Showing posts with label மரம். Show all posts
Showing posts with label மரம். Show all posts

Saturday, October 19, 2013

மரப்பயிர் காப்பீட்டுத் திட்டம்.



 
மாநில திட்டக்குழு துணைத் தலைவர் அவர்களால்  திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.

 இன்றைய விவசாய சுழலில் மரம் ஒரு காப்பீடாக தமிழக உழவர் பெருமக்களை காத்து வந்தது. “தானே” புயலுக்குப் பின் அந்த நம்பிக்கையும் கேள்விக்கிடமானது. பல்வேறு தொழிற்சாலைகளுடன் ஒப்பந்த சாகுபடியை அறிமுகம் செய்து தமிழகத்தில் மரப் பரப்பையும் விரிவாக்கி, உழவர் பெருமக்களையும் அரவணைத்த வனக்கல்லூரி, மேட்டுப்பாளையம் இம்முறையும் ஆபத்தபாந்தவனாக வந்து இந்த காப்பீட்டுக்கு ஒரு காப்பீடு  திட்டத்தை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் மூலம் இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் 11-10-2013 அன்று அறிமுகபடுத்தினர். மாநில திட்டக்குழு துணைத் தலைவர் அவர்களால் மேட்டுப்பாளையத்தில் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. தற்சமயம் மரம் சார்ந்த தொழில்களுக்கான 7 மரங்களுக்கு இந்த மரப்பயிர் காப்பீட்டுத் திட்டம் பயனளிக்கும்.

மரத்தின் பெயர்கள்
  1. சவுக்கு
  2. தைல மரம்
  3. மலை வேம்பு
  4. பெருமரம்
  5. குமிழ் மரம்
  6. சுபாபுல்
  7. சிசு மரம்.
எந்தெந்த வகையான விபத்துகளுக்குக் காப்பீடு
1.      தீ, புதர் தீ மற்றும் காட்டுத் தீ
2.      இடி/ மின்னல்
3.      கலகம்
4.      சூறைக்காற்று, புயல், சுழற்காற்று
5.      தண்ணீரில் மூழ்குதல்
6.      வன விலங்குகளினால் சேதம்.
 
இன்சூரன்ஸ் செய்யும் மதிப்பு
ஒரு குறிப்பிட்ட மரப்பயிர் 1 ஏக்கரில் பயிரிட ஏற்படுபம் அதிகபட்ச செலவுக்கான தொகையே இன்சூரன்ஸ் செய்யப்படும் தொகையாகும்.

காப்பீட்டுத் திட்டத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் செலவினங்கள்.
1.      நிலம் உழுதல்
2.      நாற்றுக்களின் மதிப்பு
3.      நீர் பாய்ச்சுதல்
4.      உரமிடுதல்
5.      களையெடுத்தல்
6.      மற்ற பயிர் பாதுகாப்பு செலவுகள்
7.      மற்ற தேவையான செலவுகள்

இன்சூரன்ஸ் கட்டணம்
ஒரு ஆண்டுக்கு இன்சூரன்ஸ் செய்யப்படும் மொத்தத் தொகை 1.25% (ரூ.100க்கு ரூ1.25 ) ப்ரிமியம் செலுத்த வேண்டும். இது அடிப்படை இன்சூரன்ஸ் தொகையாகும். இத்துடன் விரிவான காப்பீட்டில்  குறிபிட்ட பூச்சிகளினால் மற்றும் நோய்களினால் ஏற்படும் இழப்பையும்  இன்சூரன்ஸ் செய்ய மொத்த ப்ரிமியம் ரூ 1.60% செலுத்த வேண்டும். சேவை வரி கூடுதலானது.

மேலும் விபரங்கள் பெற
அருகிலுள்ள
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் அலுவலகம்

அல்லது 

வன கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
கோத்தகிரி சாலை,
மேட்டுப்பாளையம். 641 301
தொலைபேசி எண்: 04254-222010.

Source : யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்டின் சுற்றறிக்கை

Saturday, February 23, 2013

விரைவாக மரங்களை உருவாக்கும் திரு.அர்ஜுனன்.


திரு.அர்ஜுனன்.
அண்மையில் கோவையில் நடைபெற்ற மரமேளாவில் மரங்களை கிராமம் கிராமமாக வினியோகம் செய்யும் அசாதாரண மனிதர் ஒருவரை அறிமுகப்படுத்தினார்கள். திருநெல்வேலி – விருதுநகர் தொடர் வண்டிகளில் டீ, காபி வியாபாரம் செய்த 42 வயது நிரம்பிய திரு.அர்ஜுனன். தனது மகனின் மறைவால் தவித்துக் கொண்டிருந்தவருக்கு தொடர் வண்டியில் பயணம் செய்த பெரியவர் ஒருவர் முற்பிறவி பாவம், இப்பிறவி தவறுகள் மரங்களை நட்டால் மன்னிக்கப்படும் என்று கூற, சரியெனப்பட்டதால் தீவிரமாக சற்று வித்தியாசமான மரவளர்ப்பில் ஈடுபட்டுள்ளார். விதை மூலம் மரமாக வளர பல ஆண்டுகள் ஆகும். ஆனால் 6 அடி மரக்கிளைகளை வெட்டி (போத்துமுறையில்),  ஒரு சிமெண்ட் கோணிப்பையில் மண் நிரப்பி மரங்களாக உருவாக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார் திரு.அர்ஜுனன்.  விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், மரக்கிளைகளை வெட்டி நடப்படுவதால் 90 நாட்களிலேயே நிழல் தரும் மரமாக வளர்ந்து தனது பணிகளைச் செய்கிறது. கிராம பஞ்சாயத்துகள் மூலம் வேர் விட்ட மரபோத்துக்களை கிராமங்களுக்கு இலவசமாகக் கொடுக்கவும் தனிநபர்கள் என்றால் பயிற்சி தர தயாராக இருப்பாதாகவும் கூறுகிறார் திரு.அர்ஜுனன். இயற்கை சேவையில் ஈடுபட்டிருக்கும் இவரை பற்றி பதிவிடுவதில் இவ்வலைப் பூ மகிழ்ச்சி கொள்வதோடு இவரை பயன்படுத்தி மேலும் தமிழகத்தை பசுமைபடுத்த உங்களை கேட்டுக் கொள்ளுகிறது.

தொடர்புக்கு :
திரு.அர்ஜுனன்
அலைபேசி: 97903 95796
www.chepparaivalaboomigreenworld.com

Tuesday, September 4, 2012

அசோகமரம்- அழிவின் விளிம்பில் இருக்கும் பாரம்பரிய மரம்


அசோகமரமும் நெட்டி லிங்கமும்


பெயர்                  : அசோகமரம்
தாவரவியல் பெயர்     :   Saraca asoca
ஆங்கிலப் பெயர்       : Asoka Tree
தற்போதைய நிலை  : அழிவின் விளிம்பு                                                                                IUCN   Status : Vulnerable (IUCN 2.3) 
பாரம்பரிய இந்திய அடையாளங்களில் ஒன்று அசோகமரம். அசோகமரம் என்றவுடன் பொதுவாக நம் நினைவிற்கு வருவது நெட்டிலிங்க மரம் தான். இராமாயன காலத்தில் சீதையை அசோக வனத்தில் சிறை வைத்ததாக படித்திருக்கிறோம். ஆனால் காலப்போக்கில் அந்த உண்மையான மருத்துவ குணமிக்க அசோகமரத்தை விட்டு நெட்டிலிங்கத்தை அசோகமரம் என்று பின்வரும் சந்ததிகளுக்கு  அடையாளப்- படுத்திவிட்டோம். விளைவு இன்று நெட்டிலிங்கத்தை  அசோகமரம் என்று பெரும்பாலானவர்கள் நம்பிக் கொண்டிருப்பது வேதனை தரும் விஷயம்.                        
அசோகமர விதைகள்
அசோகமர பூக்கள்
 பெண்களுக்கான மரம். இதன் பட்டையும் மலர்களும் நமது மருத்துவத்தில் பயன்படுகிறது. பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறு, சூதகவலிக்கு பட்டையை கஷாயம் செய்து அருந்த குணம் உண்டு என இந்திய மருத்துவ நூல்கள் கூறுகின்றன
அசோகமர காய்கள்
அசோகமரம்


இதன் தற்போதைய நிலைமை அழிந்துவரும் இனத்தில் விளிம்பு நிலையில் உள்ளது. இம்மரம் சோகத்தை மாற்றி அசோகத்தை (மகிழ்ச்சியை) தரும் என்பது வழக்கு. மன்மதனின் மலர்கணையில் உள்ள மலர்களில் இதுவும் ஒன்று. கண்டிப்பாக ஒவ்வொரு பெண்கள் படிக்கும் கல்விநிலையங்களில் இருக்க வேண்டிய மரம் அசோகமரம். வீடுகளிலும் வளர்க்கலாம். 
அசோக மர நாற்றுக்கள்

Monday, May 21, 2012

முள்ளு சீதா (Graviola ) புற்றுநோய்க்கு எளிய வைத்தியம் !!!!

முள்ளு சீதா (Graviola )

பெயர்                : முள்ளு சீதா
தாவரவியல் பெயர்   : Annona muricata
மற்ற பெயர்கள்      :  Graviola
                       Soursop,
                       Brazilian Paw Paw,
                       Guanabana.
மாற்று மருத்துவத்தில் மக்கள் கவனம் செலுத்த ஆரம்பித்தவுடன் நிறைய உபயோகமான செய்திகள் வலைதளங்களின் மூலம் பிரபலமாகி வருகிறது. தற்சமயம் முகநூலில் மிகப் பிரபலம் “ஃக்ரவயோலா” என்று அழைக்கப்படும் முள்ளு சீதா.  அமேசான் காடுகளில் இந்த பழத்தை பழங்குடியினர் பல்வேறு நோய்களை குணப்படுத்த உபயோகித்தனர். ஒரு பன்னாட்டு நிறுவனம் மில்லியன் டாலர்களில் பொருட்செலவு செய்து புற்றுநோய்க்கு இப்பழத்தை உபயோகப்படுத்தி தீர்வு கண்டதாகவும் பின் அதனை காப்புரிமை பெற முடியாததால் ஆய்வை விரிவுபடுத்தாமல் கைவிட்டதாகவும் பின்பு ஆய்வு செய்த விஞ்ஞானிகளில் ஒருவர் இதனை வெளியுலகிற்கு அறிவித்ததாகவும் ஒரு மாற்று மருத்துவ நூலில் படித்தேன். கர்ப்பகாலத்தில் இதனை அருந்தக் கூடாது என்கிறார்கள். தொன்றுதொட்டு பழக்கத்தில் உள்ள மருத்துவ மரமென்றாலும் சிலர் இதனை அதிகம் சாப்பிடக்கூடாது பக்க விளைவுகள் உண்டு என்கிறார்கள்.
பழத்தின் நீள் வெட்டுத் தோற்றம்

இருப்பினும் நவீன மருத்துவ முறையில் “கிமோ தெரப்பி” என்னும் சிகிச்சைக்கு பின் உடனடி பக்க விளைவுகள் மற்றும் செலவு இவைகளை கணக்கிட்டால் தொன்றுதொட்டு பழக்கத்தில் உள்ள “முள்ளு சீதா” நன்று  என்றே தோன்றுகிறது.
நன்கு வளர்ந்துள்ள முள்ளு சீதா
இம்மரம் அமேசான் காடுகளில் வளரும் ஒரு சிறுமரம். இதன் பட்டை, இலை, பழம் எல்லாவற்றையும் மக்கள் நோய்களை குணமாக்க பயன்படுத்துகின்றனர். பழங்கள் உற்பத்தி குறைவு என்பதாலும் இலைகளிலும் நோய் தீர்க்கும் குணம் இருப்பதால் இதனை பதப்படுத்தி ‘டீ’ போன்று அருந்துகின்றனர். மற்ற நாடுகளில் வியாபார ரீதியாக விற்பனையில் உள்ளது.
வீட்டில் நன்கு வளர ஆரம்பித்துள்ள முள்ளுசீதா

தற்போதைய உணவு பழக்கம் அளவிற்கு மீறிய இரசாயன மருந்து மற்றும் உரங்கள் இவை புற்று நோய்க்கு வழிவகுக்கின்றது. இதனை குறைப்பதற்கு மாற்று மருத்துவத்தில் வழி உண்டு என்பதை பரம்பரை ஞானமும் விஞ்ஞானமும் சொல்கிறது. எடுத்துக் கொள்வதும், விட்டுவிடுவதும் அவரவர் கையில் உள்ளது.
பதப்படுத்திய ஃக்ரேவையோலா ‘டீ’



Saturday, May 19, 2012

பப்பாளி - வீட்டுத் தோட்டதிற்கு ஏற்ற பழ மரம்.

 
பெயர்              : பப்பாளி
தாவரவியல் பெயர் : CARICA PAPAYA 

வெப்பமண்டல நாடுகளில் எளிதாக வளர்க்கப்படும் பழமரம். நல்ல மகசூல் தரும் 2 அல்லது 3 ஆண்டு பயிர். ஆனால் தற்சமயம் மாவுப் பூச்சி(Mealy Bug ) தாக்குதலால் இதன் விவசாயப் பரப்பு வெகுவாக குறைந்து விட்டது. வைரஸ் நோய் தாக்குதலும் உண்டு. பூர்வீகம் மெக்ஸிகோ என்றாலும் எல்லா வெப்பமண்டல நாடுகளிலும் வீட்டுத் தோட்டத்தில் விரும்பி வளர்க்கப்படுகிறது. வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கும் போது பழத்திற்கான வகைளை வளர்ப்பது நல்லது.
பழத்தில் மாவுப் பூச்சியின் தாக்குதல்

இலைகளிலும்  மாவுப் பூச்சியின் தாக்குதல்

 வணிக ரீதியாக வளர்க்கும் போது கவனம் தேவை காரணம் பழத்திற்கான வகைகளும், "பப்பையின்" எனப்படும் பப்பாளி பால் தரும் வகைகளும் உண்டு. பூசா (Pusa)  விவசாய கல்லூரியின் ரகங்கள், வேளாண்மை கல்லூரி, கோவையின் ‘கோ’ ரகங்கள், பெங்களூரு ரகங்கள் பெண்ட்நகர் ரகங்கள் பிரபலம். தற்சமயம் தைவான்நாட்டு ரகமான ‘ரெட்லேடி’ (Redlady (F-1 Hybrid)  நகர்புற மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது. 10 கிராம் விதையின் விலை ரூ.1600/=க்கு மேல். பப்பாளி பால் எடுக்க கோ.2 கோ.5 மற்றும் கோ.6 ரகங்கள் ஏற்றவை. 
ஒரு அடிக்கு மேல் நீளமுள்ள பழம்

நன்கு வளர்க்க நீர் தேங்காத நல்ல வடிகால் வசதியுள்ள மண் வேண்டும். மேலும் பப்பாளியில் ஆண்மரம், பெண்மரம் மற்றும் இருபால் மரங்கள் உண்டு. இதனையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இரத்த விருத்திக்கும், தசை வளர்ச்சிக்கும் துணை புரியும் பப்பாளி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மிகுதியாக்குகிறது. மலச்சிக்கல் நீக்கும்.  பப்பாளி காயை சமைத்து உண்டு வந்தால் உடல் எடை குறையும். பழசாற்றை நன்கு முகத்தில் பூசி சில நிமிடங்கள் கழித்து கழுவ முகப் பொலிவு கிடைக்கும். பப்பாளி பால் மருந்து, அழகுசாதனப் பொருட்கள், உணவுப் பொருட்கள், மாமிசம் பதப்படுத்துவதிலும் பயன்படுகிறது. பப்பாளிகாய்  டூட்டி ஃபுரூட்டி தயாரிப்பில் அதிகம் பயன்படுகிறது. பழம் ஜாம் தயாரிக்க பயன்படுகிறது.

Saturday, April 28, 2012

வெண்நுணா (நோனி) – சர்வரோக நிவாரணி


தாவரவியல் பெயர் : Morinda Citrifolia
தமிழ் பெயர்        : வெண்நுணா,
மற்ற பெயர்கள்     : இந்தியன் மல்பெரி
  மாற்று மருத்துவத்தில் மக்கள் ஆர்வம் காட்டி வருதால் சில எளிய மருத்துவ முறைகளும், சில தாவரங்களும் தற்சமயம் பிரபலமாகி வருகின்றது. அந்த வரிசையில் இந்த வெண்நுணா என்னும் நோனி முக்கியத்துவம் பெறுகிறது. மிக நீண்ட நோய் பட்டியலை வெளியிட்டு குணம் கிடைக்கிறது என்று விளம்பரம் செய்கிறார்கள். உண்மையும் உண்டு. இது மருந்தல்ல சத்துள்ள பானம்.   ஹவாய் மற்றும் தகத்தி தீவு போன்ற பகுதிகளின் நோனி பழச்சாறு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவிலும் இப்பழச் சாறு கிடைக்கிறது. 4 இலக்கத்தில் விலை உள்ளது. பொதுவாக கடற்கரை பகுதிகளில்தான் வரும்  என்று நம்பப்பட்ட இம்மரம் உள்நாடுகளிலும் நன்கு வளர்கிறது. சற்று துர்வாசம் தரும் இப்பழத்தை சாறு எடுப்பதற்கு பதிலாக இலையை கீரையாக உட்கொண்டாலும் பலன் உண்டு என கூறுகிறார்கள்


பரவலாக தமிழகத்தில் காணப்படும் “மஞ்சநத்தி”  என்று அழைக்கப்படும்  Morinda Tinctoria வும் இக்குடும்பத்தைச் சார்ந்ததே ஆனால் பல்வேறு நாடுகளில் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு அதிக  மருத்துவ குணம் உடையது என வெண்நுணாவை தேர்ந்தெடுத்துள்ளனர். “உணவே மருந்து மருந்தே உணவு” என்ற கொள்கையில் நாம் வெண்நுணாவை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்

Wednesday, March 21, 2012

உலக வன நாள் -2012


வனங்களை வயலாக்கிய நாம் இன்று வயல்களை
வனமாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

சுற்றுச்சூழல் நன்மைகள் தவிர வணிக நோக்கிலும் மரங்களை வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பொதுவாக தமிழகம் மரம் சார்ந்த தொழில் மற்றும்  தொழிற்சாலைகளை (நெறிபடுத்தப்பட்ட Organized Sector ) கொண்டுள்ளது.  ஆனால் இவைகளுக்கான கச்சாப் பொருளான மரம் பெரிய அளவில் கிடைப்பதில்லை (உ..த ) தீக்குச்சிக்கான மரத்தை நாம் அண்டை மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் சுமார் 80% அளவில் இறக்குமதி செய்கிறோம். ஆனால் நமக்கு சாதமான சூழ்நிலைஇருப்பதால் நாம் நன்கு மரம் வளர்த்த இயலும். வனபரப்பையும் அதிகரிக்க முடியும். அதற்கான சிறு அறிமுகமே இந்தப் பதிவு. பதிவின் சுருக்கம் கருதி தொடுப்புகள் அளித்திருக்கிறேன்.

தமிழகத்தில் வாய்ப்புக்ககள்.

காகிதம்
தமிழகத்தில் இரு தொழிற்சாலைகள் சிறப்பாக காகித உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. இரு தொழிற்சாலைகளுமே நாற்றுக்கள் கொடுப்பதிலிருந்து குறைந்தபட்ச விலை நிர்ணயத்துடன் வாங்கிக் கொள்கிறார்கள். இவைகள் தவிர  சிறுசிறு  நிறுவனங்கள் நிறைய உண்டு.

தமிழ்நாடு காகித ஆலை (TNPL)  கரூர் அருகே

சேஷாயி பேப்பர் அண்டு போர்ட்ஸ்
தொலைபேசி எண்கள் : (04288) 240221-240228

தீக்குச்சி தொழிற்சாலைகள்
தமிழகத்தின் சிறப்பு தீக்குச்சி தொழிற்சாலைகள் என்றால் மிகையில்லை. வங்கிக் கடனுடன் நாற்றுக்களும் தந்து மரங்களை வாங்கவும் செய்கிறார்கள் வாசன் நிறுவனம்.

எரிசக்தி (பயோ-மாஸ் எரிசக்தி )
கடந்த சில ஆண்டுகளாக மரம் மற்றும் விவசாயக் கழிவுகள் மூலம் மின் உற்பத்தி பரவலாக தொடங்கப்படுகிறது. இதுவரை 14 நிறுவனங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். தற்போதுள்ள மின்தட்டுப்பாட்டில்  தமிழகத்திற்கு மிகத் தேவையான துறையாக தோன்றுகிறது.

பயோ-டீசல்
மானியத்துடன் ஜெட்ரோபா என்னும் காட்டாமணுக்கு இந்தியாவில் பிரபலபடுத்தப்பட்டது. ஆனால் சிறப்பானதொரு வரவேற்பைப் பெறவில்லை என்று தோன்றுகிறது. ஆனால் புங்கன் மற்றும் புன்னை மரங்களிலிருந்து பெறப்படும் எண்ணெயும் பயோ-டீசலாக உபயோகிக்க முடியும் என்று வனத்துறையும், தனிநபர்களும் நிருபித்துள்ளனர். ஆனால் இத்துறை நெறிபடுத்தப்படவில்லை என்பது வருத்தம் அளிப்பதாக உள்ளது. நாட்டின் அந்நிய செலவாணி மிச்சப்படுத்தப்பட வேண்டுமானால் இத்துறை கவனிக்கப்பட வேண்டும்.

மரம் சாரா மற்ற வனப்பொருட்கள்
நெறிபடுத்தப்படாத துறை என்று கூறலாம். ஆனால் உணவு, மருந்து, பிசின்,விதை, இலை (பீடி) பட்டை, பூ, நறுமணப் பொருட்கள், இயற்கைச் சாயம் என்று ஏராளமான பொருட்கள் இதில் அடங்கும். வனவாசிகளின் வாழ்வாதாரம் ஒருபுறமிருக்க வனக் கொள்கை மறுபுறமிருக்க நெறிபடுத்தினால் மாத்திரமே இத்துறை மிக செழிப்பாக வளரும்.

Monday, February 27, 2012

மரம் வளர்ப்போர் விழா 2012

 மரம் வளர்ப்போர் விழா 2012 - மாண்புமிகு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சுழல் அமைச்சர் திருமதி. ஜெயந்தி நடராஜன் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. “தானே” புயலால் பாதிக்கப்பட்ட மர விவசாயிகளுக்கு உதவ சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக அறிவித்தார். மேலும்  வனமரபியல் மற்றும் இந்திய மரப்பெருக்கு நிறுவன விஞ்ஞானிகளின் புதிய ஆராய்ச்சி நூல்கள் மற்றும்  இரு உயிர் உரங்களை வெளியிட்டார். இதனை தொடர்ந்து விஞ்ஞானிகள் தங்களின் உழைப்பை  படவிளக்கங்களுடன் கூறினார்கள். இன்னும் கூடுதல் நேரம் அளிக்கப்பட்டால் விவசாயிகள் எளிதாக புரிந்து கொள்ள வசதியாக இருக்கும். சவுக்கு மர சாகுபடி மூலம் மின்உற்பத்தி படவிளக்கம் இன்றைய தமிழகத்தின் அத்தியாவசிய தேவையை உணர்த்தியது. மரவிவசாயிகளும், தொழில் முனைவோரும் அமர்ந்து தங்களுக்குள் முடிவெடுத்து செயல்படுத்தவேண்டிய தருணம் இது

விவசாயிகளின் அமர்வில் மரம், மூங்கில் இவற்றின் வளர்ப்பு மற்றும் சந்தைபடுத்துவதிலுள்ள பிரச்சனைகள் உணர்ச்சிவயப்பட்டு அழுகையின் விளிம்பிற்கு சென்றது மனத்தை உருக்குவதாக இருந்தது. ஆனால் அதிகாரிகள் அதற்கான தீர்வுகளை உடனே கூறியது ஆறுதலாக இருந்தது.
ஒவ்வொரு வருடமும் தமிழகத்தை புயல் தாக்குவது வாடிக்கையான நிலையில் அலையாத்திக் காடுகளின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு விவசாயிகளிடத்தில் சென்றடைய வேண்டியது அவசியமாகிறது. வரும் வருடங்களில் அது நிறைவேறும் என்று எண்ணுகிறேன்.



தூரத்திலிருந்தே மரத்தை அளக்கும் கருவி பச்சை புள்ளிகளை கவனிக்கவும்.

வழக்கம் போல் கண்காட்சி பயனுள்ளதாக இருந்தது. இம்முறை மூங்கிலில் மதிப்புக் கூட்டிய வேலைப்பாடுகள் நிறைந்த பொருட்கள் மனதைக் கவர்ந்தது. மரத்தின் தரம் மற்றும் பருமனை அளக்க உதவும் கருவிகள் பயனுள்ளதாக இருந்தது.
காகிதம், ஒட்டுப்பலகை, தீக்குச்சி, பென்சில், எரிசக்தி மூலம் மின்சாரம், பயோ-டீசல் என்று தொழிற்சாலைகளுக்கு தேவையான கச்சாப்பொருள் மரம்தான்  என்று கூறினால் அது மிகையில்லை.

Tuesday, February 21, 2012

மரம் வளர்ப்போர் விழா, கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் - 2012

வனம் அழிந்தால்? மனித இனம் அழியும்.
இன்றைய காலத்திற்கு தேவையான மரம் சம்பந்தபட்ட விழா. கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை வனமரபியல் மற்றும் மரபெருக்கு நிறுவனம் – கோவை, ,தமிழக அரசின் வனத்துறை இணைந்து இம்மாதம் 23 - 24 தேதிகளில் அளிக்கவுள்ளனர். அவசியம் அனைவரும் கலந்து கொண்டு பசுமை பாரதமாக மாற்ற நம்மால் இயன்றதை செய்வோம். குறிப்பாக பெரிய அளவில் தரிசுநிலம் வைத்திருப்போர், பெரிய கல்விநிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் என்று நிச்சயமாக கூறலாம். திரளாக வந்து கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளுகிறேன்.
மரம் நடுவோம், மழை பெறுவோம், வளம் பெறுவோம்


Sunday, September 18, 2011

இன்று உலக மூங்கில் தினம்.


 உலக மூங்கில் தினம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 18 தேதி கொண்டாடப்படுகிறது. உற்பத்தியில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது  இடத்திலும் உள்ளன. ஆனால் உலக வர்த்தக அளவான  $ 10 பில்லியன் தொகையில்  சீனா சுமார் 50% பங்கை பெற்று முன்னணியிலுள்ளது. 2015 ஆண்டுகளில் இதன் அளவு $20 பில்லியனாக உயரும் எனவும், தற்போதைய உள்ளூர் வர்த்தகம் ரூ.6505 கோடி எனவும் அது 2015 ஆண்டில் ரூ.26,000 கோடியாக வளர வாய்ப்புள்ளதாகவும்    இந்திய விவசாயதுறை  அமைச்சகம் கூறுகிறது. மூங்கிலை பச்சைத் தங்கம், ஏழைகளின் மரம், வனவாசிகளின் வாழ்வதாரம், மற்ற மரங்களைக் காட்டிலும் அதிக கரிமில வாயுவை எடுத்துக் கொண்டு அதிக பிராணவாயுவை வெளியேற்றும் என்கிறோம். ஆனால் மூங்கில் வளர்ப்பில் எந்த அளவிற்கு முன்னேறியிருக்கிறோம் ?
தமிழ் நாட்டில் சாதாரணமாக காணும் காட்சி.
 வருத்தம் தரும்  அளவிற்குத்தான் உள்ளது. உபயோகம் சுமார் 1500க்கு மேலிருந்தாலும் தமிழகத்தில் மூங்கில் வளர்ப்பை ஏனோ மக்கள் விரும்புவதில்லை. இன்னும் கூடை, ஏணி, தடுப்பு போன்ற சாதாரண நிலையிலேயே மூங்கில் உபயோகம் உள்ளது. மற்ற மாநிலங்களில் நிலைமை மேம்பட்டுள்ளது. நாற்காலி, மேசை, ஒட்டுப் பலகை. ஜன்னல் மறைப்புகள்  என முன்னேற்றம் உள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் சுயுதவிகுழுக்கள் செய்யும் பொருட்கள்
 வடகிழக்கு மாநிலங்களில் பள்ளிக்கூடங்களை மூங்கிலைக் கொண்டு கட்டுகின்றனர் என்பது மகழ்ச்சி தரும் செய்தி.
வடகிழக்கு மாநிலங்களில் மூங்கிலால் உருவாக்கப்பட்ட பள்ளிகள்
 உலக அளவில் தரை, சுவற்றிற்கான ஒட்டுப் பலகை, கூரை கூட மூங்கிலில் செய்கின்றனர் என்பது வியப்பிற்கான ஒரு செய்தியாகும். ஐரோப்பாவின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான  ஸ்பெயின் நாட்டின் “மார்டிரிட்” நகர விமான நிலைய T 4 பயணிகள் பகுதியின் கூரையை மூங்கிலால் செய்துள்ளனர். இயற்கை இந்தியாவிற்கு கொடுத்த கொடை “மூங்கில்”. எப்படி முன்னெடுத்துச் செல்லப் போகிறோம் ?? மத்திய அரசாங்கம் “தேசீய மூங்கில் இயக்கம்” (National Bamboo Mission) என்ற இயக்கத்தின் மூலம் பிரபலப்படுத்துகிறது வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது நம் கையில்தான் உள்ளது
மூங்கிலால் செய்யப்பட்ட திரை மறைப்புகள் மற்றும் தரைப் பலகைகள்.
            மூங்கில் கூரையில் “மார்டிரிட்” நகர விமான நிலைய T 4 பயணிகள் பகுதி

மேலதிக தகவல்களுக்கு :
தேசீய மூங்கில் இயக்கம் 

படங்கள் உதவி : Mr. EcoBabu and Internet

Friday, July 8, 2011

எரிசக்தி மரவளர்ப்புத் திட்டம்


மின்சாரம் இன்றைய வாழ்வு முறையில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்ட நிலையில் அதனை சுற்றுசுழலை பாதிக்காத வகையில் உற்பத்தி செய்வதுதான் அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் உதவியாக இருக்கும். அந்த வகையில் காற்றாலை, சூரியஒளி, கடல் அலை போன்றவை பிரபலம். தற்சமயம் தாவரக் கழிவுகளை எரிசக்தியாக பயன்படுத்தி மின்உற்பத்தி செய்து நமது மின்சார தேவையை பூர்த்தி செய்ய நிறுவனங்கள் முன் வந்துள்ளனர். “தூய்மையான சக்தி” என்பதால் இதனை நாம் ஊக்குவிக்க வேண்டும். இதனை உற்பத்தி செய்ய மரதுண்டுகள் மற்றும் விவசாய கழிவுகள் வேண்டும். 07- 07- 2011 அன்று வனகல்லூரி மேட்டுப்பாளயம் வளாகத்தில் இதுதொடர்பான ஓப்பந்தம் ஆரோ மீரா எனர்ஜி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கும் வனக்கல்லூரிக்குமிடையே  இடையே நடைபெற்றது. இதன்படி எரிசக்தி திறன் நிறைந்த மர வகைகளை தேர்வு செய்து தரிசு நிலங்களில் வளர்க்க தேவையான நாற்றுக்கள் மற்றும் தொழில் நுட்பங்களை  வனக்கல்லூரி விவசாய்களுக்கு தரும்.  விளைந்ததை எரிசக்தி நிறுவனம் வாங்கிக் கொள்ளும். வங்கிக்கடன் வசதியும் இருக்கும் என தெரிவித்தனர். எனவே இது நான்குமுனை கூட்டு முயற்சி. தமிழகத்தில் இதுபோன்று 14 மின்உற்பத்தி நிலையங்கள் செயல்படுகின்றன என்பது உபரித் தகவல்.

தூய்மையான சக்தி, தரிசு நிலமேம்பாடு, மரங்களின் பரப்பு அதிகரிப்பு, நீர் பற்றாக்குறை, வேலையாட்கள் பற்றாக்குறை, அதிகரித்து வரும் மின்தேவைக்கும், மின்பற்றாக்குறைக்கும் தீர்வு என பல நன்மைகள் இருப்பதால் விவசாய அன்பர்கள் இவைகளை கருத்தில் கொண்டு செயல்படுத்தலாம்.

மேலும் விபரங்கள் அறிய :
வன கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
கோத்தகிரி சாலை,
மேட்டுப்பாளையம். 641 301
தொலைபேசி எண்: 04254-222010.
=============================================
ஆரோ மீரா எனர்ஜி பிரைவேட் லிமிடெட்
ஆரோமீரா ஹவுஸ்
ப.எண் 11, புதிய எண்29 ஷஃபி முகமது சாலை,
ஆயிரம் விளக்கு
சென்னை-600 006.
தொலைபேசி எண் :044- 28209800