Wednesday, July 30, 2008

அலையாத்தி காடுகளின் அறிஞர் திரு.கள்ளன் பொக்கூடன்

26 டிசம்பர் 2004 காலை நேரத்தை தமிழக மக்கள் யாரும் மறந்திருக்க முடியாது. இயற்கை சுனாமியாக வந்து உயிர், பொருள்,சேதத்தை ஏற்படுத்தியது. இன்றளவும் விவசாய நிலங்களை பயிரிட ஏற்றதாக மாற்ற போராடிக் கொண்டிருக்கிறோம். அதே சமயம் அலையாத்தி காடுகள் இருந்த முத்துப்பேட்டை, பிச்சாவரம் பகுதிகள் பாதிக்கப்படாமல் இருந்ததும், பங்களாதேஷை அதிக உயிர், பொருள் சேதமின்றி நவம்பர் 2007 சூறாவளியிலிருந்து காப்பாற்றியதும் அலையாத்தி காடுகள்தான் என்பது வரலாறு. சுந்தரவனக்காடுகள் என்றழைக்கப்படும் மேற்குவங்கம், பங்களாதேஷ் பகுதிகள் தான் உலகின் மிகப்பெரிய அலையாத்தி காடுகள் உள்ள பகுதி. அடுத்தது தமிழகத்தின் பிச்சாவரம் பகுதிகள் என்பது குறிப்பிடதக்கது. திரு.கள்ளன் பொக்கூடன் என்ற இயற்பெயர் இவரது அலையாத்தி காடுகள் பற்றிய அறிவினாலும், 20 வருடங்களாக 10,000 நாற்றுக்களுக்கு மேல் நட்டு பராமரித்ததாலும் அவற்றின் அருமைகளைப் பற்றி பிரச்சாரம் செய்வதாலும் இன்று அவர் திரு.கண்டல் பொக்கூடன் என்று எல்லோராலும் அறியப்படுகிறார். (மலையாளத்தில் கண்டல் என்றால் சதுப்புநிலக்காடுகள் என்று அர்த்தம்.) கேரளமாநிலம், கண்ணூர் மாவட்டம், எழம் கிராமத்தை சேர்ந்த அதிகம் படிக்காத விவசாயக் கூலி என்பது குறிப்பிடதக்கது. 1989 முதல் அவர்களது வாழ்வாதாரமான அலையாத்தி காடுகளின் நலனுக்காக பாடுபடுகிறார். இன்று அலையாத்தி காடுகள் பற்றி அறிந்து கொள்ள உலகின் பல பாகங்களிலிருந்து இவரிடம் வருகிறார்கள். வன துறையுடன் இணைந்து தன்னலமில்லா சேவையை அலையாத்தி காடுகள் பாதுகாப்பிற்காக செய்துவருகிறார். கேரளாவில் 40 வருடங்களுக்கு முன்பு 700 ச.கிமீ அலையாத்தி காடுகளிருந்த இடத்தில் இன்று 17 ச.கிமீ காடுகளே உள்ளது. இவரது சேவையால் அது மேலும் வளர்ச்சிபெறும் என்று நம்பலாம்.

கடற்கரையோரங்களில் அலையாத்தி காடுகள் மூலம் நிலஅரிப்பையும், மலைப்பாங்கான சரிவுப்பகுதிகளில் வெட்டிவேர் மூலம் மண்ணரிப்பையும் தடுப்போம். இவை நீண்ட காலத் தீர்வாக இருக்கலாம். ஆனால் இவைகள் நிரந்தர தீர்வு என்பதை மனதில் கொள்வோம்.

அலையாத்திக்காடுகள் சிறு படத்தொகுப்பு காண்க..
http://www.youtube.com/watch?v=t48NrvwKIx8

அவரது விலாசம்
K Pokkudan
Meenakshi Nilayam
Muttukkandi,
Ezhom Village
Pazhangadi Post - 670 303
kerala
படம் உதவி : வலைதளம்.

Thursday, July 17, 2008

புவி வெப்பம் குறித்த விளம்பரப் படம்.


இத்தாலி நாட்டு விளம்பர கம்பெனி எடுத்துள்ள இந்த விளம்பரப் புகைப்படம் இன்றைய மனிதர்களின் புவி வெப்பம் குறித்த மனநிலையை காட்டுகிறது. உங்கள் கருத்து.??

Source:Grey, Milan, Italy

Saturday, July 12, 2008

மருத்துவ கழிவுகளும், வன உயிர்களும்.

சென்ற வாரம் மலையோர கிராமத்திற்கு சென்றபோது சாலையின் அருகே மருத்துவ கழிவுகள் பாலித்தீன் பைகளில் அடைக்கப்பட்டு அவை வன உயிர்களால் பிரிக்கப்பட்டு சிதறிக்கிடந்தன. உயிர்களை காக்கும் ஒரு மருத்துவமனையின் செயல் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. என் ஆதங்கமெல்லாம் மனிதனுக்கு வியாதி பரவக்கூடாது என்று யாருக்கும் தெரியாமல் மருத்துவ கழிவுகளை அகற்றும் மருத்துவமனைக்கு அதனால் வாய்பேசாத வன உயிர்களை பாதிக்கும் என்று தெரியாதா? அவைகள் வைத்தியத்திற்கு எங்கு செல்லும்? அந்த உயிரினங்களின் வாழ்விடத்தைத்தான் ஆக்கிரமித்து அவைகளின் உணவு,உறைவிடம் இவற்றை அபகரித்து விரைவாக அழிக்கிறோமென்றால், வியாதியையும் தந்து அவைகளை துன்புறுத்த வேண்டுமா? சமுதாயத்தில் இன்று நல்ல வசூல் நடக்குமிடம் மருத்துவமனைகள். இன்னும் கொஞ்சம் கூடுதலாகத்தான் வசூலித்து சரியான முறையில் மருத்துவ கழிவுகள் அழிக்கப்பட்டால் சுற்றுச்சூழலும், நிறைய வனஉயிர்களும், பாதுகாக்கபடுமே!! சிந்திப்போம் !! சுற்றுச்சூழலையும், வன உயிர்களையும் காப்போம்!!

இத்தகவல் யாரையும் குற்றம் காண்பதற்காக எழுதப்பட்டதன்று சுற்றுச்சூழலையும், வன உயிர்களையும், ஏன் நம்மையும் காப்பதற்காக எழுதப்பட்டது.

Wednesday, July 9, 2008

எதிர்பாராத ஒரு ஆச்சரியம் !! வனவிலங்குகளின் இயல்புகள்.

குன்னூர் சென்ற போது காட்டேரி அருகே தேனீர் அருந்த வாகனத்தை நிறுத்தி சாலையின் மேலே பார்த்த எங்களுக்கு எதிர்பாராத ஒரு ஆச்சரியம் !! ஆட்கள் மற்றும் நிறைய வாகனங்கள் செல்லும் அந்த பகுதியில் காட்டெருமைகள் இரண்டு எந்தவித சலனமுமின்றி இயல்பாய் மேய்ந்து கொண்டிருந்தன. நிறைய மக்கள் இதற்காக சரணாலயம் சென்றும் பார்க்காமல் திரும்பும் போது எங்களுக்கு கிடைத்தது அதிர்ஷ்டமே. சுமார் 50 அடி தூரத்தில் 10 நிமிடங்கள் காட்சி தந்த அவைகள் பின் மறைந்து விட்டன. உங்களுக்காக அவைகளை புகைபடமாக பதிவிடுகிறேன்.Sunday, July 6, 2008

மருவத்துவ சேவையுடன் மரத்திற்கும் சேவை.
சென்ற வாரம் கோவை பி.எஸ்.ஜி மருத்துவ மனைக்கு சென்றிருந்தேன். மரங்கள், புல்தரை என மிக நேர்த்தியாக வளாகம் இருந்தது. திரு. அன்பு என்ற ஓவியர் மரம் மற்றும் இயற்கை பற்றி வரைந்திருந்த ஓவியங்கள் அனைவரின் கவனத்தையும் மிகவும் கவர்ந்ததுடன் விழிப்புணர்வு உண்டாக்குவதாகவும் இருந்தது. குறிப்பாக அந்த முதல் படம் இன்றுள்ள மனிதன் மரத்தை வெட்டுவது கண்ணிற்குத் தெரியாத நாளய மனிதனை வெட்டுவதாக சித்தரித்திருந்து அற்புதமாக இருந்தது. அதனை புகைப்படமெடுத்து உங்கள் பார்வைக்கு வைப்பதன் காரணம், இந்த அதிவேக வாழ்கையில் உங்களில் சிலரேனும் மரங்களை நட்டு பாதுகாப்பீர்கள் என்ற நம்பிக்கையில்தான். மரம் நடுவோம், மழைபெறுவோம்

Thursday, July 3, 2008

மரமும் மழையும்.

இருண்ட கண்டம் என்று அழைக்கப்படும் ஆப்ரிக்காவில் காங்கோ நாட்டு கிராமம் ஒன்றில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தை பார்த்ததும் மனதில் ஒரு மகிழ்ச்சி. மிக எளிமையாக வீடுகள் இருந்தாலும் அவர்கள் இயற்கைக்கு அளித்துள்ள முக்கியத்துவம் பாராட்டப்பட வேண்டும். அனைத்து வீடுகளுக்கு முன்பும் நிழல் தரும் மரம். மரத்தடியில் இளைப்பாரும் குடும்பம். மாதம் மும்மாரி பெய்யாமல் விடுமா? என்ன? கண்ணிற்கெட்டிய தூரம் பசுமை.ஆப்ரிக்காவின் டாக்டர். வாங்கரி மாத்தாய் நோபல் பரிசு வாங்குவதற்கு மரமும் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையில்லை. ஆனால் அதே ஆப்ரிக்காவில் சோமாலியா#, எத்தியோப்பியா* போன்ற நாடுகளில் மரத்தை அதிகம் வெட்டியதின் காரணமாக பஞ்சமும் பட்டினிச் சாவும் நடைபெறுவதும் அங்குதான்.

கேரளா சென்றுவிட்டு வந்தால் “எவ்வளவு பசுமையாக உள்ளது அந்த ஊர்கள்” என அங்கலாய்க்கும் உதட்டளவு மனிதர்கள் வந்த ஒரு வாரத்தில் குப்பை விழுகிறது, ,வேர் வீட்டிற்குள் வந்துவிடும், வீட்டின் அழகு மறைக்கப் படுகிறது, வாங்கிய புது கார் வீட்டிற்குள் வர தடையாக உள்ளது, வீட்டிற்கு நிழல் அடித்துவிடுகிறது என ஏதேனும் ஒரு காரணம் கூறி நன்கு வளர்ந்த மரத்தை வெட்டத் துடிப்பதை நினைத்தால் மகிழ்ச்சி போய்விடுகிறது. என்று மரத்தின் பயனை புரிந்து கொள்வார்களோ ? தெரியவில்லை. தென்மேற்கு பருவ மழை துவங்கி 30 நாட்கள் முடிந்தும் தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய அளவு மழை கிடைக்கவில்லை. வருடம் மும்மாரி பெய்தாலே அதிகம் என்ற நிலைக்கு வந்துவிட்டோம். தமிழகத்தின் வனப்பரப்பு 17.5% இருக்க வேண்டிய அளவு 33%. சிந்திப்போம், செயல்படுவோம், மழை பெறுவோம்.

மரங்கள் இல்லையேல் மனிதன் இல்லை.
மனிதன் இல்லையேல் மரங்கள் உண்டு.


*Due to demands for fuel, construction and fencing, at least 77% of the country's tree cover has been cut down in the last 25 years. These have been replaced by plantations of eucalyptus which are soil-depleting.(Source: Lonely Planet Guide)
#It is reported that about 92% of domestic energy requirements in Somalia are dependant upon wood and charcoal fuel source. The impact of the overcutting of desired species for the production of charcoal and harvest of fuelwood has become a very serious issue.
Photos :1. Mrs. Suganya 2. Net