
மதிப்பிற்குரிய துணை ஜனாதிபதி அவர்களிடமிருந்து விருது பெறும் திரு. M.Y. யோகநாதன்.
தனியார்மயம், உலகமயம் என இன்றைய பொருளாதாரம் மனிதனை இயற்கையை விட்டு விலக வைத்து எல்லாமே பணம் என்கின்ற அளவு கோலினால் அளக்கப்படும் இந்த கலியுகத்தில் " இப்படி ஒரு மனிதரா?" என்று நம்மை ஆச்சரியப்பட வைப்பவர் பசுமை போராளி திரு. M.Y. யோகநாதன். நடத்துனர் வேலை என்பதே கடினமான வேலை. இருப்பினும் அதையும் தாண்டி கிடைக்கின்ற ஒரு நாள் விடுமுறையக் கூட மரம் நடுதல், பாதுகாத்தல், பள்ளிக் குழந்தைகளுக்கு இயற்கையை போதித்தல்,சுற்றுலா என தன் சொந்த பொருளையும் செலவழித்து தமிழகமெங்கும் கடந்த 25 ஆண்டுகளாக வலம் வரும் தனிமனித சாதனையாளர் திரு. M.Y. யோகநாதன்.

குழந்தைகளுடன் இயற்கைச் சுற்றுலா
அவினாசி சாலை விரிவாக்கத்திற்காக கோவையில் மரங்களை அகற்றிய போது அவர் இயற்றிய கவிதைகள் இரண்டு என்னை வெகுவாக பாதித்தது என்னவோ உண்மை. (
அதன் புகைப்பட காட்சி)
============================
மரம் அறத்து விழுந்த போது
இறந்து கிடந்த குருவியின்
வாயில் இருந்தது தன்
குஞ்சுக்கான ஆகாரம்.
============================
வேரோடு பிடுங்கிய மரத்தால்
வெறிச்சோடி கிடக்கிறது சாலை
சற்று நேரத்துக்கு முன்
நிமிர்ந்து நின்ற மரம்
கவிழ்ந்து கிடக்கிறது
மிக பகட்டாக போடப் போகும் சாலைகளுக்காக.
ஆக்சிஜன் குறைவால்
அவர்களை அள்ளிக்கொண்டு செல்கிறது
ஆம்புலன்ஸ் அலறலோடு
வெட்கிச் சிரிக்கிறது
வேரோடு உள்ள மரம்.
==========================
இந்த வருட Eco Warrior விருது பெற்ற 14 பேர்களில் விஞ்ஞானிகளும் வன அதிகாரிகளும் அடங்குவர். பசுமைப் போராளி திரு. M.Y. யோகநாதன் அவர்கள் இருப்பது நமக்குப் பெருமை. இவர்களில் ஜான் ஆப்ரகாம் என்ற பிரபல இந்தி நடிகரும் உண்டு.
இறுதியாக தொழிற்சங்க தலைவர்களுக்கு அலுவலகம் வந்து கண்டிப்பாக வேலை செய்ய வேண்டியது இல்லை அது போன்று இயற்கைக்கு சேவை செய்யும் இவருக்கும் சில விடுப்புக்கள் அளித்தால் மேலும் நிறைய மரங்களும், இயற்கையை புரிந்து கொண்ட வருங்கால மன்னர்களும் தமிழகத்திற்கு கிடைப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
எல்லா வளமும் பெற்று வாழ இவ்வலைப் பூ பசுமைப் போராளி திரு. M.Y. யோகநாதன் அவர்களை வாழ்த்துகிறது.