Saturday, June 16, 2012

தேசீய நீர்கொள்கை - 2012


ஜீவராசிகளின் வாழ்வாதாரம் பஞ்ச பூதங்கள். ஜீவராசிகளில் ஆறாம் அறிவு பெற்ற மனிதன் தன் இனத்தை அழிப்பதோடு மற்ற ஜீவராசிகளையும் அழிப்பதில் தொழிற்புரட்சிக்குப் பின் மிகச் சிறப்பாக செயல்படுகிறான். திட்டங்களையும், சட்டங்களையும் இட்டு சுரண்டுவதில் அவனுக்கு நிகர் அவனே. நிலத்தில் ஆரம்பித்த ஆசை இறுதியாக கச்சா எண்ணையிலிருந்து மாறி மூன்றாம் உலகப் போர் நீருக்காக என்று கணிக்கும் அளவிற்கு மாறியுள்ளது. பஞ்ச பூதங்களில் ஒன்றான நீரை தங்களது கட்டுப்பாட்டில் தக்கவைக்க பன்னாட்டு நிறுவனங்கள் பெரும் நிதி நிறுவனங்களுடன் கை கோர்த்து ஆர்ப்பரிக்கின்றன. ஆனால் நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறோம் என்பதை சென்ற வாரம் வெளியான மத்திய அரிசின்  தேசீய நீர்கொள்கை 2012 பற்றி பெரும்பாலான ஊடகங்கள் மௌனம் சாதித்ததும் மக்களும் அதனைப் பற்றி கவலைப்படாததும்தான். ஒரு வாழ்வாதார உரிமையில்  ( நில உரிமையாளர்களின் நிலத்தடி நீரை அவர்களுக்கு உரியதாக்கும் Easement Acts 1882 இல்) மாற்றங்கள் கொண்டு வந்து தனியார்க்கு  தாரை வார்க்கும் முயற்சி சில மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்ததால் இம்முறை தலை தப்பியது. ஆனால் நிச்சயம் எதிர்காலத்தில் பறிக்கப்படும் இது காலத்தின் கட்டாயம். பறிக்கப்பட்டால் தமிழகத்தின் விவசாயத்தை எண்ணிப் பாருங்கள்??? பருவ மழை ஆரம்பிக்கும் நிலையில்  மழைநீர் சேமிப்பை உங்கள் இல்லங்களிலும், பண்ணைக் குட்டைகளை உங்கள் விவசாய நிலங்களிலும் ஆரம்பியுங்கள். தண்ணீர் தட்டுப்பாடு வந்தால் சமுதாயத்தில் அமைதியின்மை தோன்றும்.

இன்றைய மழை நீர்
நாளைய குடி நீர் மற்றும் உயிர் நீர்.

Thursday, June 7, 2012

நேபாளத்தில் வெட்டிவேர் - ஒரு பார்வை


இமயமலைத் தொடரில் அமைந்த மலைகள் நிறைந்த நாடு நேபாளம். இயற்கை அன்னை தன் அழகை அள்ளி தெளித்த நாடு. பனிப்பாறைகள், மேடுபள்ளங்கள்,காடுகள் நிறைந்த நாடு. இதுபோன்ற நாடுகளின் சுற்றுச்சுழலில் மழை பெறுவதற்கும், மண் அரிப்பை கட்டுப்படுத்தி மண் வளத்தையும் நீர் வளத்தையும் காப்பாற்றி கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில்  காடுகள் பெரும்பங்கு வகிக்கின்றன. ஆனால் தற்போதைய பொருளாதாரம்  இயற்கை வளங்களை அழித்துத்தான் மக்கள் மேம்பாடு என்று ஆன பின்பு காடுகள் அழிக்கப்படுகின்றன. விளைவு மழையளவு குறைந்து  மண் அரிப்பு ஏற்பட்டு உயிரின வளம் குறைந்து கிராம மக்களின் வாழ்வாதாரம்  கேள்விக் குறியாகிறது. அதனை மாற்றும் முயற்சியில் நேபாள வெட்டிவேர் ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து நேபாள் வெட்டிவேர் நெட்ஒர்க் என்ற அமைப்பை ஏற்படுத்தி செயல் திட்டங்கள் வகுத்து செயலாற்றி வருகின்றனர். அவர்கள் "சிந்துபால்சௌக்" என்ற நீர்வழிப்பாதையை மண்சரிவிலிருந்து காப்பாற்ற எடுத்துக் கொண்ட முயற்சியை புகைப் படமாய் உங்கள் பார்வைக்கு.

Source :Sri.Ramjee shrestha Secretary
Nepal Vetiver Network (NPVN)

Tuesday, June 5, 2012

2012 சுற்றுச்சுழல் தினமும் 'பசுமை பொருளாதாரமும்’


சுற்றுச்சுழல் தினக் கொண்டாட்டம் 40 ஆண்டுகளான நிலையில் பின்னோக்கிப் பார்த்தால் முதல் 25 ஆண்டுகள் இயற்கை வளங்களை சுரண்டியும், இரசாயன மருந்து மற்றும் உரங்கள் கொண்டு மாசுபடுத்தியும், நாடுகளுக்கும் இனங்களுக்கும் சண்டை ஏற்படுத்தி தங்கள் பொருளாதாரத்தை வளர்த்த கதைதான் அதிகம். இயற்கை நிலை வேறாக இருக்க மற்ற நாடுகள் உண்மைகள் அறிந்தவுடன் நிலைமை மாறுகிறது. மாற்றத்தின் விளைவு  இந்த ஆண்டு 2012 சுற்றுச்சுழல் தினம் 'பசுமை பொருளாதாரம்' என்னும் தலைப்பில் கொண்டாடவிருக்கிறோம். பசுமை பொருளாதாரம் (green economy) வரும் ஆண்டுகளில்   மிக அதிகமாக உபயோகிக்கப்படும் சொல்லாக இருக்கப் போகிறது. இது வெறும் சொல்லாக இல்லாமல் ஆக்கப் பூர்வமாக செயல்படுத்தப்பட்டால் நிச்சயம்  அடுத்த தலைமுறைக்கு ஆரோக்கியமான பூவுலகையும் அமைதியான வாழ்க்கையையும் தர முடியும்.

பசுமை பொருளாதாரம் (green economy) என்றால் ?? UNEP (United Nations Development Programme ) defines a green economy as one that results in “improved human well-being and social equity, while significantly reducing environmental risks and ecological scarcities” (UNEP 2010). மனித நலவாழ்வு மற்றும் சமூக சமத்துவத்தில் முன்னேற்றத்தைக் கொண்டு வரக்கூடியதாகவும் சுற்றுச்சுழல் பாதிப்பு மற்றும் பற்றாக்குறையை தவிர்ப்பதாகவும் அமையக் கூடிய பொருளாதாரமே பசுமை பொருளாதாரம்கீழ்கண்ட  துறைகளைத் தேர்வு செய்து  ரியோ + 20 மாநாட்டில் கருத்துப் பரிமாற்றம் செய்யவுள்ளனர்.

இயற்கை வளங்களில் முதலீடு
1. வேளாண்மை
2. மீன் வளம்
3. தண்ணீர்
4. காடுகள்

சக்தி, மற்ற வளங்களின் திறனில் முதலீடு
5. எரிசக்தி
6. தொழில் துறை
7. குப்பை
8. கட்டிடங்கள்
9. போக்குவரத்து
10.சுற்றுலா
11. நகரங்கள்

பசுமை பொருளாதாரத்திற்கு மாற உதவுதல்
12. பசுமை மாதிரி திட்டங்கள் உருவாக்குதல்
13. சூழ்நிலைகளை உண்டாக்குவது.
14. பொருளுதவி

பொன்னும் பொருளும் விலையுயர்ந்த காரும், வீடும் அடுத்த தலைமுறையின் ஆரோக்கியத்திற்கு உதவாது. சுத்தமான காற்றும் நீரும், வளமான மண்ணும் தான் தேவை. அதனை பாதுகாத்துத் தருவது நம் தலைமுறையின் கடமை.

மேல் அதிக தகவல்களுக்கு : http://www.unep.org/greeneconomy/GreenEconomyReport/tabid/29846/Default.aspx