Showing posts with label இயற்கை இடுபொருள். Show all posts
Showing posts with label இயற்கை இடுபொருள். Show all posts

Friday, February 11, 2011

புகையாகும் பொக்கிஷம்.

புகையாகும்  இலைசருகுகள்.
பனிகாலங்களில் வேம்பு, புங்கன், தூங்குவாகை போன்ற மரங்கள் அதிகமாக இலைகளை உதிர்க்கும். நகரங்களில் பொதுவாக இவற்றை குவித்து தீயிட்டு கொளுத்துவோம். சிறந்த உரமான இதனை தொட்டிசெடிகளுக்கு மூட்டாக்கு இடுவதால் குறைந்த அளவு நீர் ஊற்றினால் போதும் ஈரம் காக்கப்படுவதோடு சிறந்த உரமாகவும் மாறிவிடும். குறிப்பாக வேனிற்காலத்தில் இந்த மூட்டாக்கு சிறப்பாக பயன்தரும்.
மூடாக்கு இட்டு செழிப்பாக வளரும்  செடி அவரை
தொட்டிகளும் அதிகப் பளு இல்லாமல் இருப்பதால் எளிதாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றலாம். தனியாக உரம் இடவேண்டிய அவசியம் இல்லை. பூக்களும், காய்கறிகளும் பெரிதாக நல்ல வனப்புடன் ஆரோக்கியமாக இருக்கும். இயற்கை நமக்கு தரும் பொக்கிஷம் இந்த காய்ந்த இலைகள், அவற்றை புகையாக்கி சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறோம். இந்த குப்பையை உரமாக்கி நகரவிசாயம் செய்வதால் கரிமம் நிலைபடுவதோடு சத்தான இயற்கை காய்,கனிகளும் நமக்கு கிடைக்கிறது. வீட்டின் முன்பு கிடைக்கும்  இலைகளை கொண்டு மாடியில் செடிஅவரை, செடிபீன்ஸ், முருங்கை, கறிவேப்பிலை, கீரைகள் போன்ற உபயோகமான செடிகளை நாம் வளர்க்கலாம்.
பெரிய பூக்களுடன் கூடிய யூபோர்பிய மிலி.

Friday, October 23, 2009

மண்புழு உரப்படுகை - எளிய தொழில்நுட்பம்

எதிர்பார்த்தபடி அக்ரி இன்டெக்ஸில் சில எளிய தொழில் நுட்பங்களை காட்சிக்கு வைத்திருந்தார்கள்.அவைகளில் ஒன்று மண்புழு உரம் தயாரிக்க உதவும் மண்புழு உரப்படுகை. மண்புழு உரம் தனியாக தேவைப்படுவதால் நாமே இதனை வாங்கி உபயோகிக்கலாமென்று வாங்கி நிறுவி பார்த்ததில் எளிமையாக உள்ளது. நிறுவுவதும் மிக எளிது. காற்று படுகையினுள் சென்றுவர வசதியாக வலைஅமைப்பு உள்ளது.மண்புழுகுளியல் நீர் (Vermiwash) எளிதாக எடுப்பதற்கு வசதி தந்திருப்பது இதன் சிறப்பு. அமைக்கும் போது இந்தப் பகுதி தாழ்வாக இருக்கமாறு அமைத்தால் எளிதாக மண்புழுகுளியல் நீர் சேகரிக்கலாம்.கட்டிடம் ,கூரை தேவையில்லையென தோன்றுகிறது. தேவைப்படின் இதற்கு மேலாகவே HDPE Sheet கொண்டு மிக எளிதாக கூரை அமைக்கலாம். வழக்கம் போல் எறும்புத் தொல்லை உண்டு. படுகையைச் சுற்றி மஞ்சள் பொடி இட வசதியாக உள்ளது. எறும்பு மருந்து இடுபவர்களுக்கும் வசதிதான் உரப்படுகையை சுற்றி இட்டாலும் புழுக்களுக்கும் மருந்திற்கும் இடையே உரப்படுகையிருப்பதால் புழுக்களுக்கு சேதம் இல்லை. மாடித்தோட்டத்தில் கூட பயன்படுத்த உகந்தது.
தொடர்பிற்கு
ஸ்ரீ அர்ஜுன் தார்ப்பாலின் இண்டஸ்ட்ரீஸ்
47, ராஜாஜி ரோடு,
சேலம். 636 007
செல் : 94422-12345

Wednesday, July 22, 2009

வேம்( VAM )என்னும் வேர் பூஞ்சானம்.

இது Vesicular Arbuscular Mycorrhiza (VAM) என்பதன் சுருக்கம். இது தாவரங்களுக்கு பயன் அளிக்கக்கூடிய வேர் பகுதியில் காணப்படும் ஒரு வகை பூஞ்சானம். தாவர வேர்களில் ஒட்டிக்கொண்டு வேரையும் மண்ணையும் இணைத்து மண்ணிலுள்ள பாஸ்பரசை நேரடியாகவும், மறைமுகமாக மற்ற சத்துக்களையும் நீரையும் எளிதாக உறிஞ்சி தாவரங்களுக்கு தரவல்லது. இது வேர்களை அதிக அளவில் உண்டாக்குவதால் விளைச்சல் அதிகரிக்க உதவுகிறது.

வேர் பூஞ்சானத்தால் அடர்த்தியான வேர்கள் உருவாகின்றன.

இதனால் ஏற்படும் நன்மைகள்.

வேர் பகுதி அதிக அளவில் இருப்பதால் தாவரங்கள் ஸ்திரமாக நிலத்தில் இருக்கும்.

வேர்களுக்கு மண்ணிலுள்ள நீரையும் சத்துக்களையும் (குறிப்பாக பாஸ்பரஸ்) எளிதில் உறிஞ்ச உதவுகிறது.

மண்ணிலுள்ள நோய் உண்டாக்கும் பாக்டீரியா மற்றும் பூஞ்சானம் தாக்காமல் தாவரங்களை பாதுகாக்கிறது.

நாற்றங்காலில் இருந்து மாற்றும் போது ஏற்படும் பயிர் எண்ணிக்கை இழப்பை குறைக்கும்.

ஹைபே ( Hypae) உதவியால் சத்துக்கள் உறிஞ்சப்படும் முறை.

வேர்களை தாண்டியுள்ள பகுதிகளிலிருந்து சத்துக்களையும் நீரையும் ஹைபே ( Hypae) உதவியால் தாவரங்களுக்கு அளிக்கிறது. எனவே தாவரங்கள் வறட்சியை சற்று தாங்கி வளரும்.

உர அளவை குறைப்பதுடன் விளைச்சலை அதிகப்படுத்த உதவுகிறது.

நாற்றுப் பண்ணைகளில் குறிப்பாக மரப்பயிர்களுக்கு அவசியம் தேவையானது இந்த வேர் பூஞ்சானம் வேர்கள் நன்கு உருவாகுவதால் மரங்கள் நல்ல வளர்ச்சி பெறும்.

ஹைபே ( Hypae) உதவியால் சத்துக்கள் உறிஞ்சப்படும் முறை.
மண்ணிற்கு ஊட்டம் கொடு தாவரத்திற்கு அல்ல (Feed the Soil Not the Plant) என்பாரகள். இந்த வேர் பூஞ்சானத்தை பொறுத்தவரை இது உண்மை
படங்கள் உதவி : திரு. இராமன்

Friday, March 20, 2009

குறைந்த விலையில் இயற்கை பூச்சிக்கொல்லி மருந்து சென்னை கல்லூரி மாணவர்கள் கண்டுபிடிப்பு

விவசாயிகளுக்காக குறைந்த செலவில் சென்னை லயோலா கல்லூரி ஆய்வு மாணவர்கள் உருவாக்கியுள்ள பொன்னீம் என்ற இயற்கை பூச்சிக் கொல்லி மருந்து அறிமுகப் படுத்தப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் பூச்சியியல் ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது. பூச்சியியல் விஞ்ஞானி பாதிரியார் இன்னாசி முத்துவை இயக்குனராக கொண்டு செயல்படும் இந்த ஆய்வு மையத்தில் பூச்சியியல் சம்பந்தப்பட்ட ஏராளமான ஆய்வுகள் நடந்து வருகின்றன. சுற்றுசூழல்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் குறைந்த விலையிலும் இயற்கை பூச்சிகொல்லி மருந்தை உருவாக்க இந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் தீவிர ஆய்வில் இறங்கினர். அவர்களுக்கு இயக்குனர் இன்னாசிமுத்து வழி காட்டியாக இருந்து உதவினார். இந்த ஆய்வு மாணவர்கள் புங்கை எண்ணை, வேப்பெண்ணை மற்றும் தாவரங்களில் பெறப்பட்ட சில பொருட்களைக் கொண்டு இயற்கை பூச்சிக் கொல்லி மருந்து உருவாக்கினார்கள். இதற்கு பொன்னீம் என்று பெயரிடப்பட்டுள்ளது. முற்றிலும் இயற்கையாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த பூச்சிக் கொல்லியைக் கொண்டு நெல்,பருத்தி, நிலக்கடலை, சோளம் உள்ளிட்ட தானியங்கள், காய்கறிகள், காபி,தேயிலை போன்ற மலைப்பயிர்கள் ரோஜா, மல்லிகை முதலான மலர்கள் ஆகிய வற்றை தாக்கும் அனைத்து வகையான பூச்சிகளையும் புழுக்களையும் அழிக்க லாம். இதை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது. உற்பத்தி அதிகரிப்பதுடன் தானியங்கள் மற்றும் பழங்களின் சுவை யும் அதிகரிக்கும். ஒரு லிட்டர் மருந்தை 400 லிட்டர் தண்ணீர் கலந்து ஒரு ஹெக்டேருக்கு பயன்படுத்தலாம். மாணவர்கள் உருவாக்கியுள்ள இந்த இயற்கை பூச்சிக் கொல்லியின் அறிமுக விழா லயோலா கல்லூரியில் நடந்தது. தமிழக அரசின் நுகர்வோர் செயல் பாடுகள் பிரிவின் உயர் அதிகாரி கா. பாலச்சந்திரன் அறிமுகப்படுத்தினார். ஒரு லிட்டர் பாட்டில் விலை ரூ135.00.
நன்றி :தீக்கதிர் 20-03-09

Monday, December 22, 2008

E.M. என்னும் திறநுண்ணுயிர்.

ஜப்பான் நாட்டின் Dr.டியூரோ ஹிகா என்பவரால் 1980களில் அறிமுகப் படுத்தப்பட்ட E.M. என்னும் திறநுண்ணுயிரி. இன்று உலகின் 120 நாடுகளுக்கு மேல் விவசாயம், சுற்றுசுழல், கால்நடை பராமரிப்பு, போன்ற துறைகளில் உபயோகப்படுத்தப்படுகிறது. Effective microorganisams என்பதின் சுருக்கமே E.M. இது இயற்கை இடுபொருள் என Eco cert சான்று தந்துள்ளனர்.
E.M-1. என்பது உறங்கும் நிலையிலுள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் தொகுப்பாகும். E.M-1. நீர்த்த பிறகே பயன்படுத்த வேண்டும். இதனை 1:1:20 என்ற விகிதத்தில் E.M.-1 :வெல்லம்(அ)கரும்பு சர்க்கரை :குளோரின் கலக்காத நீரில் 5-10 நாட்கள் பிளாஸ்டிக் கலன்களில் காற்று புகாமல் நிழலில் நொதிக்க வைக்க E.M-2 தயார். உருவாகும் வாயுவை வெளியேற்ற தினமும் 1 நொடி மூடியை திறந்து மூடவேண்டும். இதுதான் உபயோகத்திற்கு ஏற்றது. ஒரு மாததிற்குள் பயன்படுத்திடவேண்டும். நொதிக்க வைக்க கண்ணாடி கலன்களை தவிர்க்கவும்.
எங்கள் வீட்டில் சமையலறை, குளியலறை போன்ற இடங்களில் E.M-2 தான் உபயோகிக்கிறோம். விரைவாக காய்ந்து ஈரமின்றி இருப்பதுடன் ஈக்கள் வருவதில்லை, துர்வாசனை இல்லை. வீட்டை துடைப்பதற்குக் கூட E.M-2 வைத்தான் உபயோகிக்கிறோம். வாகனங்களை கழுவுவதற்கும், சிறுகுழந்தைகளின் உள்ளாடைகள் சுத்தம் செய்யவும் மிகவும் ஏற்றது. செலவு மிகமிக குறைவு என்பதுடன் ஒரு மிகச் சிறந்த இயற்கை பொருளை கடந்த 5 வருடங்களுக்கு மேல் உபயோகிக்கிறோம் என்ற திருப்தி உண்டு. பூனே, கோவை மாநகராட்சிகள் தங்களின் மாநகர கழிவுகளை E.M. கொண்டுதான் மக்க செய்து மறுசுழற்சி செய்கிறார்கள் என்பது உபரித் தகவல்.
நான் மிகமிக சிறிய அறிமுகத்தைதான் E.M. பற்றி தந்திருக்கிறேன். மேலும் விவசாயம், சுற்றுசுழல், கால்நடை பராமரிப்பு, போன்ற துறைகளில் உபயோகப்படுத்தப்படுவதைக் காணவும், மேலும் E.M. பயன்படுத்தி ‘பொக்காஷி’, E.M.-5 போன்றவை தயாரிக்கவும் கீழ் கண்ட தொடர்பை பயன்படுத்துங்கள்.
புகைபடம் 1 :வலைதளம்