Sunday, February 14, 2010

தொழிற்சாலை சார்ந்த வேளாண்மை காடு வளர்ப்பிற்காக புதிய இணையதளம்.


தேசீய வேளாண் புதுமைத் திட்டதின் கீழ் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மரவளர்ப்பு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி மூலம் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. அதனை மேலும் ஊக்கப்படுத்தி விரிவாக்க புதிய இணையதளம் ஒன்றை http://www.fcrinaip.org/ என்ற முகவரியில் உருவாகியுள்ளனர். இத்திட்டதின் செயல்பாடு, இணைந்துள்ள ஆராய்ச்சி நிறுவனங்கள், செயல்படும் இடம், மாதிரிப்பண்ணை, தொழில்நுட்பம், மரத்தை வாங்கிக்கொள்ளும் தொழிற்சாலைகள் பற்றிய விபரங்கள் என நிறைய தகவல்கள் உண்டு. மிக முக்கியமாக விலை நிலவரம் பற்றிய தகவல்கள் வெளியிடுவதால் விவசாய பெருங்குடி மக்களும், உபரி வருமானத்தோடு இயற்கையையும் பாதுகாக்க தொழிற்சாலைகளும், கல்வி நிறுவனங்களும் அச்சமின்றி மரவளர்ப்பில் ஈடுபடலாம். நல்ல வாய்ப்புக்கள் நம் கதவை தட்டும் போது திறந்து பயன்பெற்று வனவளத்தைக் காப்பது நம் கடமை.

வனம் வளர்ந்தால் அது வளமையின் துவக்கம்.
வனம் அழிந்தால் அது வறட்சியின் துவக்கம்.

Thursday, February 11, 2010

மரம் வளர்ப்போர் விழா, கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் - 2010

இன்றைய காலத்திற்கு தேவையான மரம் சம்பந்தபட்ட விழா, கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் என்ற அரிய வாய்ப்பை நமக்கு வனமரபியல் மற்றும் மரபெருக்கு நிறுவனம் - கோவை இம்மாதம் 18 - 19 தேதிகளில் அளிக்கவுள்ளனர். அவசியம் அனைவரும் கலந்து கொண்டு பசுமை பாரதமாக மாற்ற நம்மால் இயன்றதை செய்வோம். குறிப்பாக பெரிய அளவில் தரிசுநிலம் வைத்திருப்போர், பெரிய கல்விநிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் என்று நிச்சயமாக கூறலாம். அவர்களது அழைப்பிதழில் விபரம் அதிகமிருப்பதால் அதனையே பிரசுரித்திருக்கிறேன். திரளாக வந்து கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளுகிறேன். அழைப்பிதழை "கிளிக்" செய்து பெரிதாக்கி படியுங்கள் அல்லது கீழ் கண்ட தொடர்பை உபயோகியுங்கள் : http://ifgtb.icfre.gov.in/left_details/news/ifgtb.pdf
மரம் நடுவோம், மழை பெறுவோம், வளம் பெறுவோம்

Friday, February 5, 2010

கேரள மாநில அரசின் மனிதாபிமான செயல் - “எண்டோ சல்பான்” மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடு.

கடவுளின் சொந்த நாடான (God’s own Country ) கேரள மாநிலத்தில் காசர்கோடு பகுதி முந்திரி சாகுபடிக்கு பெயர் போனது. நிறைய அன்னிய செலவாணியை அள்ளித் தரும் பயிர். அதனை காப்பாற்ற “எண்டோ சல்பான்” என்ற மருந்து ஹெலிகாப்டர் மூலம் தெளிக்கப்பட்டது. வருடங்கள் செல்ல செல்ல நிலம், நீர், காற்று மாசுபாடு அடைந்து அந்த பகுதி மக்களின் வாழ்கை கேள்விக்குரியானது. குறிப்பாக குழந்தைகள் நரம்பு சம்பந்தமான நோயினால் பாதிக்கப்பட்டு நடைபிணமாயினர் என்பதுதான் உண்மை. இது சம்பந்தமாக அடவாடியாக வழக்காடியது மருந்து நிறுவனம். மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டது அவர்களது லாப வெறியை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது.

பாதிக்கப்பட்ட சுமார் 2000 பேருக்கு நஷ்ட ஈடு தருவதாக கேரள மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வரவேற்க தக்க அறிவிப்பு. இதே போன்று இன்று விவாதிக்கப்படும் பி.டி. (Bt )கத்திரியும் இந்த வகையை சார்ந்ததே. 20 அல்லது 30 ஆண்டுகள் கழித்து பாதிப்புக்களை நாம் சந்திக்காவிட்டாலும் வருங்கால குழந்தைகள் சந்திப்பார்கள் அப்போது இதேபோன்று சில ஆயிரம் நஷ்ட ஈடு தருவதாக கூறுவார்கள். ஆனால் பல கோடிகளை லாபமாக கம்பெனிகள் அள்ளிச் சென்றிருக்கும் அதில் சில ஆயிரங்களை தருவதில் அவர்களுக்கு பிரச்சனைகள் இல்லை. “போபால்” விஷ வாயு விபத்தில் இன்னும் கஷ்டங்களை அனுபவிப்பது என்னவோ ஏழை மக்கள்தான். அன்று எண்டோ சல்பானை உபயோகிக்க சொன்ன அதிகாரிகளும், விஞ்ஞானிகளும், கம்பெனியும் வளமுடன்தானுள்ளார்கள். பாவம் திரு.பொதுஜனம்.

TERI நிறுவனத்திற்காக எடுக்கப்பட்ட The Slow Poisoning of India என்ற 26 நிமிட மனதை பிழியும் ஆவணப் படத்தைக் காண கீழேயுள்ள தொடர்பை கிளிக் செய்யவும்.
அவசியம் படத்தைப் பாருங்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டாம்.

http://video.google.com/videoplay?docid=-6926416900837431282