Showing posts with label புகைப் படம். Show all posts
Showing posts with label புகைப் படம். Show all posts

Friday, August 19, 2011

உலக புகைப்பட நாளில் எனது இடுக்கி மாவட்ட பயண புகைபடங்கள்.

25 ஆண்டுகளுக்குப் பின் நேற்று (18-08-2011) இடுக்கி மாவட்ட பகுதியில் பயணம். மழைக்காடுகள் அழிந்துள்ளதைப் பார்க்கும் போது ஆதங்கமும், வருத்தமும் ஏற்பட்டது. நுனிக் கிளையில் அமர்ந்து அடிக் கிளையை வெட்டிக் கொண்டிருக்கிறோம் என்பது மாத்திரம் தெளிவாக்கப் புரிந்தது.
நண்பரின் பண்ணை வீடு. ஆற்றின் எதிர்புறமிருந்து.
மழைக் காடுகளை இனிமேலும் அழிப்பது, நாமே நம்மை அழித்துக் கொள்வது போன்றது.

மேற்கு மலை தொடர்ச்சியின் சிறப்பு, வெட்டி வைத்த கொம்புகள் அதிக ஈரத் தன்மை காரணமாய்  தளிர்விடும் அழகு.
நண்பரின் பண்ணை வீட்டிலிருந்து பெரியாறு.
நதியின் அருகே வளர்ந்துள்ள மூங்கில்.
சர்ச்சைக்குரிய பெரியாறு.
மழைக் காடுகளைத் அழித்து தேயிலைத் தோட்டங்கள்
பாறையில் பெரணி.
உபயம் சுற்றுலாப் பயணிகள்.
ஏலம் பயிர் செய்வதால் சற்று மரக்கூட்டங்கள்.
மலை முகட்டில் மேகத்துடன் ஏலப்பாறை கிராமம்.

Saturday, March 26, 2011

மாடித்தோட்டத்தில் விளைந்தவை- புகைப்படம்



கொத்தமல்லி.

கீரை

அவரை

கீரைக்காக முருங்கை ஆரம்ப நிலையில்

வெங்காயம்

டேபிள் ரோஸ்

Wednesday, February 9, 2011

போன்சாய் மரங்களின் புகைபடங்கள்.

சீனநாட்டில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இந்த கலை பின்பு ஜப்பான் நாட்டில் வேரூன்றி இன்று எல்லா நாடுகளிலும் பிரபலமடைந்துள்ளது. பெரிய மரங்களின் கன்றுகளை உயரம் குறைந்த தொட்டிகளில் சிறிய அளவுகளில் பல்வேறு அமைப்புகளில் பல ஆண்டுகளாக வளர்ப்பது இந்த போன்சாய் கலை. 100 ஆண்டுகளுக்கு மேல் வயதுடைய மரங்களும் உண்டு. கோவை 2011 மலர் கண்காட்சியில் இந்த போன்சாய் அணிவகுப்பு எல்லோரது கவனத்தையும் கவர்ந்தது.

Friday, July 9, 2010

உள்ளம் ஊஞ்சல் ஆடுவதும்..... உயிர் ஊசல் ஆடுவதும்.....

தமிழகத்தின் முன்னோடி இயற்கை விவசாயி திரு. மது இராம கிருஷ்ணன் அவர்கள் கோவையில் நடைபெற்ற இணைய மாநாடு 2010 இல் இயற்கை விவசாயம் பற்றி படத் தொகுப்புடன் பேசினார்கள். காண்பிக்கப்பட்ட படங்களில் ஒன்று இன்றைய உலக விவசாயத்தை எளிமையாக படம் பிடித்து காட்டியது.
ஆப்ரிக்காவின் பஞ்சம் தொடங்கி இந்தியாவின் விவசாய தற்கொலைகளுக்கு காரணம் மிக தெளிவாக இருந்தது. அதனை உங்களிடம் காட்சியாக வைத்து, மழைகாலம் ஆரம்பமாகவுள்ளது உங்களால் ஆன மரம் நடும் முயற்சிகளை உங்களுக்காகவும் உங்கள் குழந்தைகளின் மகிழ்ச்சியான எதிர்
காலத்திற்காகவும் செய்யுங்கள். வாழ்த்துக்கள்.

Saturday, June 12, 2010

சுற்றுச் சுழலை காப்பது யார் ????


அண்மையில் தமிழகத்தின் முக்கியமான ஒருவருக்கு அளிக்கப்பட்ட ஓவியத்தின் பிரதி இது. ஓவியர் ஒரு பொறியாளர். இந்த ஓவியம் பற்றிய கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள்.

Wednesday, January 6, 2010

வால்பாறை அக்காமலை கிராஸ் ஹில்ஸில் எனது இளமைகால அனுபவம்.

அழகிய தோற்றம் "மஞ்சு " இல்லாமல்
திரு. C.R. ஜெயபிரகாஷ் அவர்கள் மின்னஞ்சிலில் வால்பாறை அக்காமலை கிராஸ் ஹில்ஸின் அற்புதமான புகைபடங்களை அனுப்பி சுமார் அரை மணிநேரத்திற்கு மேல் என்னை 35 வருடங்களுக்கு பின்னநோக்கி செல்ல வைத்து மகிழ்ச்சியான அதே சமயம் மரண பயத்தையும் தந்த அந்த “டீன்” பருவதிற்கு என்னை அழைத்து சென்றதற்கு அவருக்கு எனது மனமார்ந்த நன்றி.

Good Friday அன்று அக்காமலை கிராஸ் ஹில்ஸின் உச்சி என்று நம் பார்வையில் படும் பகுதியில் சிலுவை வைத்திருப்பார்கள் வருடதில் Good Friday அன்று மட்டும் நிறைய மக்கள் அந்த சிலுவை மரத்தை நோக்கி பக்தி பயணம் மேற்கொள்வார்கள். அந்த நாளை நண்பர்கள் தேர்ந்தெடுத்தோம். அக்காமலை பகுதிக்குச் சென்று ஒற்றையடி பாதையில் சுமார் 3 மணிநேரப் பயணம். செல்லும் பாதையின் அருகே சோலா வன பகுதி.
இடையில் மேற்குமலை தொடர்ச்சிக்கே உரித்தான இந்த “சோலா வனப்பகுதி”. யானையின் பிளிரும் ஓசை. ஒரு வழியாக மேலே சென்றதும் மகிழ்ச்சியில் சிலுவைக் குன்றை தாண்டி அடுத்தடுத்து 6 அல்லது 7 சிறுகுன்றுகளை தாண்டியிருப்போம்.
ஆழமற்ற கோனலாறு
இடையே கோனலாற்றுத் தெளிந்த நீரை பருகி விளையாடி மகிழ்ந்ததில் வழி மறந்து விட்டது. எந்த பக்கம் பார்த்தாலும் ஒரே மாதிரி குன்றுகள்.
இதே போன்று சுற்றிலும் இருந்தால் எதனை அடையாளமாக வைப்பது.
ஏதேனும் ஒரு குன்றின் மீது ஏறி நின்று சிலுவையை இலக்காக வைத்து வழியை கண்டு பிடித்துவிடலாம் என்று நடக்க ஆரம்பித்தோம் மனித நடமாட்டமற்ற பகுதி சுமார் 2 மணியிருக்கும் திடீரென “மஞ்சு” வந்து சூழ்ந்து கொண்டது. 6 அடிக்கு அப்பால் உள்ளவர்களின் குரல் கேட்கிறது. ஆனால் உருவம் தெரிவதில்லை. அவ்வளவு நேரம் ரசித்த இயற்கை ஏனோ பயத்தை அளித்தது. மஞ்சு விலகினால் மாத்திரமே திரும்ப முடியும். 30 நிமிடம், 1மணிநேரம் மஞ்சு விலகவே இல்லை. சரி இத்துடன் ஆயுள் முடிந்துவிட்டது. குளிரில் நடுங்கி இறக்கத்தான் வேண்டும் என்ற நிலையில் 11/2 மணிநேரம் கழித்து மஞ்சுமூட்டம் கலைந்து தூரத்தில் இருந்தவை தெரிந்தன. பொதுவாக பகல் 2 மணிக்கு மேல் வழக்கமாக பெய்யும் கோடை மழையை அனுபவமின்மை காரணமாக கணக்கிட மறந்து சற்று தூரம் சென்றது தவறாகப் போய்விட்டது. எப்படி கீழே இறங்கினோம் என்றே தெரியவில்லை. வீட்டிற்கு வந்தவுடன் காய்ச்சல் வேறு வந்துவிட்டது. ஓய்வு விடுதி.
ஆனாலும் இன்றும் அந்த இடத்திற்கும் கோனலாறு ஓய்வு விடுதிக்கும் செல்லவேண்டும் என்ற ஆசையுள்ளது. ஆனால் நேரம்தான் அமையவில்லை.

அன்பர்களே உலகின் “Hotspot” என்று அழைக்கப்படும் முக்கிய இடங்களில் இந்த “புல்வெளியும், சோலா வனப்பகுதியும்” ஒன்று.
தீபகற்ப இந்தியாவின் மேல்நிலை தொட்டி ( Over Head Tank ).
இதுதான் தீபகற்ப இந்தியாவின் மேல்நிலை தொட்டி ( Over Head Tank ). மழைக் காலங்களில் நீரை ஸ்பான்ச் போன்று உறிஞ்சி வருடம் முழுவதும் நமக்கு தண்ணீரை தருகிறது. அதன் பரப்பளவு குறைந்து வருவது தென் மாநிலங்களுக்கு நீர் பற்றாக் குறையை ஏற்படுத்தும். கீழ்கண்ட திருக்குறளை உங்கள் சிந்தனைக்கு தந்து இந்த அரிய வகை காடுகளை காப்பாற்றுவது என்பது நமது வாழ்வதாரத்தை காப்பாற்றுவது போலாகும் எனவே இக்காடுகளை காப்பாற்றுவோம்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

Thursday, December 31, 2009

புத்தாண்டு வாழ்த்துக்களுடன் ஒரு சிறு செய்தி.

திருமதி.வாஞ்சி பாட்டியின் கையிலிருப்பது நம் நாட்டின் எதிர்காலம் (நீர்) என்று சொல்லலாம். காரணம் பாரம்பரிய மானாவாரி நெல் ரகத்தை மற்றவர்கள் கைவிட்ட நிலையில் இன்னும் பாதுகாத்து ஒவ்வொரு வருடமும் தவறாமல் பயிர் செய்து இன்றளவும் காப்பாற்றி வருகிறார். இயற்கை தந்த இந்த ரகத்தை நமக்கு தருவதற்கு இவர் தயார் ஆனால் நாம் அதனை பெற்று நீர் நிர்வாகத்தில் சிக்கனத்தை கடைபிடிக்க போகிறோமா ?? அல்லது ‘உல்டா’ செய்து நெல் ரகத்தை உருவாக்கப் போகிறோமா ?? எதுவாயினும் இவரது புகைபடத்தை வாழ்த்து அட்டையாக மாற்றி அவரை கௌரவப்படுத்துவதில் இவ்வலைப் பூ மகிழ்ச்சியடைகிறது. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மேலும் இந்நெல் ரகம் பற்றி அறிய கீழ்கண்ட தொடர்பை பயன்படுத்தவும்.

http://maravalam.blogspot.com/2009/02/blog-post.html
http://maravalam.blogspot.com/2009/09/blog-post_19.html

Tuesday, July 14, 2009

தென்மேற்கு பருவமழையில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில்.....

மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளுக்கு சென்று வருவது எனக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக தென்மேற்கு பருவ மழையின் போது செல்வது. சென்ற வாரம் நல்ல மழை பெய்ததால் காட்டாறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால் மழை பெய்யாத போது அந்தப் பகுதிகளை பார்த்து ரசிக்கும் வாய்ப்பு சிலமணி நேரம் கிடைத்தது.


கரையருகே சிறுவர் சிறுமிகள் உற்சாகமாய் விளையாடினர். குறிப்பாக ஒரு சிறுவன் மாத்திரம் ஒரு மரக்கன்றை மையபடுத்தி தன் கோட்டையை கட்டிக்கொண்டிருந்தான். நான் ரசித்த அந்த காட்சிகளை புகைபடங்களாக உங்கள் பார்வைக்கு.

இறைவா !! இந்த சிறுவனின் மனநிலையையும், பெருக்கெடுத்து ஓடும் நீரையும் எங்கள் அனைவருக்கும் எப்பொழுதும் தா.

Wednesday, July 8, 2009

அரிதாக கிடைக்கும் சில தருணங்கள்.

இன்று மாலை வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது ஒற்றை காட்டு ஆண் யானை சாலையின் மிக அருகே. நிறுத்தி புகைபடம் எடுக்குமளவிற்கு மனதில் தைரியம் !!. எப்படி வந்தது? இடையில் இருக்கும் அந்த கம்பிக்குத்தான் எத்தனை சக்தி.!!!!!!

அமைதியான பார்வை
போதுமான உணவு மற்றும் நீர் இல்லாமையால் வன விலங்குகள் படும் அவதி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகின்றது. காரணம் பருவ மழை சரியான நேரத்தில் பெய்யாதது. வனவிலங்குகள் பாதுகாக்கப்பட வேண்டுமானால் வனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். வளமான நாட்டிற்கு அறிகுறி அந்நாட்டின் வன பரப்புத்தான். எனவே வன பரப்பை அதிகமாக்குவோம்.

Tuesday, April 28, 2009

மரம் - புகைப்படம்


அலங்காநல்லூர் அருகே இருக்கின்ற இந்த மரம் பார்ப்பதற்கு சாதாரணமாக இருப்பினும் அருகில் சென்று பார்த்தால் சற்று வித்தியாசமாகவும், பிரமாண்டமாகவும் இருக்கின்றது. அருகே திரு. சட்டையில்லா சாமியப்பன் அவர்கள்.
படங்கள் உதவி : திரு.பாபு

Thursday, April 2, 2009

விழுதுகள்.

மூன்று மரங்களும் ஆலமரங்கள்தான். ஆனால் அதன் விழுதுவிட்டிருக்கும் அளவு, அடர்த்தி எவ்வளவு நேர்த்தியாக மண்ணின் தன்மைக்கும், நீர் கிடைக்கும் அளவிற்கும் ஏற்ப இயற்கை அவைகளை வளர்த்துள்ளது. இந்த மரங்கள் மூன்றும் சுமார் 5 கீ.மீ தூரத்தில் (இடைவெளி) வளர்ந்திருப்பது என்பது சிறப்பு. மரபணு மாற்றம் என்று வித்தைகள் செய்யலாம் ஆனால் இயற்கைக்கு முன் ஈடாகுமா??

Monday, January 19, 2009

ஆர்கிட் மலர்கள்- புகைப்படம்

வண்ணங்களிலும், வடிவத்திலும்,அழகிலும் ஆர்கிட் மலர்களுக்கு நிகர் ஆர்கிட் மலர்கள் தான் (புகைபடங்களை பார்த்த பின் சரி என சொல்வீர்கள்? ). நீண்ட நாட்கள் வாடாமல் இருப்பதால் கொய்மலர் (Cut Flower) வணிகத்தில் இன்று சிறப்பு பெற்றுள்ளது. பொதுவாக தென்கிழக்கு ஆசியநாடுகளில் வகை வகையான ஆர்கிட் மலர்களை காணலாம். குறிப்பாக தாய்லாந்து நாடு மலர்கள் சிறப்பானவை. இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்கள் இம்மலர்களுக்கு பெயர் பெற்றவை. இருநாட்களுக்கு முன் கோட்டயம் தோட்டக்கலை கண்காட்சிக்கு சென்றிருந்தேன். அங்கே தாய்லாந்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்தார்கள். விலையும் எட்டாத உயரத்திலிருந்தது. காட்சிக்கு சில.