Friday, April 24, 2020

தவசி கீரை

பொதுவாக வருடம் முழுவதும் பெண்களிடையே கீரைகள் பற்றிய விழிப்புணர்வு அதிகம் இருக்கும் ஆனால் அவை வீட்டுத் தோட்டதில் வளர்ப்பதில் சில சிக்கல்கள் உண்டு. காரணம் அவை மிக குறுகிய காலத்தில் வளர்ச்சி பெற்றுவிடும். பின் திரும்பவும் விதைகள் வாங்கி வளர்க்க வேண்டும். ஆனால் குற்றுச் செடியாகவோ அல்லது சிறு மரங்களாகவோ இருந்தால் பராமரிப்பு குறைவு.   குறைந்தது 3 அல்லது 4 எண்ணிக்கையில் இருந்தாலே போதுமானது. வருடம் முழுவதும்  நமக்கு கீரை கிடைக்கும்.

தாவரவியல் பெயர்   Sauropus androgynus

தமிழ் பெயர்                  தவசி கீரை

மற்ற பெயர்கள்            மல்டிவைட்டமின் கீரைபிரஷ்ஷர் கீரை.                                                                                                                            
சுமார்  6 அடி வரை வளரும் இந்தக் கீரையைப்  பச்சையாகவும் உண்ணலாம். அனைத்துச் சத்துக்களையும் நமக்கு  தருவது தவசி கீரையாகும். அனைத்து வைட்டமின்களும் தவசி கீரையில் இருப்பதால் இதனை  மல்டி  வைட்டமின் கீரைஎன்றும் அழைக்கின்றனர்.  இக்கீரையின் இலைகளைப் பொரியலாகவும்,  பயறு வகைகளுடன் சேர்த்து கூட்டும் செய்யலாம். தனியாகக் கடையவும்  செய்யலாம். இதனைபிரஷ்ஷர் கீரைஎனவும் அழைக்கின்றனர். விதை மூலமும் போத்து முறையிலும் நாற்றுக்களை உருவாக்கலாம். இரண்டு அல்லது மூன்று செடிகள் நமது வீட்டுத் தேவையை பூர்த்தி செய்யும்.

Sunday, April 5, 2020

நுனி ஒட்டு மூலம் கத்திரிகாய்


  அநேக பழமரங்கள் மற்றும் சிலவகை காய்கறிகளில் ஒட்டு முறையில் நாற்று உற்பத்தி அதிக அளவில் செய்யப்படுகின்றன. குறுகிய காலத்தில் தரமான உற்பத்திக்கும், நல்ல சுவைக்கும், நோய்தாக்குதல் மற்றும் வறட்சியை தாங்கி வளர்க்கவும் இந்த முறை மிக பிரபலமாகவுள்ளது. 1920களில் ஜப்பான் மற்றும் கொரியா போன்ற நாடுகளில் ஆரம்பிக்கப்பட்டதாக அறியப்படுகிறது. மா, பலா, கொய்யா, எலுமிச்சை, ஆரஞ்சு, சப்போட்டா  போன்ற பழ வகைகளில் ஒட்டு செடிகளே பெரிதும் விரும்பப்படுகிறது. ரோஜாவில் ஒட்டு செடிகளே பிரபலம்.


வீட்டுத்தோட்டத்தில் நுனித் தண்டு மூலம் ஒட்டு செய்வது எளிமையானது. ஒரே குடும்பத்தைச் சார்ந்த இருவேறு செடிகளை .தா. சோலேனம் (Solanum)  குடும்பத்தைச் சார்ந்த வறட்சி மற்றும் பூச்சி தொல்லை குறைவாயுள்ள, மருத்துவ குணமிக்க, நீண்ட காலம் காய்க்கும் சுண்டைக்காயை வேர் பகுதியாகவும் (Rootstock) தண்ணீர் சற்று அதிகம் தேவைப்படும் அதிக பூச்சி தாக்குதலுக்குள்ளாகும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த உணவுப் பொருளான கத்திரிக்காயின் நுனிபகுதியை  (Scion) ஒட்டு இடுவதன் மூலம் அதிக நாட்கள் கொத்துக்கொத்தாய் காய்க்கும், குறைந்த பூச்சிதாக்குதல் கொண்ட கத்தரிக்காய் செடிகளை நாம் பெறமுடியும்.

உருவாக்கும் முறை:


ஒரே பருமனுள்ள சுண்டைக்காய் மற்றும் கத்திரிகாயின் செடிகளை எடுத்துக் கொண்டு வேர்பகுதியாக சுண்டைக்காயின் தண்டை தரையிலிருந்து 1” -2” விட்டு வெட்டவேண்டும் பின்பு அதனை இரண்டாக பிளந்து கொள்ளவேண்டும். கத்தரி செடியிலும் அதேபோன்று வெட்டி இலைப்பகுதியின் அடிபாகத்தில் V போன்று ( Wedge) வெட்டி சுண்டைக்காயின் பிளவில் வைத்து ஒட்டுத்தாள் கொண்டு சுற்றி விடலாம் அல்லது நூல் வைத்துக் கட்டலாம்


 நீர் ஆவியாகுதலைத் தவிர்க்க பெரிய இலைகளை அகற்றிபெட்பாட்டில் கொண்டு மூடி நிழல் பகுதியில் வைக்க வேண்டும். சிறிது நாட்களில் சுண்டைக்காயின் குருத்துகள் தோன்றும் அவற்றை அகற்றிவிடவேண்டும். 15 அல்லது 20 நாட்களில்  கத்தரி செடி நன்கு வளர்ந்திருக்கும்


அவ்வாறு நன்கு வளர்ந்தபின் பாட்டிலை அகற்றி சற்று வெய்யிலில் வைத்து நன்கு வளர்ந்த பின் பெரிய பை/தொட்டிகளில் வைத்து சாதாரணமாக வளர்ப்பதைப் போன்று வளர்க்கலாம். இரண்டு மூன்று மாதங்களில் தரமான அறுவடைக்குத் தயாராகலாம்.கவனத்தில் கொள்ளவேண்டியது

வேர் பகுதியாக (Root stock) உபயோக்கிக்கும் செடியிலிருந்து வரும் குருத்துக்களை வளரவிடக்கூடாது.