
அந்த அரசு அலுவலகத்திற்கு செல்லும்போதெல்லாம் வெள்ளை ஆடையணிந்து எல்லோரையும் வரவேற்கும் அவரிடம் மிக பெரிய சோகம் உள்ளது என்பது எனக்கு சென்ற வருடம்தான் தெரியும். இரு வாரங்களுக்கு முன் அந்த அலுவலகத்திற்கு சென்ற போது ஒரு குடும்பம் அழுதபடி அதிகாரியை காண வந்தனர். விசாரித்த போது ‘அவர் ’ இறந்துவிட்டார் என அழுதனர். அழுகையினுடே அவர் மனைவி கூறியது இந்த வியாதி பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே மிக மிக குறைவு. நிறைய மக்களுக்கு இது என்னவென்றே தெரிவதில்லை என்று கூறி விழிப்புணர்வு தரும்படி கேட்டுக்கொண்டார். எந்த நேரத்தில் மரணம் சம்பவிக்கும் என்று சொல்லமுடியாது காரணம் சிறு காயம் ஏற்பட்டால் கூடபோதும் உடனடி சகிச்சை இல்லையேல் மரணம்தான். அவருக்கு திடீரென உடம்பினுள் இரத்தபோக்கு ஏற்பட்டு உறையும் தன்மை இன்மையால் மரணம் ஏற்பட்டது. ஆம் இந்த வியாதியின் பெயர் ஹீமோபீலியா.
ஹீமோபீலியா என்பது இரத்தத்தின் உறையும் தன்மை குறைபாட்டினால் வரும் ஒரு பரம்பரை நோய். இக்குறை உள்ளவர்களுக்கு சிறு காயங்களினாலோ, அடிபடுவதாலோ அல்லது தானாகவோ தொடர்ந்து இரத்தகசிவு ஏற்படும்.
அறிகுறிகள்
தொப்புள் கொடி விழுந்த பின் நிற்காமல் தொடர்ந்து இரத்தம் கசிதல்
உடலில் ஆங்காங்கே நீலநிறத் தழும்புகள் தோன்றும்.
மூட்டுக்களில் குறிப்பாக கால் மூட்டுக்களில் திரும்பதிரும்ப வீங்கி வலித்தல்.
உடலில் காயம் ஏற்பட்டபின், பல் விழுந்தபின் அல்லது பல் எடுத்தபின் மற்றும் பல் ஈறுகளில் இருந்து இரத்தம் கசிதல்.
சிகிச்சை
இந்நோயை குணப்படுத்த முடியாது ஆனால் முறையான சிகிச்சையின் மூலம் கட்டுபடுத்த முடியும். இரத்தம், பிளாஸ்மா, கிரையோபிரிஸிடேட் மற்றும் உறைபொருளை செலுத்துவதன் மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது. சாராசரியாக ஒரு வருடத்திற்கு ஒரு குழந்தைக்கு ரூ.40,000/= செலவளிக்கப்படுகிறது.
ஹீமோபீலியா சொஸைட்டி
இந்தியாவில் 1:10,000 என்ற கணக்கில் நோயாளிகள் இருப்பதாக கண்டறிந்துள்ளனர். இக்குறைபாடு உள்ளவர்களை கண்டறிதல், நோய் மற்றும் சிகிச்சை பற்றி தகவல்களை அளிப்பது, குறைந்த செலவில் சிகிச்சை கிடைக்க செய்வது ஆகியவற்றை குறிகோள்களாக கொண்டு நம் நாடு முழுவதும் சுமார் 63 மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இவர்களுக்கு உதவுவது எப்படி?
ஒரு நபரின் மருந்து மற்றும் மருத்துவ செலவினை ஏற்றுக்கொள்ளுதல்.
அக்குழந்தைகளின் கல்விச் செலவினை ஏற்றுக்கொள்ளுதல்.
பொது இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
எல்லா நன்கொடையாளர்களும் வருமானவரி சட்டம் பிரிவு 80-G இன் கீழ் வரிவிலக்கு பெறுவர்.
மேலும் விபரம் மற்றும் உதவு பெற:-
ஹீமோபீலியா சொஸைட்டி - கோயமுத்தூர் சேப்டர்
29/1 ஜே. பி. ஆர். காம்ப்ளக்ஸ் ( பார்க் மருத்துவமனை அருகில் )
காளப்பட்டி ரோடு,
கோவை - 641 014
தொலைபேசி : 0422 - 2627408
அலைபேசி : 98940 - 98897
மின்னஞ்சல் : hemop@md3.vsnl.net.in
http://www.wfh.org/whd/en/
இயற்கை முறை ஏதேனும் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.