Sunday, September 28, 2008

“உயிர் நிழல் 2008....” கானுயிர் புகைபடக் கண்காட்சி.

இந்த அவசர உலகில் எல்லோராலும் வன உயிர்களை காண்பதற்கென்று நேரம் ஒதுக்கியோ அல்லது அதன் வாழ்விடத்திற்கு சென்று பொறுமையுடன் காத்திருந்து காணவோ முடிவதில்லை. அக்குறையை போக்க இந்தியாவின் தலைசிறந்த 20 க்கும் மேற்பட்ட கானுயிர் புகைபட வல்லுனர்கள் உயிரைக்கூட சமயங்களில் பணயம் வைத்து எடுத்த புகைபடங்களை “உயிர் நிழல் 2008....” மூலம் நம் கண்களுக்கு விருந்தளிக்கவுள்ளனர்.

கோவையின் ஓசை சுற்றுச்சுழல் அமைப்பு 2002 ஆம் ஆண்டு முதல் கானுயிர் புகைபடக் கண்காட்சியை மிக சிறப்பாக நடத்திவருகின்றனர். இவ்வாண்டும் இக்கண்காட்சி புகைப்படங்களுடன், தினமும் ஆவணப்படங்கள் திரையிடல், அறிஞர்களுடன் கலந்துரையாடல்,, புலிகளின் வாழ்கை பற்றி சிறப்பு பகுதி, மாணவர்களின் பங்களிப்பு என இயற்கையை புரிந்து கொள்ள நம்மை அழைக்கிறது.

இடம்: கோவை வ.உ.சி. பூங்கா (VOC PARK)
நாள் : 03-10-2008 முதல் 12-10-2008 வரை.

கானகம் சென்று கானுயிர்களை காணாவிட்டாலும், நமது உற்றார், உறவினர்களுடன் குறிப்பாக குழந்தைகளுடன் சென்று இக்கானுயிர் புகைபட கண்காட்சியை காண இவ்வலைப் பூ உங்கள் அனைவரையும் அழைக்கிறது.

Tuesday, September 23, 2008

வெட்டிவேர் “நெட்பாட்” முறை பற்றி சில தகவல்கள்.

வெட்டிவேர் “நெட்பாட்” முறை பற்றி முன்பே எனது அனுபவத்தை எழுதியிருக்கிறேன். மேலும் தகவல் வேண்டுமென நிறைய அன்பர்கள் விளக்கம் கேட்டபதால் இப்பதிவை உங்கள் முன் வைக்கிறேன்.


பொதுவாக சிம்பு (Slips) முறையில் நடலாம். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதும், நடுவதும் மிக எளிது. எனவே வேலையாட்கள் கூலி அதிகமாவதில்லை. ஆனால் புதிய குருத்து வரும் வரை மண் ஈரமாக இருக்கவேண்டும். பொதுவாக 100% செடிகளின் வளர்ச்சி கிடைப்பதில்லை.


பாக்கெட் முறையில் அதிக இடம் இருப்பதால் வேர்கள் நன்கு வளர்ந்து இருக்கும் 100% செடிகளின் வளர்ச்சி உண்டு. இதிலுள்ள குறைகள். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வது சற்று கடினம். வாகனங்கள் தேவைப்படும். மேலும் குழியெடுத்து நடவேண்டியிருப்பதால் அதிக செலவாகும்.

நெட்பாட் முறை இக்குறைகளை தவிர்க்கிறது. எடுத்துச் செல்வதும், நடுவதும் எளிது. வேர்கள் நன்கு இருப்பதால் 100% செடிகளின் வளர்ச்சி உண்டு. கூரியரில் (Courier) கூட வெளியூர்களுக்கு எளிதாக அனுப்பலாம். எனவே செலவு குறைவு. நடுவதும் மிக எளிது. சிறு கடப்பாறை கொண்டு 5” அல்லது 6” ஆழத்திற்கு துளைசெய்து நெட்பாட்டை அதனுள் வைத்தால் போதும். என் அனுபவத்தில் வேம் VAM ( Vesicular Arbuscular Mycorrhizas ) என்னும் வேர் பூஞ்சானத்தை 2 - 5 கிராம் குழியினுள் இட்டு பின் நாற்றை நட வளர்ச்சி விரைவாகவும் மிக நன்றாகவும் இருக்கின்றது.
கிராம்புறங்களில் நீர்மேலாண்மை மற்றும் மரவளர்ப்பில் ஈடுபட்டிருக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு ( NGO )வெட்டிவேரும் இந்த “நெட்பாட்” முறையும் நீண்ட கால அடிப்படையில் நன்கு பயன்தரும். கரிம வாயுவை நிலைப்படுத்துவதில் (carbon sequestration) இதன் பங்கு நன்றாகவுள்ளது. TVNI யின் தகவலையும் கீழே தருகிறேன்.

Monday, September 15, 2008

வீணாக்கப்பட்ட உணவு என்பது வீணடிக்கப்பட்ட நீர் ஆகும்:- சில உண்மைகள்.

சில நாட்களுக்கு முன் நண்பர் ஒருவரின் வீட்டுத் திருமணத்திற்கு சென்றிருந்தேன். திருமணம் மிக விமரிசையாக நடந்தது. மணமக்களை வாழ்த்திவிட்டு நண்பருடன் உணவருந்த சென்றேன். வந்த விருந்தினர்கள் நன்கு விருந்துண்ண வேண்டுமென பல வகை உணவு பதார்த்தங்களை மிக நேர்த்தியாக தயாரித்திருந்தனர். ஆனால் 10% - 20% உணவுப் பொருட்கள் வீணாக்கப்படுவதை கண்டு நண்பரும் வருந்தினார். அவர்கள் உணவை மாத்திரம் வீணாக்கவில்லை கூடவே அதன் உற்பத்திக்கான நீர், உழைப்பு, உரம், போக்குவரவு அனைத்தையும் வீணாக்குகின்றனர்.

இந்த உணவுப்பொருட்களுக்குப் பின்னால் அதனை உற்பத்தி செய்ய ஆகும் நீரை ஆங்கிலத்தில் Virtual Water என அழைக்கின்றனர். (Virtual Water is The quantity of water used in the production process of an agricultural or industrial product.) அதனை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல மற்றும் சமைக்க ஆகும் “எரிசக்தி ” அப்பொருளின் அல்லது உணவின் மறைந்திருக்கும் எரிசக்தியாகும் (Hidden fuel). பின் அதனை சமைக்க கூலி என நிறைய செலவுகள் உண்டு. இவ்வளவும் அறிந்தபின் அதனை வீணாக்குபவர்களை என்னவென்று சொல்வது ????? குறிப்பாக கடந்த 5 - 10 ஆண்டுகளில் இந்திய மத்திய வர்க்கத்தின் வாங்கும் சக்தி அதிகரித்த பின் இப்போக்கு இளைய தலைமுறையினரிடம் மிக அதிகளவில் நடைபெறுகிறது. கண்டிக்கப்பட வேண்டிய செயல்.

SIWI (Stockholm International Water Institute) தகவல்படி உலகில் சுமார் 850 மில்லியன் மக்கள் பசியாலும் பட்டினியாலும் வாடுகின்றனர்.

ஆனால் சுமார் 1.2 பில்லியன் மக்கள் அதிக எடையாலும், உடற்பருமனாலும் அவதிப்பட்டு சர்க்கரை மற்றும் இருதய நோய்களுக்கு ஆளாகின்றனர். அமெரிக்காவில் வீடுகளிலிருந்து வீணாக்கப்படும் 30% உணவின் மதிப்பு 48.3 பில்லியன் டாலர்கள் ஆகும். அதற்குப் பின்னால் மறைந்திருக்கும் நீரை (Virtual Water) சுமார் 40 டிரில்லியன் லிட்டர் என கணக்கிட்டுள்ளனர்.

இந்த “வெர்சுவல் வாட்டர் ” முறையை உலகிற்கு உணர்த்தியவர் “கிங்ஸ் கல்லூரி ”, லண்டன் பேராசிரியர். ஜான் அந்தோணி அலன் ஆவார். அவருக்கு 2008 ஆண்டு ஸ்டாக்ஹோம் வாட்டர் பரிசு (Stockholm Water Prize-2008) வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதிலுள்ள உண்மை என்னவென்றால் கீழ்கண்ட அளவுப்படி நீங்கள் 2 லிட்டர் தேங்காய் எண்ணையை அரபுநாடுகளுக்கு அனுப்புகிறீர்கள் என்றால் 44,000 லிட்டர் நீரை (வெர்சுவல் வாட்டர்) அனுப்புவதாகக் கொள்ளலாம். மேலை நாடுகள் இந்த முறையை பயன்படுத்தி வெர்சுவல் வாட்டர் ஏற்றுமதி, இறக்குமதி பற்றி கணக்கிட ஆரம்பித்துவிட்டனர். அதற்கேற்ப அவர்களால் பயிர் முறையை மாற்றி நீர் சேமிப்பு செய்ய இயலும். நாம் என்ன செய்யப்போகிறோம் ???? நீர் அதிகம் தேவைப்படும் நெல், கரும்பு, வாழை, தென்னை என பயிரிட்டு நிலத்தடி நீரை காலிசெய்ய போகிறோமா ? அல்லது அண்டை மாநிலங்களுடன் நீருக்கு சண்டையிடப் போகிறோமா ? நீர் தன்னிறைவு அடைய வனங்களை மேலும் உருவாக்கி இயற்கை தரும் மழை நீரை சேமித்து அதற்கேற்ற பயிரை சொட்டுநீர் மூலம் விளைவித்து சாதனைகள் செய்யப் போகிறோமா ?


ஒவ்வொரு உணவுப் பொருட்களுக்கும் தேவைப்படும் நீரின் அளவு.

நெல்...................1 கிலோ........2,400 லிட்டர்
அரிசி.................1 கிலோ........3,400 லிட்டர்
நிலகடலை.........1 கிலோ........3,670 லிட்டர்
சர்க்கரை............1 கிலோ........1,850 லிட்டர்
பருத்தி...............1 கிலோ........3,000 லிட்டர்
பஞ்சு..................1 கிலோ........9,000 லிட்டர்
கோழியிறைச்சி...1 கிலோ........3,900 லிட்டர்
மக்காச்சோளம்...1 கிலோ...........900 லிட்டர்
கோதுமை...........1 கிலோ.........1,300 லிட்டர்
க.எண்ணெய்......1 லிட்டர்........13,000 லிட்டர்
நல்லெண்ணெய்..1 லிட்டர்.........8,000 லிட்டர்
தெ.எண்ணெய்....1 லிட்டர்........22,000 லிட்டர்
காபி....................125 ml..............140 லிட்டர்
டீ.........................250 ml.............30 லிட்டர்
ரொட்டித்துண்டு...1.......................50 லிட்டர்
வாழைப்பழம்......1......................40 லிட்டர்

இந்த “வெர்சுவல் வாட்டர் ” உங்கள் கையில்.!!!!!!!!!! ஆம் வீணடிப்பதும் சேமிப்பதும் உங்கள் கையில்.!!!!!!!!!!

Source: Wtc,TNAU, வலைதளம்.
படங்கள் உதவி : வலைதளம்.