனர். அத்தோடு அத்தொகை கொண்டு நாட்டிற்கு என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதனையும் குறிப்பிட்டுள்ளனர். கணக்கில் வராத தொகை ???? மேலும் ஆங்கிலத்தில் படிக்க : http://www.outlookindia.com/article.aspx?262842

200 வருட காலனி ஆதிக்க சுரண்டல், கடந்த 18 ஆண்டுகளில் மட்டும் ரூபாய் எழுபத்திமூன்று லட்சம் கோடி ஊழல், இவ்வளவையும் இந்த நாடு தாங்கி கொள்ளமுடிகிறதென்றால் இயற்கையும், இறைவனும் நம் நாட்டிற்கு நிறையவே செய்திருக்கிறார்கள். வளமான விவசாய நாட்டில் இவ்வளவு தற்கொலைகள் என்றால் தவறு எங்கே நடக்கிறது ???


மிக சாதாரண விஷயங்களை அலசி ஆராய்ந்து பார்க்கும் தமிழ் வலைப் பூக்களின் உலகம் ஏனோ மிக முக்கியமான இந்த வாழ்வாதார பிரச்சனையில் மௌனம் சாதிப்பது ஏன் என்று தெரியவில்லை. உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டம் மூலம் தெரிவித்தீர்கள் என்றால் நலமாக இருக்கும்.

Thursday, January 21, 2010

முடிவுக்கு வந்த “ புழுதி நெல் சாகுபடி”

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு. குறள் 1038


மேலே இருக்கும் குறள் எங்களது புழுதிநெல் சாகுபடிக்கு 100% பொருந்தியது. மிகச்செழிப்பாக வந்த நெற்கதிர்களை தேசிய பறவை மயில் முழுவதுமாக உணவாக்கிக் கொண்டது என்பதுதான் நிதர்சனமான உண்மை. மாதிரி சாகுபடிக்கு கொடுத்த விலை கூடுதல்தான் இருந்தாலும் கற்றுக் கொண்ட அனுபவம் நிறைய உள்ளது. பயிர் பாதுகாப்பு என்பது எவ்வளவு முக்கியமானது ?

மிருகங்களுக்கு உயிர்வேலி, மின்வேலி, சுற்றி குழியெடுத்தல் என்று செய்யலாம் பறவைகளுக்கு ? அதுவும் தேசீயப் பறவைக்கு ? ஆலோசனை தேவை.

சென்ற 3 ஆண்டுகளாகத்தான் மயில்கள் இங்கு (சற்று மலைபிரதேசம்) சமவெளி பகுதியிலிருந்து வந்துள்ளன. ஆனால் இந்த பகுதியிலுள்ள யானை போன்ற மிருகங்கள் சமவெளி பகுதிக்கு சென்று பயிர் நாசத்தில் இறங்கியுள்ளன. ஆராயப்பட வேண்டிய இட மாற்றம்.

மொத்தத்தில் பயிர் பாதுகாப்பு (மயிலிடமிருந்து மட்டும்) திருமதி. வாஞ்சி பாட்டி போன்று கொடுத்தால் சிறப்பான பயிர் “ புழுதி நெல்.”
நன்றாக தூர்கள் கிளைத்து வந்தது.
நெற்கதிர்களும் நன்கு வந்தது.
ஆனால் மிஞ்சியது என்னவோ வைக்கோல் மட்டும் தான். உபயம் மயில்.
பாதுகாப்பு தந்து அறுவடையில் மகனுடன் திருமதி. வாஞ்சி பாட்டி.
காவலுடன் கூடியஅயராத உழைப்பு.
நெல் மணிகள்.

பழைய பதிவுகளைக் காண.

http://maravalam.blogspot.com/2009/02/blog-post.htmlhttp://maravalam.blogspot.com/2009/09/blog-post_19.html
http://maravalam.blogspot.com/2009/12/blog-post_31.html

Saturday, January 16, 2010

எளிதாக தொட்டிகளில் செடி வளர்க்க...

நகர விவசாயத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டியது கழிவுகளை மறுஉபயோகம் செய்து நமக்கு தேவையான செடிகளை எளிதாக வளர்ப்பது. நீர் தேவை மற்றும் பராமரிப்பு குறைந்த, மொட்டை மாடியில் வளர்க்க ஏற்ற இந்த யூபோர்பியா (Euphorbia) பூ செடியை தென்னைமட்டையை ( பொதுவாக நகரங்களில் வீட்டில் தென்னை மரம் இருந்தால் மட்டையை அகற்ற நாம் கஷ்டபட வேண்டி வரும் . இங்கு அதற்கு ஒரு உபயோகம்)சிறு துண்டுகளாக வெட்டி தொட்டியின் அடியில் அடுக்கி பின் வழக்கமாக போடும் மண், மண்புழு உரம் போட்டு வளர்க்க அழகிய பூக்கள் விரைவில் கிடைக்கும். தென்னைமட்டை நீரை உறிஞ்சி வைத்துக் கொள்வதால் இடத்தைப் பொறுத்து 4 - 7 நாட்களுக்கு ஒரு முறை நீர் ஊற்றினால் போதும். நிறம், பூக்களின் அளவு இவைகளை பொறுத்து நூற்றுக்கு மேற்பட்ட வகைகள் யூபோர்பியாவில் உண்டு. தொட்டியும் அதிக எடையின்றி இருப்பதால் எளிதாக இட மாற்றம் செய்யலாம்.
தொட்டியின் அடியில் தென்னைமட்டையின் சிறு துண்டுகளை நார் பகுதி மேல் இருக்குமாறு அடுக்குதல்.3 மாதங்களுக்கு முன் நடப்பட்ட செடி நிறைய பூக்களுடன்.

Wednesday, January 6, 2010

வால்பாறை அக்காமலை கிராஸ் ஹில்ஸில் எனது இளமைகால அனுபவம்.

அழகிய தோற்றம் "மஞ்சு " இல்லாமல்
திரு. C.R. ஜெயபிரகாஷ் அவர்கள் மின்னஞ்சிலில் வால்பாறை அக்காமலை கிராஸ் ஹில்ஸின் அற்புதமான புகைபடங்களை அனுப்பி சுமார் அரை மணிநேரத்திற்கு மேல் என்னை 35 வருடங்களுக்கு பின்னநோக்கி செல்ல வைத்து மகிழ்ச்சியான அதே சமயம் மரண பயத்தையும் தந்த அந்த “டீன்” பருவதிற்கு என்னை அழைத்து சென்றதற்கு அவருக்கு எனது மனமார்ந்த நன்றி.

Good Friday அன்று அக்காமலை கிராஸ் ஹில்ஸின் உச்சி என்று நம் பார்வையில் படும் பகுதியில் சிலுவை வைத்திருப்பார்கள் வருடதில் Good Friday அன்று மட்டும் நிறைய மக்கள் அந்த சிலுவை மரத்தை நோக்கி பக்தி பயணம் மேற்கொள்வார்கள். அந்த நாளை நண்பர்கள் தேர்ந்தெடுத்தோம். அக்காமலை பகுதிக்குச் சென்று ஒற்றையடி பாதையில் சுமார் 3 மணிநேரப் பயணம். செல்லும் பாதையின் அருகே சோலா வன பகுதி.
இடையில் மேற்குமலை தொடர்ச்சிக்கே உரித்தான இந்த “சோலா வனப்பகுதி”. யானையின் பிளிரும் ஓசை. ஒரு வழியாக மேலே சென்றதும் மகிழ்ச்சியில் சிலுவைக் குன்றை தாண்டி அடுத்தடுத்து 6 அல்லது 7 சிறுகுன்றுகளை தாண்டியிருப்போம்.
ஆழமற்ற கோனலாறு
இடையே கோனலாற்றுத் தெளிந்த நீரை பருகி விளையாடி மகிழ்ந்ததில் வழி மறந்து விட்டது. எந்த பக்கம் பார்த்தாலும் ஒரே மாதிரி குன்றுகள்.
இதே போன்று சுற்றிலும் இருந்தால் எதனை அடையாளமாக வைப்பது.
ஏதேனும் ஒரு குன்றின் மீது ஏறி நின்று சிலுவையை இலக்காக வைத்து வழியை கண்டு பிடித்துவிடலாம் என்று நடக்க ஆரம்பித்தோம் மனித நடமாட்டமற்ற பகுதி சுமார் 2 மணியிருக்கும் திடீரென “மஞ்சு” வந்து சூழ்ந்து கொண்டது. 6 அடிக்கு அப்பால் உள்ளவர்களின் குரல் கேட்கிறது. ஆனால் உருவம் தெரிவதில்லை. அவ்வளவு நேரம் ரசித்த இயற்கை ஏனோ பயத்தை அளித்தது. மஞ்சு விலகினால் மாத்திரமே திரும்ப முடியும். 30 நிமிடம், 1மணிநேரம் மஞ்சு விலகவே இல்லை. சரி இத்துடன் ஆயுள் முடிந்துவிட்டது. குளிரில் நடுங்கி இறக்கத்தான் வேண்டும் என்ற நிலையில் 11/2 மணிநேரம் கழித்து மஞ்சுமூட்டம் கலைந்து தூரத்தில் இருந்தவை தெரிந்தன. பொதுவாக பகல் 2 மணிக்கு மேல் வழக்கமாக பெய்யும் கோடை மழையை அனுபவமின்மை காரணமாக கணக்கிட மறந்து சற்று தூரம் சென்றது தவறாகப் போய்விட்டது. எப்படி கீழே இறங்கினோம் என்றே தெரியவில்லை. வீட்டிற்கு வந்தவுடன் காய்ச்சல் வேறு வந்துவிட்டது. ஓய்வு விடுதி.
ஆனாலும் இன்றும் அந்த இடத்திற்கும் கோனலாறு ஓய்வு விடுதிக்கும் செல்லவேண்டும் என்ற ஆசையுள்ளது. ஆனால் நேரம்தான் அமையவில்லை.

அன்பர்களே உலகின் “Hotspot” என்று அழைக்கப்படும் முக்கிய இடங்களில் இந்த “புல்வெளியும், சோலா வனப்பகுதியும்” ஒன்று.
தீபகற்ப இந்தியாவின் மேல்நிலை தொட்டி ( Over Head Tank ).
இதுதான் தீபகற்ப இந்தியாவின் மேல்நிலை தொட்டி ( Over Head Tank ). மழைக் காலங்களில் நீரை ஸ்பான்ச் போன்று உறிஞ்சி வருடம் முழுவதும் நமக்கு தண்ணீரை தருகிறது. அதன் பரப்பளவு குறைந்து வருவது தென் மாநிலங்களுக்கு நீர் பற்றாக் குறையை ஏற்படுத்தும். கீழ்கண்ட திருக்குறளை உங்கள் சிந்தனைக்கு தந்து இந்த அரிய வகை காடுகளை காப்பாற்றுவது என்பது நமது வாழ்வதாரத்தை காப்பாற்றுவது போலாகும் எனவே இக்காடுகளை காப்பாற்றுவோம்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

Monday, January 4, 2010

சுரபாலர் அருளிய விருட்ச ஆயுர்வேதம் - 1000ஆண்டுகளுக்குப் பின் தமிழில்.

இந்த அற்புதமான நூல் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் சுரபாலர் அவர்களால் சம்ஸ்கிருதத்தில் எழுத்துருவம் பெற்றது. பின்னாட்களில் கிழக்கிந்திய கம்பெனியின் மூலம் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மொழி பெயர்க்கப்படாமல் சுமார் 200 ஆண்டுகள் இருந்தது. பின் டாக்டர். நளினி சதாலே அவர்களால் 1996 ஆண்டு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதன் தமிழாக்கத்தை இயற்கை விஞ்ஞானி..ஆர்.எஸ். நாராயணன் மொழிபெயர்த்து 2005 ஆண்டு வெளியிட்டிருக்கிறார். திரு. ஆர்.எஸ். நாராயணன் அவரது மாடித்தோட்டத்தில்
அதிலிருந்து சில பாடல்கள்

பத்து புத்திரர்களைப் பெற்று
அவர்கள் செய்யும் தந்தைக் கடன்களை விட ஐந்து
மரங்கள் நட்டு அவை வழங்கும்
இலை, மலர், கனிகள், மேலானவை.
பாடல் எண் :5

பத்து கிணறுகள் ஒரு குளத்திற்குச் சமம்
பத்து குளங்கள் ஒரு ஏரிக்குச் சமம்
பத்து ஏரிகள் ஒரு புத்திரனைத் தருவதற்கு சமம்
பத்து புத்திரர்கள் ஒரு மரத்திற்குச் சமம்
பாடல் எண் :6

இந்தப் பூமியில் மரங்களே மனிதனுக்கு
எல்லையில்லா மகிழ்ச்சியை வழங்கும்.ஏனெனில்
அவை நம்மைக் கொடிய வறுமையிலிருந்து காப்பாற்றுகின்றன.
அவ்வாறு காப்பாற்றுவதால் “ த்ரவஹ” (ரட்சகர்) என்று
மரங்களை அழைக்கிறோம்.
ஆகவே, மரங்களை வளர்க்கவேண்டும்.
பாடல் எண் :97

மரங்கள் பூத்துக் காய்க்காவிட்டால்
எள், பார்லி, கொள்ளுடன் உளுந்தும் பாசிப்பயிறும்
கலந்த குளிர் நீரை மண்ணில் இட்டால்
மரங்கள் பூத்துக்குலுங்கிக் கிளைகள் பெருக்கும்.
பாடல் எண் :215

புத்தகத்தின் சிறப்பு சம்ஸ்கிருத சுவடியின் மூலமும் அச்சிடப்பட்டிருப்பது. 323 பாடல்கள் உள்ளது. இது தவிர குணபஜலம், E.M, பஞ்சகாவியம் என பழைய, புதிய நுண்ணுயிர் பெருக்க தொழில் நுட்பங்களும் விவரிக்கப்பட்டுள்ளது. மொத்ததில் விவசாய்களிடம் அவசியம் இருக்கவேண்டிய தொழில் நுட்பங்கள் நிறைந்த நமது பாரம்பரிய விவசாயத்தை விளக்கும் நூல். எழுத்துருவம் பெற்று 1000 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் கிடைக்கிறது. இயற்கை விவசாயத்திற்கு மாறும் அன்பர்களுக்கு உபயோகமான நூல். இந்த நூலை ஆதரவற்ற குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஆசிரியர் அர்ப்பணித்துள்ளார்.

கிடைக்குமிடம்.
திரு. ஆர்.எஸ். நாராயணன்
5/47 B சவுந்தரம் நகர் அம்பாத்துரை,
காந்திகிராமம் அஞ்சல்
திண்டுக்கல் 624 302
தொலைபேசி : 95451- 2452365

Saturday, January 2, 2010

தமிழகத்தில் மரம் வளர்ப்பு : பகுதி -2

சட்டங்களும், திட்டங்களும்.

8. இந்தியாவிலேயே தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “வனங்களுக்கு வெளியே மரம் வளர்ப்பு” TREE CULTIVATION IN PATTA LANDS (TCPL) திட்டதின் கீழ் மரநாற்றுக்கள் தந்து வளர்ப்பதற்கு ஊக்க தொகையும் வனத்துறை மூலம் விவசாயிகளுக்கு தருகிறார்கள். மாவட்ட வனதுறையின் விரிவாக்க அலுவலகத்தை அணுகவும்.


9. “தேசீய புதுமை வேளாண்மை திட்டத்தின்” கீழ் வனக்கல்லூரி மேட்டுப்பாளையம், விவசாயிகள், கடனுதவிக்கு வங்கிகள், ஒப்பந்த முறையில் அறுவடையை வாங்க கம்பெனிகள் என்று தமிழகத்தில் மர வளர்ப்பு ஊக்கப்படுத்தப்படுகிறது. வன கல்லூரி மேட்டுப்பாளையம் 641 301 அணுகவும்.


10. மிக வேகமாக வளரும் மூங்கிலை தேசீய மூங்கில் இயக்கத்தின் கீழ் தமிழக அரசின் தோட்டக்கலை துறை மூலமாக மானியத்துடன் விவசாயிகள் வளர்க்க ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். http://dacnet.nic.in/nbm/


11. தமிழகத்தில் நன்கு வளரும் புங்கன், புன்னை போன்றவை “ப்யோ-டீசலாகவும்” வேம்பு இயற்கை பூச்சிக்கொல்லி தாயாரிக்கவும் பயன்படுகிறது. எண்ணை தரும் வெளிநாட்டு மரமான சொர்க்கமரமும் தமிழகத்தில் நன்கு வளர்கிறது. எதிர்காலத்தில் எண்ணை மரங்களுக்கு மதிப்பு உண்டு.


12. நமது மாநில மரமான “கற்பகதரு” பனை மரத்திற்கு வாரியம் ஏற்படுத்தி பனை மரத்தை வளர்க்க உதவுகிறார்கள். மேலும் தொடர்பிற்கு : வேளாண்மை பல்கலைகழகம் (கோவை)


13. இரண்டு பெரிய காகித ஆலைகள் தமிழகத்திலுள்ளது இவைகளுக்கு வேண்டிய கச்சாப் பொருள் மரம். அவைகளை ஒப்பந்த விவசாயம் மூலம் வளர்க்கவும்,வாங்கவும் தயாராகவுள்ளனர்.


14. மரத்துண்டுகள், மரக்குச்சிகள், மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் கம்பெனிகள் தமிழகத்தில் ஆரம்பித்துள்ளனர்.எனக்கு தெரிந்த ஒரு கம்பெனியின் ஆண்டுத் தேவை சுமார் 40,000 டன் (உலர்ந்தது).


15. நாட்டின் 80% தீக்குச்சிகள் தமிழகத்தில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு மாத உற்பத்திக்கு 10,000 டன் மரம் தேவை. அவைகள் 80% கேரளாவிலிருந்தும் 3% கர்னடாகாவிலிருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது. தற்சமயம் வெளிநாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்கு தேவையான பீதணக்கன் மரம் தரிசுநிலத்தில் நன்கு வளரக்கூடியது என்பது தமிழகத்திற்கு சாதகமானது. எனது பழைய பதிவு : http://maravalam.blogspot.com/2008/06/blog-post_27.html


16. உலகின் மிக விலையுயர்ந்த மரங்களில் சந்தனமரம் சிறப்புப் பெற்றது. அதனை தனியார் நிலங்களில் வளர்க்க தமிழகத்தில் சட்டங்கள் தளர்த்தப்பட்டு ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். http://www.forests.tn.nic.in/graphics/tn_forest_act_and_sw_act_GOs2.pdf


17. அழிவின் விளிம்பில் இருக்கும் அசோகமரம் (Asoka saraka), அரிய, விலை மிக்க செஞ்சந்தனம் (Pterocarpus santalinus L. ), குமிழ் போன்ற தென்னிந்தியாவில் நன்கு வளரும் மரங்களை நாம் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு தரவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. இதற்கும் தேசீய மருத்துவ தாவரங்கள் வாரியத்தின் மூலம் மானியம் தருகிறார்கள் . http://nmpb.nic.in/

Friday, January 1, 2010

தமிழகத்தில் மரம் வளர்ப்பு : பகுதி -1

1. தமிழகத்தின் வனப் பரப்பு 17.59% தான் உள்ளது. இருக்க வேண்டிய பரப்பளவு 33% 2. தமிழகத்தில் 7 வேளாண்மை தட்ப வெப்ப மண்டலங்கள் இருப்பதால் அதிக வகையான மரங்களை வளர்க்க இயலும்.

3. மழையளவு தமிழகத்தில் சுமார் 950 mm அளவிலேதான் கிடைக்கிறது. அதனை சிக்கனமாக பயன்படுத்தி மர வளர்ப்பில் ஈடுபட்டால் நிறைய தரிசுநிலங்களை உபயோகப்படுத்த முடியும்.

4. மரங்கள் அதிகமாக அதிகமாக மழையளவு அதிகரிக்கும். மண்ணரிப்பு குறைந்து நிலத்தடி நீர் உயரும். விவசாயம் செழிக்கும். நீருக்கான அண்டை மாநில தகராறுகள் குறையும்.

5. 1,000+ கி.மீ நீளமுள்ள கடற்கரை இருப்பதால் அலையாத்திக் காடுகளை உண்டாக்கினால் கடலரிப்பிலிருந்து நிலபரப்பை காப்பதோடு சுனாமி போன்ற இடர்களை எளிதில் சமாளிக்கலாம். கடலோர நிலத்தடி நீர் உப்பு நீராய் மாறுவதை குறைக்கலாம்.

6. புவிவெப்பத்தின் காரணமாக அதிகரிக்கும் வெப்ப உயர்வால் தானிய உற்பத்தி பாதிக்கப்படும். அதனைக் குறைக்க மரம் வளர்க்கப்பட வேண்டும்.(உலக சராசரி வெப்பதில் சுமார் 1டிகிரி c உயர சுமார் 10% இந்திய கோதுமை உற்பத்தி பாதிக்கபடும் என்று டாக்டர்.M.S.சாமிநாதன் கூறுகிறார்.)

7. விவசாயத்திற்கு ஆட்கள் பற்றாகுறை இருப்பதால் மரவளர்ப்பு அந்த குறையை போக்கும்.
படங்கள் உதவி : வலைதளம் படம் 1 இல் 17.4% என இருக்கும். அதிக வேறுபாடு இன்மையால் படம் எடுத்துக் கொள்ளபட்டது.