Saturday, July 5, 2014

“கொம்புசா” என்னும் ஆரோக்கிய பானம்

சப்பாத்திக் காளான் (SCOBY )
அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள், இடபற்றாக் குறையுள்ள இடங்களில் வசிப்பவர்களுக்கு காய்கறி வளர்ப்பு  ஒரு கனவு போல் தோன்றும், மனமிருந்தாலும் முடியாத ஒரு நிலை. மாறாக ஒரு சிறிய கோப்பைக்குள் ஒருவகை சப்பாத்தி காளானை SCOBY (Symbiotic Colony Of Bacteria and Yeast) வளர்த்து அதிலிருந்து பெறப்படும் நொதித்த நீரை அனுதினம் பருகி உடல் ஆரோக்கியம் பெறலாம். ஈஸ்ட் மற்றும் பாக்டீரீயா கலந்து நொதித்த பானத்தை “கொம்புசா” என்றழைக்கின்றனர். இந்த கொம்புசா பானத்தை தினமும்  சிறிதளவு அருந்த நீ..ண்..ட… நாட்கள் நோயின்றி மகிழ்ச்சியான வாழ்வு வாழலாம். பலவிதமான நோய்கள் தாக்காமலிருக்கும் என்று ரஷ்யாவில் சைபீரியா பகுதி, மங்கோலியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் நூறு ஆண்டுகளாக்கும் மேலாக  இதனை உபயோகித்து நீண்ட, நோயற்ற மகிழ்ச்சியான வாழ்வு வாழ்ந்ததை பதிவு செய்துள்ளனர். கொம்புசா என்று அழைக்கப்பட்டாலும் “ஈஸ்ட் டீ“, க்ரீன் டீ என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.
கண்ணாடிக் கிண்ணம்

டீத்தூள் மற்றம் சர்க்கரை

உணவு காளான் வளர்ப்பில் தனி குடில் அமைப்புக்கள், ஈரப்பதம், பராமரிப்பு, விதைகாளான், வைக்கோல், பிளாஸ்டிக் பைகள், அதிக முதலீடு, வணிகத் தொடர்பு போன்றவற்றால் எல்லோராலும் எளிமையாக வீட்டிற்குள் வளர்க்க முடியாது. இந்த கொம்புசா காளான் வளர்ப்பில் இடம், குடில்,  அதிக கவனம் போன்றவை தேவையில்லை. உற்பத்தி செய்ய தேவையானவை ஒரு பாத்திரம் (கண்ணாடி அல்லது பீங்கான் கோப்பை சிறந்தது) , “டீ” தூள், சர்க்கரை, தேவையான அளவு தண்ணீர் மற்றும் சப்பாத்தி காளான்.
ஆரம்ப நிலையில் ...

சற்று வளர்ந்த நிலையில்

முதலில் நீரை நன்கு கொதிக்க வைத்து டீ தூள் போட்டு வடிநீர் (Decoction) நன்கு இறங்கிய பின்பு சர்க்கரையை கலந்து கொள்ளவேண்டும். நன்கு ஆறவைத்த பின்பு வட்ட வடிவில் இருக்கும் இந்த சப்பாத்தி காளானை) தாய் காளானிலிருந்து பிரித்து கோப்பைக்குள் இடவேண்டும். ஒரு வாரம் சென்ற பின்பு புதிய காளான் அடுக்கு கீழ் பகுதியில் தோன்றியிருக்கும். தினமும் அந்த காளானால் நொதித்த வடிநீரை பருகிவரலாம். சற்று புளிப்பு சுவையுடையது இந்த பானம் வணிக நோக்கிலும் உற்பத்தி செய்யப்படுகிறது.

  ஒரு வாரம் சென்ற பின்பு மீண்டும் முன்பு செய்ததைப் போன்று வடிநீர் தயாரித்து  மேல் அடுக்கு  காளானை அகற்றி விட்டு கீழ் பகுதியில் தோன்றிருக்கும் புதிய காளானை உபயோகிக்க வேண்டும். புதிதாக வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஆரோக்கியமான முறையில் நாம் செய்கிறோமா என தெரிந்து கொள்ள காளானின் வளர்ச்சி, நிறம் மற்றும் வடிநீரின் மணம் ஆகியவை உணர்த்தும். பொதுவாக பழுப்பு நிறத்தில் காணப்படும் இந்த காளான் நிறம் மாறி கருப்பு, வெள்ளை, பச்சை நிறத்தில் காணப்படும் போது அது கெட்டுவிட்டதாக கொண்டு அதனை அருந்துவதை தவிர்த்து புதிதாக ஆரம்பிக்க வேண்டும்.
புதிய காளான் ஒரு வாரத்தில் கீழ்பகுதியில் தோன்றும்

இரத்த அழுத்தம், மலசிக்கல் நீங்கி நோய் எதிர்ப்பு சக்தி கிடைகிறது. சில தோல் நோய்கள் குணமாகின்றன, சருமத்தின் சுருக்கங்கள் நீங்கி இளமையான தோற்றம் கிடைக்கிறது, புற்று நோயின் தாக்கம் குறைகிறது என்று இதனை அருந்துபவர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டாலும், கொம்புசா பற்றிய அறிவியல் ஆய்வுகள் மிகக் குறைவாக இருப்பதால் அதுபோன்று இல்லை பின் விளைவுகள் உண்டு என கூறுபவர்களும் உண்டு. எனவே இதனை பயன்படுத்துபவர்கள் ஒவ்வாமை தமக்கு ஏற்படுகிறதா? பின் விளைவுகள் தங்களுக்கு ஏற்படுமா ? என ஆய்வு செய்து பின்பு உங்கள் கொம்புசா வளர்ப்பை ஆரம்பியுங்கள். உலகின் பல  நாடுகளில் அனுபவ ரீதியாக இதன் பயனாளிகள் இலட்சக்கணக்கில் நூறு ஆண்டுகளுக்கு  மேலாக  இருந்து வருகிறார்கள்.

No comments: