Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Friday, May 10, 2013

பரளிக்காடு “சுழல் சுற்றுலா”



கோடைவிடுமுறையில் பரபரப்பான நகர வாழ்கையிலிருந்து குளு குளு மலைவாசஸ்தலங்களை நோக்கி பயணித்து மிக அதிக தொகைகளை செலவழித்தும் உணவின்றி, நீரின்றி  கூட்ட நெரிசலில் சிக்கி கவலை தரும் பயணமாக மாறிவிடுவதுண்டு. மாறாக தமிழ்நாடு வனதுறையின் பரளிக்காடு சுழல் சுற்றுலா பரிசல் பயணம், கரைகளில் வனவிலங்குகள், அழகிய பறவைகள், ரீங்காரமிடும் வண்டுகள், ஒரு மணிநேர காட்டுப் பயணம் (Trekking), சுகமான ஆற்றுக் குளியல், சுவையான மதிய உணவு,  பழங்குடியின மக்களின் கலாச்சாரம், வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள வாய்ப்பு என  இயற்கையை  ஒரு நாள் முழுமையாக பரபரப்பின்றி அனுபவிக்க ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முன்பதிவு செய்து விடுமுறையை இனிதாக கழியுங்கள்.
 
பரிசல் துறையின் முகப்புத் தோற்றம்

புங்க மரநிழலில் அமர்ந்து பேச ஆசனங்கள்

அனுபவமிக்க பரிசல் ஓட்டுனர்கள்

மனதை கொள்ளை கொள்ளும் பரிசல் சவாரி

சுவைமிக்க உணவை பரிமாறவிருக்கும் மகளிர் குழுவினர்


வழக்கமான உணவு

"ஸ்பெஷல்" உணவு ராகிக்களியுடன் கீரை

விளையாட ஊஞ்சல்

கோவையிலிருந்து பேருந்து வசதி உண்டு

இந்த உல்லாச பயணத்திற்கு நாம் தரும் தொகை பழங்குடி மக்களின் அடிப்படை தேவைகளான சாலைவசதிகள், கல்வி, சுகாதாரம், குடிநீர், விவசாயதிற்கான உதவிகள் , தொலைதொடர்பு போன்ற நல்ல காரியங்களுக்கு பயன்படுகிறது.

தொடர்புக்கு

மாவட்ட வன அலுவலகம்,
கோவை வனக் கோட்டம்,
கோவை
வனவர் 90470 51011

L. தேசப்பன்
வனச்சரக அலுவலர்
காரமடை வனச்சரகம்
94433 84982.
Website : www.coimbatore.tn.nic.in
            : Baralikadu eco tourism

Wednesday, June 20, 2012

ரியோ+20(Rio+20) நிலையான அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் மாநாடு



20 ஆண்டுகளுக்கு முன்னர்   ரியோடி ஜெனிரோவில் நடைபெற்ற ஐ.நா அனைத்துலக பூமி மாநாட்டின் தொடர்ச்சியாக, தற்போது ரியோ+20 என்ற நிலையான அபிவிருத்திக்கான ஐ.நா மாநாடு இன்று தொடங்கி 3 நாட்கள் அதே ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறவிருக்கின்றது. மாநாட்டின் இரு முக்கிய நோக்கங்களில் ஒன்று எவ்வாறு பசுமை பொருளாதாரத்தை உருவாக்கி நிலையான வளங்குன்றா வாழ்வாதாரத்தை தந்து மக்களை வறுமையிலிருந்து மீட்பது. மற்றொன்று எவ்வாறு உலக நாடுகளிடையே கட்டமைப்பை ஏற்படுத்தி வளங்குன்றா வளர்ச்சியை நிலைநிறுத்துவது.

பசுமை பொருளாதாரம் பற்றிக் காண : http://maravalam.blogspot.in/2012/06/2012.html

தற்போதைய உலக மக்களின் நிலைமை.

இன்று உலக ஜனதொகை 7 பில்லியன். 2050 இது 9 பில்லியன் ஆகும்

ஐந்தில் ஒருவர் அதாவது 1.4 பில்லியன் மக்கள் ஒரு நாளைக்கு $1.25 (சுமார்.ரூ.68/=) கீழே உள்ள தொகையில் வாழ்கிறார்கள்.

1.5 பில்லியன் மக்கள் மின்சார பெற வழியின்றி இருக்கிறார்கள்.

2.5 பில்லியன் மக்கள் கழிவறை வசதியின்றி வாழ்கிறார்கள்.

சுமார் 1 பில்லியன் மக்கள் பட்டினியாய் படுக்கைக்கு செல்கிறார்கள்.

பசுமை இல்ல வாயு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இப்படியே தொடர்ந்து உயர்ந்தால் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் நன்கு அறிந்த உயிரினங்கள் மறைந்துவிடும்.


 இந்த நிலைமாறி நமது குழந்தைகளுக்கும், பேரகுழந்தைகளுக்கும் வருங்காலங்களில் அமைதியான வாழவைத்தர வேண்டுமானால் இந்த ரியோ+20 மாநாடு வெற்றி பெற வேண்டும். ரியோ+20 மாநாடு வெற்றி பெற இவ்வலைப் பூ மனமார்ந்த வாழ்த்துகளை உலக தலைவர்களுக்கு சமர்பிக்கின்றது.

“Rio+20 will be one of the most important global meetings on sustainable development in our time.”
– UN Secretary-General Ban Ki-moon


Wednesday, May 30, 2012

அக்ரி இன்டெக்ஸ் - 2012


ஆண்டுதோறும் நடைபெறும் அக்ரி இன்டெக்ஸ் இந்த வருடம் இன்று 30-05-2012  புதன் முதல் 03-06-2012 ஞாயிறு வரை கொடீசியா வளாகம் கோவையில் நடைபெறவுள்ளது.
நுழைவுக் கட்டணம்   :  ரூ.30.00

Tuesday, May 1, 2012

திரு.தசரத் மான்ஜி – மறக்கபட்டு வரும் நட்சத்திர உழைப்பாளி.


திரு.தசரத் மான்ஜி
 இது ஒருபேரரசன் தன் காதலுக்காக 20000 ட்களை அமர்த்தி 22 ஆண்டுகள் கட்டி எழுப்பி, இன்று ஆயிரக்கணக்கான உலக மக்கள் அதிசயிக்கும் தாஜ்மகால் அல்ல. ஒரு விவசாயக் கூலி தனியொரு மனிதனாய் 22 ஆண்டுகள்  உழைத்து 60 கிராம மக்களின் வாழ்க்கையை எளிமையாக்க வடித்த காதல் சின்னம்.
திரு.தசரத் மான்ஜி  தான் உருவாக்கிய மலைப்பாதை முன்பு.
 பீகாரில் கயா மாவட்டத்தின் கெலார் என்ற கிராமத்தைச் சேர்ந்த திரு.தசரத் மான்ஜி ஒரு நிலமில்லாத விவசாய கூலி. அன்பு மனைவி பாகுனி தேவி வீட்டிற்கு அருகில் மலையின் மறுபுறம் குடிக்கத் தண்ணீர் கொண்டு வரும்போது விழுந்து அடிபட்டார்.  சிறிது நாட்களில் சுகவீனப்பட மலையைச் சுற்றிக் கொண்டு மருத்துவமனைக்குக் கூட்டிச் சேர்க்குமுன்பே மனைவி இறந்துபோனாள். இந்த மலையின் குறுக்கே ஒரு பாதை இருந்திருந்தால் தன் மனைவி இறந்துபோயிருக்கமாட்டாள் என்று உறுதியாக நம்பினார் திரு.தசரத் மான்ஜி. கெலார் கிராமத்திலிருந்து வஜீரகஞ்  என்ற ஊர் சுற்றுப் பாதையில் எண்பது கிலோமீட்டர் தூரத்தில்  இருக்கிறது. அங்குதான்  இவர்களுக்கான  மருத்துவ மனை இருந்தது. வஜீரகஞ்க்கு 13  கி.மீ.தொலைவில்  பாதை  அமைக்க முடியும். ஆனால் யாரும் அதை செய்ய முன்வரவில்லை. விளைவு 30 அடி அகலம், 360 அடி நீளத்திற்கு ஒரு பாதையை உருவாக்கும் பணியை 1959 ஆண்டு மேற்கொண்டார். மக்கள் இவரை பைத்தியகாரனாக பார்த்தார்கள் சேர்ந்து உழைக்கவரவில்லை ஆனாலும் விடாமுயற்சியால் பாதையை 1981 ஆண்டு முடித்தார். 60 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இன்று 13 கிலோமீட்டரில் நகரத்தை அடைகிறார்கள். அன்றாடம் 8 கி.மீ தூரம் பள்ளிக்கு நடந்த அக்கிராமத்தின் குழந்தைகள் 3 கிலோ மீட்டரில் இன்று பள்ளியை அடைகிறார்கள். வழக்கம் போல் வாழ்ந்த காலம் வரை அந்த மாமனிதனின் உழைப்புக்கு மதிப்பளிக்காத அரசாங்கம், 18 ஆகஸ்ட் 2007 அன்று இறந்த அவருடைய உடலை மட்டும் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தது.


இன்றைய நவநாகரீக மனிதனை எடுத்துக் கொள்ளுங்கள் எல்லாவற்றையும் பணத்தால் கணக்கிட்டு எதை சேமிக்க வேண்டுமோ அதனை சேமிக்காமல் இயற்கையை சுரண்டி தானும் அழிந்து எல்லா ஜீவராசிகளையும்  அழிக்கிறான். இந்த உழைப்பாளர் தினத்தன்று மக்களுக்காக உழைத்த பெரியவர் திரு.தசரத் மான்ஜி அவர்களின் உழைப்பை நினைவுகூர்வதில் இந்த வலைப்பூ மகிழ்ச்சியடைகிறது.

Saturday, March 31, 2012

புவி நேரம் (Earth Hour) 2012




ஒவ்வொரு வருடமும் இந்த நாளில் 1 மணிநேரம் விளக்கை அனைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மிக நல்ல விஷயம். ஆனால் மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்பிவிடுகிறோம். குழந்தைகளுக்கு நாம் எதற்காக செய்கிறோம் என்று கூட தெரியாது. அவர்களின் முக்கிய டீவி நிகழ்ச்சியை பார்க்க முடியவில்லை என்ற ஆதங்கம் அவர்களுக்கு. அதற்கு பதிலாக வருடம் முழுவதும்  விழிப்புணர்வு ஏற்படும் வகையில் சிலமாற்றங்கள் செய்தால் வருடம் அல்ல வாழ்நாள் முழுவதும் பயன் தரும். உ.த. ஒவ்வொரு வருடமும் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லுமுன் அழகாக தங்கள் நோட்டு,பாட புத்தகங்களுக்கு அட்டையிட்டு லேபிள் ஒட்டுவார்கள்.  இன்றைய காலத்தில் அவைகள் பெரும்பாலும் கார்டூன் படங்கள் (விளம்பரம்), நடிகர்களின் படங்கள் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால் தாவரவியல், விலங்கியல் பெயர்களை அவர்கள் நினைவுகொள்ள கஷ்டப்படுகிறார்கள். அதேபோன்று மழலைப் பள்ளிகளில் பழம், காய்கறிகளின் படங்களை தனியாக ஒட்ட வைத்து கற்றுதரும் போது மனத்தில் பதிவு செய்யமுடிவதில்லை. அவர்கள் அனுதினமும் பார்க்கும் போது எளிதில் மனதில் பதிவு செய்து கொள்வார்கள். மொழி ஒரு பிரச்சனையாக இருந்தாலும் இதனை சிறப்பாக செயல்படுத்த முடியும். இன்னும் இரண்டு மாதங்கள் முழுமையாக இருக்கும் நிலையில் யாரேனும் முன்வந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.

Wednesday, February 29, 2012

தமிழ்நாடு விவசாய பல்கலைக் கழகத்தின் மேம்படுத்தப்பட்ட அடுப்பு

மீண்டும் ஒரு டேங்கர் (சமையல் எரிவாயு) லாரிகளின் வேலை நிறுத்தம் துவங்கப்பட உள்ள நிலையில் சாமானியர்களின் இரத்த அழுத்தத்தை அதிகமாக்கும் நேரம். கிராமங்களில் கூட சமையல் எரிவாயு பிரபலமான நிலையில் பாதிப்பு நிச்சயம் இருக்கும். மின்பற்றாக் குறையுள்ள தமிழகத்தில் மின்அடுப்பு வகைகள் பலனளிக்கப் போவதில்லை. தீர்வு ??? சோதித்துப் பார்த்ததில் தமிழ்நாடு விவசாய பல்கலைகழகத்தின்  மேம்படுத்தப்பட்ட அடுப்பு சற்று ஆறுதல் தருவதாக உள்ளது

இருசுவர்கள் கொண்ட மண் அடுப்பு. வெளிச்சுவர் துவாரமின்றியும் உள்சுவர் மற்றும் கீழ்பகுதி துவாரங்களுடன் இருப்பதால் சுவர்களின் இடைவெளியில் காற்று உட்புகுந்து எரியும் பகுதிக்கு வருவதால் எரியும் தன்மை பாதிப்படைவதில்லை. விறகு முழுமையாக எரிபடுவதால் அதிக வெப்பமும், குறைந்த அளவு விறகும் இருந்தால் போதும் சமையலை முடித்துவிடலாம். சாம்பலை செடிகளுக்கு தூவி பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். எளிய வாழ்விற்கு இது உதவும் என்று எண்ணுகிறேன்.






மேலும் விபரங்களுக்கு

தமிழ்நாடு விவசாய பல்கலைகழகம்,
கோவை.
---------------------------------
திரு.மதனகோபால்
அலைபேசி எண் : 93453 57803, 98940 95499

Friday, December 30, 2011

5 ஆம் அறிவும் ‘பஜ்ஜியும்’


The belly rules the mind.  ~Spanish Proverb
வயிறு மனதை ஆள்கிறது ஸ்பெயின் நாட்டுப் பழமொழி
கண்களை மூடி தியானம்
உணவு கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பு
 அண்மையில் குன்னூர் சென்றிருந்தேன். வழியில்  தேநீர் அருந்த நின்றோம். நண்பர் பஜ்ஜி சாப்பிட்டார். அருகிலிருந்த குரங்கிற்கும் கொடுத்தார். பஜ்ஜியை கைபற்றிய குரங்கு மெதுவாக வாழைக்காய் பகுதியை மாத்திரம் சாப்பிட்டுக் கொண்டு மாவுப் பகுதியை கீழே தூக்கி போட்டது.
உணவு கிடைத்த நிம்மதி
வாழ்க்காயை மாத்திரம் உண்ணும் திறமை    




தூக்கி எறியப்பட்ட மாவுப் பகுதி

 மிருகங்களின் ஆரோக்கிய சூட்சமம்  புரிந்தது. எது வேண்டாம் என்று அதற்குத் தெரிகிறது. மேற்கண்ட பழமொழி மனிதர்களுக்கு மட்டும் தான் போல் தெரிகிறது. மிருகங்களின் மனம் வயிற்றை ஆளுகிறது. மனிதன் சில பிராணிகளை தனது உணவு கொடுத்து பழக்கியிருந்தாலும் சிலவற்றை அவைகளிடத்தில் திணிக்க முடிவதில்லை. குறிப்பாக அவைகளின் கூடுகளைப் பாருங்கள் குறிப்பாக தேனீ பலகோடி ஆண்டுகளுக்குப் பின்னும் அதே ஆறுகோண வடிவம்தான். மிகச் சிறந்த சமூக வாழ்வியலைக் கொண்டது தேனீ. மனிதனிடத்தில் வயிறு மனத்தை ஆளுகிறது எனவே பேராசையுடன் செயல்பட்டு  தன்னைத்தானே அழித்துக் கொள்வதோடு மற்ற உயிரனங்களையும் அழிக்கிறான். 6 ஆம் அறிவைத்தான் கேட்கவேண்டும்.