Saturday, June 5, 2010

சுற்றுச் சுழலை மிக அதிக அளவில் மாசுபாடுத்தும் ஆனால் தவிர்க்க முடியாத பொருள்.

எண்ணை (டீசல்) இதனால் ஏற்பட்ட சுற்றுசுழல் மாசுபாடும், உயரினங்களின் அழிவும், நாட்டிற்கு நாடு போட்டி, சண்டை, கொலை பின்பு சுரண்டல் என கணக்கிட்டால் இந்த கண்டு பிடிப்பு உலக சமாதானத்தை, உயிரின அழிவை மிக அதிகமாகவே பாதித்துள்ளது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. ஒவ்வொரு நாட்டிலும் எண்ணை கண்டுபிடித்து அதிகார வர்கத்திற்கு லஞ்சம் தந்து உள்ளூர்வாசிகளை வதைத்து எண்ணை எடுத்து அதை கடலில் கொட்டி நாசம் செய்து பின் சேருகின்ற இடத்திலும் புகையை விட்டு வளி மண்டலத்தை நாசம் செய்த கண்டுபிடிப்பு இது. ஆனால் டீசல் எஞ்சினை கண்டுபிடித்த திரு. ரூடால்ப் டீசலின் முதல் எஞ்சின் தாவர எண்ணை கொண்டுதான் ஓட்டப்பட்டது. (நூறு ஆண்டுகளுக்கு முன்பே )எஞ்சினை தாவர எண்ணைக்கு சிறப்பாக மாற்றாமல் தடம் மாறி எரிபொருள் “கச்சா எண்ணை” என்று ஆனபோது மேற்கண்ட அனைத்து நிகழ்வுகளும் நடந்து இன்று அழிவின் எல்லைக்கு வந்தவுடன் “ஞானம் பிறந்து” மறுபடியும் “பயோ-டீசல்” என பெருமளவு தொகையுடன் ஆராய்ச்சிகள். அதிலும் நம் நாட்டில் நன்கு விளையும் புன்னை, புங்கன் போன்ற வறட்சியை தாங்கி வளரும், நோய் சற்று குறைவான சுற்று சுழலை மேம்படுத்தும் தாவர வகைகளை விடுத்து ஜெட்ரோபாவில் அதிக கவனம் ஓரு நெருடல்தான். உணவு பொருட்களையும் “பயோடீசலாக” மாற்ற நினைப்பது ஏழை மற்றும் வளரும் நாடுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சென்ற மாதம் ஏற்பட்ட மெக்ஸிகோ வளைகுடா எண்ணெய்க் கசிவை பார்த்தோம். இதே போன்ற மிக மோசமான எண்ணை விபத்து "எக்ஸான் வால்டெஸ்" எண்ணை விபத்து ஆகும். கடற்பகுதியில் மனிதானால் ஏற்படுத்தப்பட்ட மிக மோசமான விபத்து ஆகும்.

1989 ஆண்டு மார்சு மாதம் 24 ஆம் தேதி அலெஸ்காவின் “பிரின்ஸ் வில்லியம் சௌண்ட்” பகுதியில் ஏற்பட்ட இந்த விபத்து லட்சக் கணக்கான பறவைகளையும், கோடிக் கணக்கான மீன்களையும் அழித்து நிறைய மீன்பிடி, சுற்றுலா நிறுவனங்களை திவாலாக்கியது. மக்களின் உணவு மற்றும் வாழ்வாதாரங்களை பாழடித்தது. 5 பில்லியன் நஷ்ட ஈடு கேட்கப்பட்டு பின் மிக குறைவான தொகைக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் சுற்றுசுழல் மாசுபாடு இன்று வரை தொடர்கிறது.

இந்த சுற்றுச்சுழல் தினத்தன்று சில வரையறைகளை, இலக்குகளை நமக்கு நாமே விதித்து செயல்படுத்தலாம்.

சிறிது தூர பயணத்திற்கு சைக்கிள் உபயோகப்படுத்துவது. ( உடற்பயிற்சியும் கூட)
அருகிலுள்ள ஊர்களுக்கு பேருந்தை உபயோகிப்பது.
தூரத்திலுள்ள ஊர்களுக்கு இரெயில் பயணம்.
குழந்தைகளை முடிந்த அளவிற்கு பள்ளிப் பேருந்தில் அனுப்புவது.
நாமும் நிறுவன வாகனங்கள் இருந்தால் அதனை உபயோகிப்பது.
நமது வழக்கமான பாதை நெருக்கடி மிகுந்ததாக இருந்தால் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துவது அல்லது மாற்றுப் பாதையை உபயோகிப்பது.
அருகிலுள்ளவர்களையும் இணைத்து ஓரே ஊர்தியை முடிந்த அளவிற்கு உபயோகிப்பது.
மின்சார வாகனங்களுக்கு மாறுவது ( வேகம் வசதி குறைவுதான் )
மின்தடையின் போது ஜெனரேட்டர்களுக்கு பதில் சூரிய விளக்கு (Solar light) அல்லது காற்றாலைகளை உபயோகிப்பது.
எண்ணை வித்து மரங்களை நடுவோம்.
மாற்று எரிபொருளை ஆராய்வோம்
ஈயம்[lead] கலக்காத எரி பொருளை பயன்படுத்தலாம்.
வாகன புகையளவை கட்டுக்குள் வைக்கலாம்.
(வேறு ஏதேனும் இருந்தால் பின்னூட்டமிடுங்கள். )

Wednesday, June 2, 2010

மத்திய அமெரிக்காவில் “அகதா புயல்”

இந்த வருட வெப்ப மண்டல புயல் கணக்கை மத்திய அமெரிக்காவில் “அகதா புயல்” மூலம் இயற்கை துவக்கியுள்ளது. பஞ்ச பூதங்களில் இரண்டு (நீர், காற்று )சேர்ந்து மற்றொரு பூதமான நிலத்தில் வினை புரிய பாதிப்புக்கு உள்ளாவது என்னவோ நாம் தான். நூற்றுக்கு மேற்பட்டோர் உயிர் இழப்பு பல ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். படங்களையும் ,வீடீயோவையும் பார்க்கும் போது பிரமிப்பாக உள்ளது.


சாலை சந்திப்பில் மிகப் பெரிய குழி. ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன அழகு படுத்தப்பட்ட பாலத்தின் அருகே மிக பெரிய குழி. கௌதமாலாவைத் தாக்கிய அகதா புயல் பக்கத்து நாடுகளான எல்சால்வேடர், ஹோண்டுரா ஆகிய நாடுகளையும் தாக்கியது. பலத்த மழை காரணமாக அங்கும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளன..

இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தால் மாத்திரமே பாதிப்பை குறைக்கமுடியும் முழுவதுமாக தவிர்க்கமுடியாது.

Tuesday, June 1, 2010

BP நிறுவனத்தின் மெக்ஸிகோ வளைகுடா எண்ணெய்க் கசிவை அடைக்கும் முயற்சி தோல்வி


அமெரிக்காவில் மெக்ஸிகோ வளைகுடா கடல் பகுதியில் ஏற்பட்டுவருகின்ற எண்ணெய்க் கசிவை அடைப்பதற்காக BP நிறுவனத்தார் தற்போது செய்துள்ள முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது."ஆழ்கடல் கிணற்றிலிருந்து எண்ணெய் வெளிவருவதைத் தடுப்பதற்காக மேலிருந்து கடினமான சேற்றையும் சிமெண்டு-ஜல்லிக் கலவையையும் செலுத்தி நாங்கள் மூன்று நாட்களாக முயற்சி செய்தும் எண்ணெய் வெளிவருவதைத் தடுக்க முடியவில்லை", என BP நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி டூக் சட்டில்ஸ் அறிவித்துள்ளார். பல முறை முயன்ற பின்னும் இந்த முயற்சி பல தரவில்லை என்பதால் மாற்று வழியில் முயலலாம் என அந்நிறுவனம் தற்போது தீர்மானித்துள்ளது.

அடுத்த கட்ட முயற்சி
பூமிக்கு அடியிலிருந்து எண்ணெய் மேலே வருவதற்கான அந்த குழாயை ஒரு இடத்தில் வெட்டி, மேலே வருகின்ற எண்ணெயை கடலில் கலக்க விடாமல் அப்படியே உறிஞ்சி கப்பலில் சேமித்து விடுவது என்பது அவர்களுடைய அடுத்த உத்தியாக இருக்கும் எனத் தெரிகிறது. இந்தத் திட்டம் வெற்றி அடைந்தாலும் கூட, கடலில் எண்ணெய் கலப்பதை மொத்தமாகத் தடுத்து விட முடியாத் என்பதை பிபி நிறுவனத்தார் ஒப்புக்கொள்கின்றனர்.


அரசியல் தாக்கங்கள்
கசிந்த எண்ணெய் அமெரிக்கக் கரை வரை பரவியுள்ளது என்றால், இதன் அரசியல் தாக்கங்களோ அதனையும் தாண்டி வாஷிங்டன் வரை பரவியுள்ளது. எண்ணெய்க் கசிவைத் தடுக்க முடியாது போயுள்ள இந்த சூழ்நிலை குறித்து தான் கவலையும் கோபமும் அடைந்திருப்பதை அதிபர் ஒபாமா ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தார். இந்த விவகாரம் அவரது தலைமைத்துவத்தின் மீது பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்துள்ளது.


வானிலை சவால்கள்
களத்தில் ஏற்கனவே நிலவுகின்ற சிரமான சூழலை வானிலை மாற்றங்கள் மேலும் கடினமாக்கி விடலாம் என கடலோரக் காவல்படையைச் சேர்ந்த அதிகாரி ரியர் அட்மிரல் மேரி லாண்ட்ரி கூறுகிறார். "வானிலை என்பது எங்களுடைய முயற்சிகளுக்கு மிகப்பெரிய ஒரு சவாலாக அமைந்துள்ளது. மெக்ஸிகோ வளைகுடாவில் சூறாவளிகள் ஏற்படுகின்ற ஒரு கால கட்டத்துக்குள் நாம் இப்போது நுழைந்திருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்." என அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே லூசியானா மாகாண கடலோரப் பகுதிகளில் தங்களுடைய நிலமும் வாழ்வாதாரமும் அழிக்கப்படுவது கண்டு மக்களிடம் ஆத்திரமும் ஆற்றாமையும் அதிகரித்து வருகிறது. எண்ணெய்க் கசிவை தடுத்து நிறுத்துவதற்கான நிஜமான தீர்வு என்பது அந்த இடத்துக்கு அருகிலேயே இன்னொரு கிணற்றைத் தோண்டுவது என்பதுதான் என நிபுணர்கள் பலர் நம்புகின்றனர். ஆனால் அப்படி இன்னொரு கிணற்றைத் தோண்ட ஆகஸ்ட் மாதம் வரை ஆகிவிடலாம். அதற்கு முன்னதாக மாற்று வழி கண்டறியப்படவில்லை என்றால், எண்ணெய்த் திட்டுக்களால் ஏற்படுத்தகக்கூடிய சுற்றுச் சூழல், பொருளாதார மற்றும் அரசியல் சேதங்கள் மிகவும் மோசமாக இருக்கும் என்றே தெரிகிறது.

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/05/100530_oilleakstemfailure.shtml
நன்றி : பி.பி.சி. தமிழ் படங்கள் உதவி :நாசா

நியு ஆர்லியன்ஸ் நகரம் ஏற்கனவே 2005 ஆண்டு காத்ரீனா மற்றும் ரீட்டா புயல்களால் பாதிக்கப்பட்டதை நினைவுபடுத்துகிறேன்.