Showing posts with label இயற்கை வைத்தியம். Show all posts
Showing posts with label இயற்கை வைத்தியம். Show all posts

Saturday, July 5, 2014

“கொம்புசா” என்னும் ஆரோக்கிய பானம்

சப்பாத்திக் காளான் (SCOBY )
அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள், இடபற்றாக் குறையுள்ள இடங்களில் வசிப்பவர்களுக்கு காய்கறி வளர்ப்பு  ஒரு கனவு போல் தோன்றும், மனமிருந்தாலும் முடியாத ஒரு நிலை. மாறாக ஒரு சிறிய கோப்பைக்குள் ஒருவகை சப்பாத்தி காளானை SCOBY (Symbiotic Colony Of Bacteria and Yeast) வளர்த்து அதிலிருந்து பெறப்படும் நொதித்த நீரை அனுதினம் பருகி உடல் ஆரோக்கியம் பெறலாம். ஈஸ்ட் மற்றும் பாக்டீரீயா கலந்து நொதித்த பானத்தை “கொம்புசா” என்றழைக்கின்றனர். இந்த கொம்புசா பானத்தை தினமும்  சிறிதளவு அருந்த நீ..ண்..ட… நாட்கள் நோயின்றி மகிழ்ச்சியான வாழ்வு வாழலாம். பலவிதமான நோய்கள் தாக்காமலிருக்கும் என்று ரஷ்யாவில் சைபீரியா பகுதி, மங்கோலியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் நூறு ஆண்டுகளாக்கும் மேலாக  இதனை உபயோகித்து நீண்ட, நோயற்ற மகிழ்ச்சியான வாழ்வு வாழ்ந்ததை பதிவு செய்துள்ளனர். கொம்புசா என்று அழைக்கப்பட்டாலும் “ஈஸ்ட் டீ“, க்ரீன் டீ என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.
கண்ணாடிக் கிண்ணம்

டீத்தூள் மற்றம் சர்க்கரை

உணவு காளான் வளர்ப்பில் தனி குடில் அமைப்புக்கள், ஈரப்பதம், பராமரிப்பு, விதைகாளான், வைக்கோல், பிளாஸ்டிக் பைகள், அதிக முதலீடு, வணிகத் தொடர்பு போன்றவற்றால் எல்லோராலும் எளிமையாக வீட்டிற்குள் வளர்க்க முடியாது. இந்த கொம்புசா காளான் வளர்ப்பில் இடம், குடில்,  அதிக கவனம் போன்றவை தேவையில்லை. உற்பத்தி செய்ய தேவையானவை ஒரு பாத்திரம் (கண்ணாடி அல்லது பீங்கான் கோப்பை சிறந்தது) , “டீ” தூள், சர்க்கரை, தேவையான அளவு தண்ணீர் மற்றும் சப்பாத்தி காளான்.
ஆரம்ப நிலையில் ...

சற்று வளர்ந்த நிலையில்

முதலில் நீரை நன்கு கொதிக்க வைத்து டீ தூள் போட்டு வடிநீர் (Decoction) நன்கு இறங்கிய பின்பு சர்க்கரையை கலந்து கொள்ளவேண்டும். நன்கு ஆறவைத்த பின்பு வட்ட வடிவில் இருக்கும் இந்த சப்பாத்தி காளானை) தாய் காளானிலிருந்து பிரித்து கோப்பைக்குள் இடவேண்டும். ஒரு வாரம் சென்ற பின்பு புதிய காளான் அடுக்கு கீழ் பகுதியில் தோன்றியிருக்கும். தினமும் அந்த காளானால் நொதித்த வடிநீரை பருகிவரலாம். சற்று புளிப்பு சுவையுடையது இந்த பானம் வணிக நோக்கிலும் உற்பத்தி செய்யப்படுகிறது.

  ஒரு வாரம் சென்ற பின்பு மீண்டும் முன்பு செய்ததைப் போன்று வடிநீர் தயாரித்து  மேல் அடுக்கு  காளானை அகற்றி விட்டு கீழ் பகுதியில் தோன்றிருக்கும் புதிய காளானை உபயோகிக்க வேண்டும். புதிதாக வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஆரோக்கியமான முறையில் நாம் செய்கிறோமா என தெரிந்து கொள்ள காளானின் வளர்ச்சி, நிறம் மற்றும் வடிநீரின் மணம் ஆகியவை உணர்த்தும். பொதுவாக பழுப்பு நிறத்தில் காணப்படும் இந்த காளான் நிறம் மாறி கருப்பு, வெள்ளை, பச்சை நிறத்தில் காணப்படும் போது அது கெட்டுவிட்டதாக கொண்டு அதனை அருந்துவதை தவிர்த்து புதிதாக ஆரம்பிக்க வேண்டும்.
புதிய காளான் ஒரு வாரத்தில் கீழ்பகுதியில் தோன்றும்

இரத்த அழுத்தம், மலசிக்கல் நீங்கி நோய் எதிர்ப்பு சக்தி கிடைகிறது. சில தோல் நோய்கள் குணமாகின்றன, சருமத்தின் சுருக்கங்கள் நீங்கி இளமையான தோற்றம் கிடைக்கிறது, புற்று நோயின் தாக்கம் குறைகிறது என்று இதனை அருந்துபவர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டாலும், கொம்புசா பற்றிய அறிவியல் ஆய்வுகள் மிகக் குறைவாக இருப்பதால் அதுபோன்று இல்லை பின் விளைவுகள் உண்டு என கூறுபவர்களும் உண்டு. எனவே இதனை பயன்படுத்துபவர்கள் ஒவ்வாமை தமக்கு ஏற்படுகிறதா? பின் விளைவுகள் தங்களுக்கு ஏற்படுமா ? என ஆய்வு செய்து பின்பு உங்கள் கொம்புசா வளர்ப்பை ஆரம்பியுங்கள். உலகின் பல  நாடுகளில் அனுபவ ரீதியாக இதன் பயனாளிகள் இலட்சக்கணக்கில் நூறு ஆண்டுகளுக்கு  மேலாக  இருந்து வருகிறார்கள்.

Wednesday, June 18, 2014

கற்றாழை என்றழைக்கப்படும் “குமரி”

குமரி அல்லது சோற்றுக் கற்றாழை
வெப்ப மண்டலப் பகுதிகளுக்கு இயற்கை நிறைய அற்புதமான தாவரங்களை தந்துள்ளது. அவற்றில் ஒன்று கற்றாழை எனபடும் “குமரி” அல்லது “சோற்றுக் கற்றாழை”. ஆப்ரிக்காவை தாயகமாகக் கொண்ட காற்றாழையில் நிறைய வகைகள் உண்டு. நம் நாட்டில் பஞ்சம் ஏற்பட்ட போது காற்றாழையின் மடலை சீவி அதனுள் இருக்கும் “ஜெல்” பகுதியை உண்டு உயிர் வாழ்ந்ததாக பழைய நூல்கள் கூறுவதால் அதற்கு “சோற்றுக் கற்றாழை” என்ற பெயர் வந்திருக்கலாம். வெப்பத்தையும் வறட்சியையும் தாங்கி வளரக்கூடிய மருத்துவ குணங்கள் மிக்க கற்றாழையை எளிதாக வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கலாம்.

கண் திருஷ்டி , தீய சக்திகள் இவைகளை அண்டவிடாது என்ற நம்பிக்கையின் காரணமாக நகர்புறங்களில் கூட சில கடைகள், வீடுகளுக்கு முன் கட்டித் தொங்க விடப்படுகிறதை இன்றும் நாம் பார்க்கமுடியும். கிராமப்புறங்களில் மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணிகள் பற்றாமலிருப்பதற்காகவும், சிறிய கொசுக்களை ஈர்த்து வைத்துக்கொள்ளவும் தொங்க விடப்படுவது உண்டு. கற்றாழையை மருந்துப் பொருளாகவும் , அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுத்துகின்றனர். இன்று எல்லா கடைகளிலும் ‘அலோவேரா’ ஷாம்பு, சோப்புக்கள், க்ரீம்கள் நவீன பெண்களிடையே மிக பிரபலம். இயற்கை சார்ந்த பொருளிலிருந்து பெற படுவதால் வளர்ந்த நாடுகளிலும் அலோவேரா சார்ந்த பொருட்கள் சிறந்த சந்தை வாய்பை பெற்றுள்ளது.


ஜெல்

வீட்டில் வளர்ப்பதால் சிறு காயங்கள் ஏற்படும் போது இதனை காயங்கள் மேல் தடவ விரைவில் குணம் காணலாம். சிறிய சிறிய சரும நோய்களுக்கு இதனை வெட்டி பூச நிவாரணம் உண்டு. கோடைகாலங்களில் சூரியவெம்மையை (Sunburn) குறைக்க இதன் மடலை வெட்டி முகம், கைகளில் பூசனால் சருமத்தை காத்துக் கொள்ளமுடியும். தலையில் ஏற்படும் பொடுகு போன்ற பிரச்னைகளுக்கு கற்றாழையின் கூழை தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் குளிக்க பலன் கிடைக்கும். இதன் ஜெல்லை நன்கு கழுவி உண்ண தேக பொலிவு உண்டு. நிதம் சாப்பிடக்கூடாது. வியர்வையில் கற்றாழை வாசம் இருக்கும். மலசிக்கல், குடல் புண்களுக்கு பாரம்பரிய வைத்தியர்கள் இதனை பரிந்துரைப்பர்.

கசப்புத்தன்மை மிக்க குறைவாயுள்ள ஒரு வகை

நிறைய வகைகள் இதில் உண்டு. கசப்பு தன்மை அதிகமுள்ளது, பொதுவாக லேசான மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் அதன் சாறு இருக்கும். கற்றாழையின் மணம் அதிகமிருக்கும். இதன் ஜெல்லை நன்கு கழுவி உண்ண வேண்டும். கசப்புத்தன்மை மிக்க குறைவாயுள்ள ஒரு வகையின் சாறு ஒடித்த சிறிது நேரத்தில் சிவப்பு நிறமாக மாறிவிடும். மணமற்றதாக இருக்கும். அதிக மருத்துவ குணமுள்ளது என்கின்றனர்.

ஊடுபயிராக இதனை வளர்க்கலாம்

பக்க கன்றுகள் மூலம் இனப்பெருக்கம் செய்யலாம். திசு வளர்ப்பு மூலமாகவும் இனபெருக்கம் பெரிய அளவில் செய்கின்றனர். நீர் தேவை குறைவு என்பதாலும் வறட்சியை தாங்கி வளரும் தன்மையுள்ளதால் வீட்டில் வளர்ப்பதோடு வசதியுள்ளவர்கள் விவசாய நிலங்களிலும் வணிக நோக்கில் ஊடுபயிராக இதனை வளர்க்கலாம். வணிக முறையில் அழகு சாதனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் ஒப்பந்த முறையில் பயிர் செய்வது நன்மை தரும்.

Tuesday, March 12, 2013

நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மருத்துவ தாவர கண்காட்சி


நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மைக்ரோ பயோலஜி துறை  மருத்துவ தாவரங்கள் பற்றிய கண்காட்சியையும் கருத்தரங்கையும் சிறப்பாக சென்ற 7-3-2013 அன்று நடத்தினார்கள்.

 முனைவர். லட்சுமணபெருமாள்சாமி அவர்கள் தலைமையுரையிலும், கல்லூரி முதல்வரும் மருத்துவ தாவரங்களின் முக்கியத்துவத்தை சிறப்பாக எடுத்துரைத்தனர். அரியவகை மருத்துவ தாவரங்கள் பார்வைக்கும், புகைபடங்களாகவும் விளக்கங்களுடன் அதிக அளவில் இருந்தது கண்காட்சியின் முக்கிய சிறப்பு  அம்சம். திரு.மதுராமகிருஷ்ணன் அவர்கள் இயற்கை விவசாயம் பற்றியும், அடியேன் மருத்தவ தாவரங்கள் பற்றியும், திரு. ஆன்டோ அவர்கள் முள்ளுசீதா பற்றியும் விளக்கம் தந்தோம். கண்காட்சியை நன்கு கண்டுகளித்த மாணவமணிகளும் அமைதி காத்து கடைசிவரை கருத்தரங்கில் பங்கேற்றது மகிழ்ச்சியாக இருந்தது.
.




 இன்றைய காலகட்டதில் அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரிய எளிய மருத்துவத்தை எடுத்து செல்வதற்கு இதுபோன்ற கண்காட்சியும் கருத்தரங்கும் ஒவ்வொரு கல்வி நிறுவனங்களிலும் நடைபெறுமானால் ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை நாம் காணலாம்.

கல்விப் பணிகளுக்கிடையே சிறப்பானதொரு நிகழ்வை நடத்திய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களுடன் கூடிய வாழ்த்துகள்.
Photographs Source : Viscom Dept,NASC  

Monday, May 21, 2012

முள்ளு சீதா (Graviola ) புற்றுநோய்க்கு எளிய வைத்தியம் !!!!

முள்ளு சீதா (Graviola )

பெயர்                : முள்ளு சீதா
தாவரவியல் பெயர்   : Annona muricata
மற்ற பெயர்கள்      :  Graviola
                       Soursop,
                       Brazilian Paw Paw,
                       Guanabana.
மாற்று மருத்துவத்தில் மக்கள் கவனம் செலுத்த ஆரம்பித்தவுடன் நிறைய உபயோகமான செய்திகள் வலைதளங்களின் மூலம் பிரபலமாகி வருகிறது. தற்சமயம் முகநூலில் மிகப் பிரபலம் ஃக்ரவயோலா என்று அழைக்கப்படும் முள்ளு சீதா.  அமேசான் காடுகளில் இந்த பழத்தை பழங்குடியினர் பல்வேறு நோய்களை குணப்படுத்த உபயோகித்தனர். ஒரு பன்னாட்டு நிறுவனம் மில்லியன் டாலர்களில் பொருட்செலவு செய்து புற்றுநோய்க்கு இப்பழத்தை உபயோகப்படுத்தி தீர்வு கண்டதாகவும் பின் அதனை காப்புரிமை பெற முடியாததால் ஆய்வை விரிவுபடுத்தாமல் கைவிட்டதாகவும் பின்பு ஆய்வு செய்த விஞ்ஞானிகளில் ஒருவர் இதனை வெளியுலகிற்கு அறிவித்ததாகவும் ஒரு மாற்று மருத்துவ நூலில் படித்தேன். கர்ப்பகாலத்தில் இதனை அருந்தக் கூடாது என்கிறார்கள். தொன்றுதொட்டு பழக்கத்தில் உள்ள மருத்துவ மரமென்றாலும் சிலர் இதனை அதிகம் சாப்பிடக்கூடாது பக்க விளைவுகள் உண்டு என்கிறார்கள்.
பழத்தின் நீள் வெட்டுத் தோற்றம்

இருப்பினும் நவீன மருத்துவ முறையில் கிமோ தெரப்பி என்னும் சிகிச்சைக்கு பின் உடனடி பக்க விளைவுகள் மற்றும் செலவு இவைகளை கணக்கிட்டால் தொன்றுதொட்டு பழக்கத்தில் உள்ள முள்ளு சீதா நன்று  என்றே தோன்றுகிறது.
நன்கு வளர்ந்துள்ள முள்ளு சீதா
இம்மரம் அமேசான் காடுகளில் வளரும் ஒரு சிறுமரம். இதன் பட்டை, இலை, பழம் எல்லாவற்றையும் மக்கள் நோய்களை குணமாக்க பயன்படுத்துகின்றனர். பழங்கள் உற்பத்தி குறைவு என்பதாலும் இலைகளிலும் நோய் தீர்க்கும் குணம் இருப்பதால் இதனை பதப்படுத்தி டீ போன்று அருந்துகின்றனர். மற்ற நாடுகளில் வியாபார ரீதியாக விற்பனையில் உள்ளது.
வீட்டில் நன்கு வளர ஆரம்பித்துள்ள முள்ளுசீதா

தற்போதைய உணவு பழக்கம் அளவிற்கு மீறிய இரசாயன மருந்து மற்றும் உரங்கள் இவை புற்று நோய்க்கு வழிவகுக்கின்றது. இதனை குறைப்பதற்கு மாற்று மருத்துவத்தில் வழி உண்டு என்பதை பரம்பரை ஞானமும் விஞ்ஞானமும் சொல்கிறது. எடுத்துக் கொள்வதும், விட்டுவிடுவதும் அவரவர் கையில் உள்ளது.
பதப்படுத்திய ஃக்ரேவையோலா டீ



Tuesday, May 15, 2012

சிறுநீரக செயல்பாட்டை திரும்ப பெற இஞ்சி ஒத்தடம் - நமது பாரம்பரிய முறை


சில எளிய மருத்துவ முறைகளை இந்த வலைப்பூவில்  அவ்வப் போது பதிவிடுகிறேன். இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில் எளிமையாக மிக குறைந்த செலவில் திருப்ப பெற்ற ஒரு விஞ்ஞானயின் உண்மை சம்பவம் என்பதாலும், தேதி வாரியாக செயல்பாடுகள் (ஆங்கில வலைப்பூவில் அவரது மகன் ) பதிவு செய்யப்பட்டுள்ளதாலும், மற்றவர்களுக்கு நிச்சயம் பயனளிக்குமென்பதாலும் இதனை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இது திரு. வேல்முருகன் அவர்களின் வலைப்பூவிலிருந்து முழுமையாக எடுக்கப்பட்டது.

இன்று எதுவென்றாலும் மருத்துவமனை, மாத்திரைகள், மருந்துகள் என்று இன்றைய சமூகம் உள்ளது. ஒரு சிறு தலைவலி போல் இருந்தால் கூட உடனடி மாத்திரை. உணவே மருந்து என்று வாழ்ந்த தமிழன், இன்று மருந்தே உணவு என்று வாழ்கிறான் என்று சிலர் கூறுவது உண்மையாகத்தான் உள்ளது. 

கடந்த சில வருடங்களாக நமது ஊரில், குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு சிறுநீரக செயலிழப்பு (Kidney failure) அதிகம் நடைபெறுகிறது. இதற்கு பல பெரிய வைத்தியர்கள் கொண்டு பல ஆயிரங்கள் செலவு செய்தும் முழு பலன் அடைவதில்லை. இங்கு முழுவதுமாய் செயலிழந்த, இன்றைய தொழிற்நுட்ப வைத்தியர்களால் இனி ஒன்றுமே செய்ய இயலாது என்று கை விடப்பட்ட ஒர் சிறு நீரகத்தின் செயல்பாட்டை 5%திலிருந்து 80%மாய், இரண்டே மாதத்தில் மாற்றிய ஒர் கதையை இங்கு கூறுகிறேன். நான் கதையென்று சொன்னவுடன், ஏதோ கட்டு கதையென்றோ, எங்கெனும் புத்தகத்தில் படித்தது என்றோ நினைக்க வேண்டாம். இது உண்மை, நானே அருகில் அமர்ந்து கண்டு வியந்த உண்மை.
 
மதுரையில் எனது பேராசிரியர் திரு. சண்முகம் அவர்களுக்கு 2006ல் திடீரென்று சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரது சிறுநீரக செயல்பாடு 5%க்கும் (ஒரு நாளைக்கு 50 மில்லி லிட்டர் சிறுநீர் வெளியேற்றம்) கீழ் சென்றுவிட்டது. இந்த செயலிழப்புக்கு முக்கிய காரணம் அவர் கொழுப்பை (Cholesterol) கட்டுபடுத்த உட்கொண்ட ஒரு வகை மருந்துகள் (statin drugs) என்பது தனிக்கதை.
 
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியபின் தினமும் மூன்று முறை பெரிடொனியல் டயாலிசிஸ் (Peritonial dialysis) அவரே செய்து கொண்டார். டயாலிசிஸினால் அனைத்துச் சத்துக்களும் ஊறியப் பெற்று துரும்பாய் இளைத்து, நடக்க கூட சக்தியின்றி சோர்ந்து போனார். அவரது மகன் திரு.பாரி அவர்கள் கணிணி வல்லுநராக இருந்தாலும் ஆன்மீகம், யோகா, இலக்கியம், சுற்றுபுறவியல் போன்றவற்றில் அதிக ஈடுபாடு உள்ளவர். அவர் இயற்கை வழியின் படி, பழங்கால மருத்துவத்தில் கூறியுள்ள இஞ்சி ஒத்தட முறையை தந்தைக்கு கூறினார்.

எனது பேராசிரியர் அடிப்படையில் ஒர் ஆய்வாளர் என்பதால், தன் சிறு நீரகத்தையே ஆய்வு பொருளாய் கொண்டு இந்த இயற்கை வழியை பரிசோதித்தார். ஆம் உண்மையிலேயே அவர் ஆய்வுதான் செய்தார், தினமும் எவ்வளவு சிறுநீர் வெளியெறுகிறது என்று அளந்து, குறித்து வைப்பார். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, சிறுநீரை ஆய்வகத்திற்கு அனுப்பி அதிலுள்ள, அனைத்து சத்து மற்றும் உப்பு பொருட்களின் அளவை அறிந்து அதையும் ஆய்வு செய்வார். மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுக் கட்டுப்பாட்டையும் கடுமையாக பின்பற்றினார். இதன்மூலம் இரண்டே மாதத்தில் சிறுநீரக செயல்பாடு தினமும் 50 மில்லிலிட்டர் (5%) சிறுநீரக வெளியேற்றத்திலிருந்து  650-700 மி.லி சிறுநீர் (80%) வெளியேற்றம் என்று தனது செயல்பாட்டை திரும்ப பெற்று, இன்று முழுவதும் குணமடைந்துள்ளார்.
இஞ்சி ஒத்தடம்:  இஞ்சி ஒத்தட முறையை கீழே விரிவாக கூறியுள்ளேன். எனது ஆசிரியருக்கு சில மாதங்கள் நானே, இந்த ஒத்தடம் கொடுத்து உள்ளேன் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.
  1. ஒரு பானையில் மூன்று லிட்டர் நீரை கொதிக்க வைக்கவும்.
  2. 125கி இஞ்சியை துண்டு துண்டாக நறுக்கி, மிக்சி அல்லது அம்மியில் அரைத்து கொள்ளவும்.
  3. அரைத்த இஞ்சியை ஒரு துணியில் சிறு மூட்டை போல் கட்டவும்.
  4. இப்போழுது கொதிக்கும் நீரில் இஞ்சிச் சாரை நன்கு பிழிந்துவிட்டு, துணி முடிச்சையும் போட்டு ஒரு தட்டை கொண்டு மூடவும்.
  5. அடுப்பை குறைந்த எரி நிலையில் (சிம்) 20 – 25 நிமிடங்கள் வைக்கவும்.
  6. பிறகு அடுப்பை அணைத்துவிட்டு மூடிய நிலையிலே 5 நிமிடங்கள் விடவும்.
  7. சிகிச்சைக்கான நபரை சட்டையை கழற்றிவிட்டு தலைக்குப்புற படுக்க சொல்லவும்.
  8. பிறகு ஒரு சிறு துணியை, கொதிக்கும் இஞ்சி நீரில் நனைத்து புழிந்து, வேறு ஒரு கிண்ணத்தில் புழியவும். அந்த துண்டை சிறுநீரகம் அமைந்துள்ள முதுகின் அடிபகுதியில் விரித்து போடவும்.
  9. சூடு தணிந்தவுடன் துணியை மீண்டும் நனைத்து, விரித்து தொடரவும். இவ்வாறாக நீர் றும் வரை தொடர்ந்து அரை மணி நேரம் செய்யவும்.

பாதத்தின் நான்காம் விரல்: நம் முன்னோர்கள் அறிவாளிகள். நமது சடங்குகள் அனைத்திற்கும் ஒர் அறிவியல் காரணமுண்டு. உதாரணமாக, பெண்ணின் கால் இரண்டாம் விரலில் அவளின் கர்பப்பையின் நரம்பு முடிவுகள் உள்ளன. அதன் செயல்பாட்டை ஊக்குவிக்கவே திருமணத்தின் அன்று பெண்ணின் இரண்டாம் விரலில் மெட்டி அணிவிக்கப்படுகிறது. அதை போலவே பாதத்தின் நான்காவது விரலில் சிறுநீரக நரம்புத் தொடர்கள் முடிவடைகின்றன. ஆகவே, அமைதியான இடத்தில் அமர்ந்து முழுமனதுடன் நான்காம் விரலை தினமும் சிறிது நேரம் சுற்றி சுற்றி அமுக்கிவிடுவார் (மசாஞ்). இச்செய்கை சிறுநீரகத்தை புத்துணர்வு அடைய செய்யும்.
உணவு முறை
சிறுநீரக செயல்பாட்டை சீர் செய்வதற்க்கு, உணவுக் கட்டுபாடு மிகவும் அவசியமானதாகும்.
சோடியம்: உப்பை தவிர்ப்பதன் மூலம் சோடியம் அளவை குறைக்கலாம். எனவே உணவில் அரை உப்பு சேர்த்து கொள்ளவும். உப்புக்கு பதில் எலுமிச்சை சாறு, மிளகு அல்லது குறைந்த அளவு சோடியமுள்ள ஏதெனும் தாவர இலைகளை சேர்த்து கொள்ளவும். நீ ங்கள் பெரிடோனில் டயாலிசிஸ் செய்தால் உப்பை குறைக்க வேண்டாம், ஏனெனில் டயாலிசிஸினால் அதிக அளவில் சோடியம் வெளியெற்றப்படுகிறது.
பொட்டாசியம், பாஸ்பரஸ்:  உணவில் பொட்டாசியம், பாஸ்பரஸ் அளவையும் குறைத்துக் கொள்ளவும். பயிர் வகைகளை தவிர்க்கவும். காய்கறிகளிலுள்ள பொட்டாசியம் அளவை சமைப்பதன் மூலம் குறைக்களாம். மேலும், காய்களை துண்டுதுண்டாக நறுக்கி ஒர் பானை நீரில் 4 மணி நேரத்திற்கு ஊறவைத்து உண்பதன் மூலமும் பொட்டாசியம் அளவை குறைக்களாம். பாஸ்பரஸ் நிறைந்த பா ல் மற்றும் பால் பொருட்கள் தவிர்க்கவும்.
புரதங்கள் (ப்ரோடீன்): புரதங்கள் மனித உடலுக்கு இன்றியமையாதது. டயாலிசிஸ் செய்பவர்கள் அதிகம் புரதத்தை இழக்கிறார்கள் எனவே அவர்கள் புரதம் நிறைந்த உணவுகளை சேர்த்துகொள்ள வேண்டும். குறிப்பாக ஊறவைத்த, முளை கட்டிய  பயிர்கள் மிகச்சிறந்த புரத பொருளாகும்.

நீர்: நீரின்றி அமையாது இவ்வுலகமென்பது போல், நமது சிறுநீரக செயல்பாட்டுக்கும் அதன்மூலம் இரத்த அழுத்த கட்டுபாட்டுக்கும் நீரின் அளவு முக்கியமானது. தினமும் 1.4 லிட்டர் நீர் அருந்தவும். அதிக நீர் உயர் இரத்த அழுத்திற்க்கு வித்திடும். நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் பழங்கள், சாம்பார், இரசம் முதலியவையும் நமது நீர் தேவையை பூர்த்தி செய்கிறது என்பதை நினைவில் கொள்க.
சேர்த்து கொள்ள வேண்டியவை
ஒமம்: ஒம இலை சிறுநீரக செயல்பாட்டுக்கு மிகவும் நல்லது. எனவே தினமும் உணவுடன் சிறிது ஒம இலையை சேர்த்து கொள்ளவும்.
புளி: புளியிலுள்ள டார்டாரிக் அமிலம், சிறுநீர ஆக்சலேட் கற்கள் உருவாக்கத்தை தடுகிறது. புளியை அதிகம் உணவில் சேர்த்து கொள்வதால்தான் இந்தோனேசிய மக்களுக்கு அதிகம் சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படுவதில்லையென்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மஞ்சள்: மஞ்சள் சிறுநீரக செயல்யிழப்பை தவிர்க்கவும், இழந்த செயல்பாட்டை புத்துணர்வு அடையவும் செய்யும் மகிமையுடையது என்று சித்த மருத்துவத்தின்படியும், இக்கால அறிவியலின்படியும் நிருபிக்கபட்டுள்ளது.
காய்கறிகள்: பூண்டு, வெங்காயம், காரட், கத்திரிக்காய், முள்ளங்கி, பச்சைப் பட்டாணி, முட்டைக்கோஸ், காலிபிளவர்.
பழங்கள்: ஆப்பிள், திராட்சை, எலுமிச்சை, பேரிக்காய், அன்னாசி, ப்ளம்ஸ், தர்பூசணி  
எண்ணெய்: நல்லெண்ணெய், ஆலிவ்
தவிர்க்க வேண்டியவை
காய்கறிகள்: தக்காளி, புழுச்சைகீரை, உருளை, சர்க்கரைவள்ளி கிழங்கு
பழங்கள்: வாழை, மாம்பழம், பப்பாளி, ஆரன்ஜு, உலர் பழங்கள்
English Blog
தமிழ் வலைப்பூ
நன்றி: திரு. பாரி & திரு. வேல்முருகன்
படம் உதவி : வலைதளம்

Friday, May 11, 2012

நோயணுகா நெறிகளும் எளிய முறையில் மூலிகை மருந்துகளும் - இலவச மின்.நூல்


திரு.சு.முத்து அவர்களின் "நோயணுகா நெறிகளும், எளிய முறையில் மூலிகை மருந்துகளும்" என்ற இந்த இலவச மின்.நூல் மிகப் பயனுள்ள ஒன்று. நோய் நம்மை அணுகாமல் எப்படி பாதுகாப்பது, நோய் வந்த பின் எவ்வாறு அதிலிருந்து  குணமாவது, மூலிகைகளால் தீரும் நோய்களும், செய்முறை குறிப்புக்கள், மூலிகைகளின் பட்டியல் மற்றும் தாவரவியல் பெயர் அகர வரிசை என மிக எளிமையாக ஆனால் மிகப் பயனுள்ள முறையில் நாம் புரிந்து கொள்ளும் வகையில் தொகுத்துள்ளார். சிறப்பானதொரு இலவச மின் நூலை நமக்கு அளித்த திரு.சு. முத்து அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும். மின் நூல் பதிவிறக்கம் செய்ய கீழ்கண்ட தொடர்பை பயன்படுத்தவும்

Saturday, April 28, 2012

வெண்நுணா (நோனி) – சர்வரோக நிவாரணி


தாவரவியல் பெயர் : Morinda Citrifolia
தமிழ் பெயர்        : வெண்நுணா,
மற்ற பெயர்கள்     : இந்தியன் மல்பெரி
  மாற்று மருத்துவத்தில் மக்கள் ஆர்வம் காட்டி வருதால் சில எளிய மருத்துவ முறைகளும், சில தாவரங்களும் தற்சமயம் பிரபலமாகி வருகின்றது. அந்த வரிசையில் இந்த வெண்நுணா என்னும் நோனி முக்கியத்துவம் பெறுகிறது. மிக நீண்ட நோய் பட்டியலை வெளியிட்டு குணம் கிடைக்கிறது என்று விளம்பரம் செய்கிறார்கள். உண்மையும் உண்டு. இது மருந்தல்ல சத்துள்ள பானம்.   ஹவாய் மற்றும் தகத்தி தீவு போன்ற பகுதிகளின் நோனி பழச்சாறு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவிலும் இப்பழச் சாறு கிடைக்கிறது. 4 இலக்கத்தில் விலை உள்ளது. பொதுவாக கடற்கரை பகுதிகளில்தான் வரும்  என்று நம்பப்பட்ட இம்மரம் உள்நாடுகளிலும் நன்கு வளர்கிறது. சற்று துர்வாசம் தரும் இப்பழத்தை சாறு எடுப்பதற்கு பதிலாக இலையை கீரையாக உட்கொண்டாலும் பலன் உண்டு என கூறுகிறார்கள்


பரவலாக தமிழகத்தில் காணப்படும் மஞ்சநத்தி என்று அழைக்கப்படும்  Morinda Tinctoria வும் இக்குடும்பத்தைச் சார்ந்ததே ஆனால் பல்வேறு நாடுகளில் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு அதிக  மருத்துவ குணம் உடையது என வெண்நுணாவை தேர்ந்தெடுத்துள்ளனர். உணவே மருந்து மருந்தே உணவு என்ற கொள்கையில் நாம் வெண்நுணாவை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்

Wednesday, October 19, 2011

வெண்புள்ளி குறைபாட்டிற்கு வெற்றிகரமான வீட்டு வைத்தியம்.


"அழகானவள்" என்று பேரெடுக்க ஆசைப்படாத பெண்ணே உலகில் இல்லை. அழகிற்கு ஒரு ஆபத்து என்றால் அவளைப் பொருத்தவரை வாழ்கையே அஸ்தமனமாகிவிடும். ஆனாலும் சிலரிடம் சித்து விளையாட்டுக்களைக் காட்டி இயற்கை கொட்டமடிக்கும். வெண்புள்ளி நோயால் எந்த ஊனமும் இல்லை என்றாலும் எல்லாம் ஊனமடைந்து விட்டதாக மனம் குறுகிவிடும். மேலும் மனதிற்குள் அழுவது மங்கையர்க்கு கைவந்த கலை. உடல் நோய் உடலை மட்டும் வதைக்கும். உள்ளத்து நோய் உள்ளத்தோடு உடலையும் சிதைக்கும். அழகு தேவதையாய் அடியெடுத்து வைத்தவள்தான் எங்கள் மருமகள் ஹேமா.

 
முகம் சுழிக்கும் முன்னே முத்தொன்றுப் பெற்றுக் கொடுத்தாள் எங்கள் கையில். புதிய உயிர் ஒன்றின் வரவால் புத்துயிர் பெற்றது எங்கள் வாழ்க்கை. எல்லாம் இன்பமயம். யாருக்குமே எந்தக் குறையுமில்லை மருமகளின் காலில் தோன்றிய கடுகளவு வெண்புள்ளி தவிர. சிரிப்பால் மறைத்துக் கொண்டிருந்தாள் சில காலம், பின்னர் சிரிப்பை மறந்தாள் சில காலம். அவளுக்கு ஓர் குற்ற உணர்வு காரணமே இல்லாமல். பூவைத் தொடுவது போல் நாங்கள் அவளைத் தொட்டாலும், தீயைத் தொடுவதுபோல் அவள் எங்களைத் தீண்டினாள். அதிக அன்பு செலுத்திப் பார்த்தும், தோல்வியே மிஞ்சியது எங்களுக்கு.

எங்களைவிட ஆங்கில மருத்துவத்தின் மீது அபார நம்பிக்கை  அவளுக்கு. மருந்துகளின் எண்ணிக்கையும், டாக்டர்களின் எண்ணிக்கையும் கூடக்கூட வெண்தேமல் பரவும் வேகம் அதிகமாயிற்று. முடிவு????  வழக்கம்போல் தான் ---கிட்னி பிராப்ளம், ஹார்ட் பிராப்ளம், மூச்சுத் திணறல்....... பிறகு ஒரு நாள் ஹேமாவுக்கு வந்தது கோமா. அவளாக பயந்து, ஆங்கில வைத்தியத்தை அடியோடு விட்டு விட்டாள்.  அவள் முகத்தில் சிரிப்பு  இல்லாததால் நாங்களும் சிரிக்க முடியவில்லை. ஒரு நாள் சித்த வைத்தியர் வடிவில் தெய்வம் அவளுக்குக் காட்சி அளித்தது.


சின்ன வைத்தியம் ஒன்று சொல்கிறேன் சீரியஸாக எடுத்துக் கொள்வாயா? என்று கேட்டார்.

சீரியஸான வைத்தியங்களே என்னை சின்னப்படுத்திவிட்டபின், சின்ன வைத்தியம் என்னை என்ன செய்துவிடும்? சொல்லுங்கள் செய்கிறேன் என்றாள். 

காலை வெறும் வயிற்றில், கருவேப்பிலை கொழுந்து ஒரு கைபிடி அளவு எடுத்து அத்துடன் கீழாநெல்லி கொழுந்துஇலை ஒரு கைபிடி சேர்த்து, மிக மெதுவாக மென்று விழுங்கிவா என்றார்.

ப் பூ .... இவ்வளவுதானா? என்றாள்.

நிறைய நீர் குடி. உணவைக் குறைத்து பழங்கள் பல சாப்பிடு என்றார்.

பத்தியம் ஏதேனும் உண்டா? என்றாள்

சொல்ல மறந்துவிட்டேன். வெள்ளை சக்கரையை ( White Sugar) வாயால் உச்சரிக்கவோ, கண்ணால் பார்க்கவோ கூடாது என்றார்.

சனியனை விட்டு ஒழித்ததால் பிணியிலிருந்து விடுதலை பெற்றாள் எங்கள் குலமகள்.
 “உலகத்திற்கு இதைச் சொல்லவேண்டும் மாமா என்றாள்.
இணைய தளத்தில் பரிமாரக் காத்திருக்கிறார்கள் இனிய நண்பர்கள், உன்னுடைய போன் நம்பர் கொடுக்கத் தயாரா? என்றேன்.
அதற்கு போட்டோக்களும் தருகிறேன் மாமா என்றாள்.

எத்தனை வேதனைப்பட்டிருந்தால் அடுத்தவர்க்கு இது பயன்படட்டும் என்ற துணிவோடு போட்டோக்களைக் கொடுக்க முன் வருவாள் என்று எண்ணி நாங்கள் பாராட்டினோம் அவளை. நீங்களும் வாழ்த்துங்கள். வாழட்டும் அவள் இன்னுமொரு நூறாண்டு சுமங்கலியாக.

மது. இராமகிருஷ்ணன்
இயற்கை விவசாயி
சந்தோஷ் பார்ம்ஸ்
பொள்ளாச்சி -642 114.

திருமதி. ஹேமா உமாசங்கர்
கைபேசி எண்.85262 32442 ( தயவு செய்து மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை)

இணைப்பு
பலருக்கும் பயன்பட இணைய தளத்தில் இதனை இணைக்க பாடுபட்ட அண்ணன் திரு வின்சென்ட் மற்றும் அண்ணன். திரு ஓசை செல்லா அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள். இதை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்லும் உங்கள் ஒவ்வொருவருக்கும் எங்கள் நன்றிகள்.
மது. இராமகிருஷ்ணன். ஹேமா உமாசங்கர்.

மக்கள் பயனுற வேண்டும் என்ற உன்னத எண்ணத்துடன் வாழ்வில் நடந்த அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டு நமது பாட்டி வைத்தியம் எளிமையானது, சிறப்பானது, அதிக செலவில்லாதது மற்றும் பின்விளைவு இல்லாதது  என்ற நம்பிக்கையை விதைத்த அண்ணன் திரு. மது. இராமகிருஷ்ணன், திருமதி. ஹேமா உமாசங்கர் இருவரின் குடும்பங்களுக்கும் உங்கள் சார்பாகவும் இவ்வலைப் பூவின் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகிறேன். வைத்தியத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி.