Showing posts with label மூலிகை. Show all posts
Showing posts with label மூலிகை. Show all posts

Wednesday, December 10, 2014

பாசுமதி இலை


தாவரவியல் பெயர் :  Pandanus amaryllifolius


‘பாசுமதி அரிசி” என்ற விலைமிக்க அரிசியை அதன் மணத்திற்காக விஷேச காலங்களில் ‘புலாவ்”,  பிரியாணி, தேங்காய் பால் சாதம்  போன்ற உணவு வகைகளை  சமைக்கும் போது உபயோகிப்போம். ஆனால் கிழக்காசிய நாடுகளில் பிரபலமாகவுள்ள ஒரு தாவரத்தின் இலை  பாசுமதி அரிசியின் மணத்தை சாதாரண அரிசிக்கு தரும் என்றால் வியப்பளிக்கலாம். தமிழில் "பாசுமதி இலை" என்றழைக்கப்படுறது, ஆனால் இன்னும் பிரபலமாகவில்லை. “பேன்டன்” (Pandan)என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த தாவரத்தின் குடும்பம் மிகப் பெரியது எனவே  Pandanus amaryllifolius என்ற தாவரவியல் பெயர் கொண்ட தாவரம் தான் இந்த பாசுமதி இலை. வெப்பமண்டல தாவரம்,  நிழல் பகுதியில் சிறப்பாக வளர்கிறது. எளிதாக வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கலாம்.

Wednesday, June 18, 2014

கற்றாழை என்றழைக்கப்படும் “குமரி”

குமரி அல்லது சோற்றுக் கற்றாழை
வெப்ப மண்டலப் பகுதிகளுக்கு இயற்கை நிறைய அற்புதமான தாவரங்களை தந்துள்ளது. அவற்றில் ஒன்று கற்றாழை எனபடும் “குமரி” அல்லது “சோற்றுக் கற்றாழை”. ஆப்ரிக்காவை தாயகமாகக் கொண்ட காற்றாழையில் நிறைய வகைகள் உண்டு. நம் நாட்டில் பஞ்சம் ஏற்பட்ட போது காற்றாழையின் மடலை சீவி அதனுள் இருக்கும் “ஜெல்” பகுதியை உண்டு உயிர் வாழ்ந்ததாக பழைய நூல்கள் கூறுவதால் அதற்கு “சோற்றுக் கற்றாழை” என்ற பெயர் வந்திருக்கலாம். வெப்பத்தையும் வறட்சியையும் தாங்கி வளரக்கூடிய மருத்துவ குணங்கள் மிக்க கற்றாழையை எளிதாக வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கலாம்.

கண் திருஷ்டி , தீய சக்திகள் இவைகளை அண்டவிடாது என்ற நம்பிக்கையின் காரணமாக நகர்புறங்களில் கூட சில கடைகள், வீடுகளுக்கு முன் கட்டித் தொங்க விடப்படுகிறதை இன்றும் நாம் பார்க்கமுடியும். கிராமப்புறங்களில் மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணிகள் பற்றாமலிருப்பதற்காகவும், சிறிய கொசுக்களை ஈர்த்து வைத்துக்கொள்ளவும் தொங்க விடப்படுவது உண்டு. கற்றாழையை மருந்துப் பொருளாகவும் , அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுத்துகின்றனர். இன்று எல்லா கடைகளிலும் ‘அலோவேரா’ ஷாம்பு, சோப்புக்கள், க்ரீம்கள் நவீன பெண்களிடையே மிக பிரபலம். இயற்கை சார்ந்த பொருளிலிருந்து பெற படுவதால் வளர்ந்த நாடுகளிலும் அலோவேரா சார்ந்த பொருட்கள் சிறந்த சந்தை வாய்பை பெற்றுள்ளது.


ஜெல்

வீட்டில் வளர்ப்பதால் சிறு காயங்கள் ஏற்படும் போது இதனை காயங்கள் மேல் தடவ விரைவில் குணம் காணலாம். சிறிய சிறிய சரும நோய்களுக்கு இதனை வெட்டி பூச நிவாரணம் உண்டு. கோடைகாலங்களில் சூரியவெம்மையை (Sunburn) குறைக்க இதன் மடலை வெட்டி முகம், கைகளில் பூசனால் சருமத்தை காத்துக் கொள்ளமுடியும். தலையில் ஏற்படும் பொடுகு போன்ற பிரச்னைகளுக்கு கற்றாழையின் கூழை தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் குளிக்க பலன் கிடைக்கும். இதன் ஜெல்லை நன்கு கழுவி உண்ண தேக பொலிவு உண்டு. நிதம் சாப்பிடக்கூடாது. வியர்வையில் கற்றாழை வாசம் இருக்கும். மலசிக்கல், குடல் புண்களுக்கு பாரம்பரிய வைத்தியர்கள் இதனை பரிந்துரைப்பர்.

கசப்புத்தன்மை மிக்க குறைவாயுள்ள ஒரு வகை

நிறைய வகைகள் இதில் உண்டு. கசப்பு தன்மை அதிகமுள்ளது, பொதுவாக லேசான மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் அதன் சாறு இருக்கும். கற்றாழையின் மணம் அதிகமிருக்கும். இதன் ஜெல்லை நன்கு கழுவி உண்ண வேண்டும். கசப்புத்தன்மை மிக்க குறைவாயுள்ள ஒரு வகையின் சாறு ஒடித்த சிறிது நேரத்தில் சிவப்பு நிறமாக மாறிவிடும். மணமற்றதாக இருக்கும். அதிக மருத்துவ குணமுள்ளது என்கின்றனர்.

ஊடுபயிராக இதனை வளர்க்கலாம்

பக்க கன்றுகள் மூலம் இனப்பெருக்கம் செய்யலாம். திசு வளர்ப்பு மூலமாகவும் இனபெருக்கம் பெரிய அளவில் செய்கின்றனர். நீர் தேவை குறைவு என்பதாலும் வறட்சியை தாங்கி வளரும் தன்மையுள்ளதால் வீட்டில் வளர்ப்பதோடு வசதியுள்ளவர்கள் விவசாய நிலங்களிலும் வணிக நோக்கில் ஊடுபயிராக இதனை வளர்க்கலாம். வணிக முறையில் அழகு சாதனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் ஒப்பந்த முறையில் பயிர் செய்வது நன்மை தரும்.

Saturday, April 26, 2014

நெற்பவளம் என்னும் யோபுவின் கண்ணீர்


நெற்பவளச் செடி

ஜெபமாலையும் இயற்கையான துவாரமும்
நெற்பவளம்
பண்டைய உலகத்தில் இயற்கை சார்ந்த பொருட்கள் அணிகலன்களாகவும் ஆபரணங்களாகவும்  பயன்படுத்தபட்டுள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நெற்பவளம் என்னும் தானியம் உணவாகவும் ஆபரணமாகவும் பயன்படுத்தபட்டுள்ளது நாகரீகம் வளர ஆபரணங்கள் உலோகத்திற்கு மாறிய பின் “தங்கம்” இன்று அரசாட்சி செய்கிறது. தங்கத்தின் விலையும் உயர உயர நெற்பவளம்  மீண்டும் புத்துயிர் பெற ஆரம்பித்துள்ளது. ஆன்மீகத்தில் இதன் பங்கு கணிசமாகவுள்ளது. இதன் ஆங்கிலப் பெயரான "யோபுவின் கண்ணீர்"  (Job’s Tear ) என்பது கூட பைபிளில் யோபு என்ற செல்வந்தர் இறைபக்தியின் காரணமாக எல்லாவற்றையும் இழந்தபின் கூட பக்தியுடன் இருந்ததால் அவர் அதிகம் கண்ணீர் விட வேண்டியிருந்தது. அவரை கனப்படுத்தும் முகமாக “யோபுவின் கண்ணீர்” என்றழைக்கின்றனர்.  இன்றும் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் ஜெபமாலையாக நெற்பவளத்தையே உபயோகிக்கின்றனர். காலபோக்கில் நெற்பவளம் கிடைப்பது அரிதானதால் பிளாஸ்டிக் மணிகள் அந்த இடத்தை நிரப்பியுள்ளது.

பலவித ஆபரணங்கள்

“அன்னை தெரசா” அவர்கள் நெற்பவிள ஜெபமாலையுடன்.

நெற்பவிள காதணீ.


புல் வகை குடும்பத்தை சார்ந்த இப்பயிர் வெப்பமண்டலத்தைச் சார்ந்த கிழக்காசிய நாடுகளை தாயகமாகமாகக் கொண்டது. ஆண்டுப் பயிரான இதற்கு குறைந்த பட்ச நீர் போதுமானது. நன்கு நீர் கிடைக்கும் இடங்களில் 6 அடி உயரம் வளர்ந்து நிறைய மணிகளைத் தரும் .வடமாநிலங்களில் “வைஜயந்தி” என்று அழைக்கின்றனர். மருத்துவ குணம் கொண்ட இதனை தானியமாகவும் உட்கொள்ளலாம் அதை சமயம் கடினமான, பளபளக்கும், நடுவில் துவாரமுள்ள இம்மணியை கோர்த்து ஆபரணமாக அணிய உடல் ஆரோக்கியம் பெறும். மாலையாகவும் வளையல், காதணி என்று பல்வேறு அணிகலன்கள் செய்யப்படுகின்றன. “அன்னை தெரசா”அவர்கள் நெற்பவளத்தால் செய்யப்பட்ட ஜெபமாலையை உபயோகித்தார்கள் என்பது கூடுதல் தகவல். இந்து சமயத்திலும் இதனை மாலையாக அணிகிறார்கள். பௌத்த, முஸ்லிம் சமயங்களிலும் இதற்கு சிறப்பான இடமுண்டு. பெண்கள் சுய உதவிக்குழுகள் வீட்டுத்தோட்டதில் வளர்த்து வியாபார ரீதியாக இதனை ஏற்றுமதி கூட செய்ய வாய்புள்ளது.


Tuesday, September 4, 2012

அசோகமரம்- அழிவின் விளிம்பில் இருக்கும் பாரம்பரிய மரம்


அசோகமரமும் நெட்டி லிங்கமும்


பெயர்                  : அசோகமரம்
தாவரவியல் பெயர்     :   Saraca asoca
ஆங்கிலப் பெயர்       : Asoka Tree
தற்போதைய நிலை  : அழிவின் விளிம்பு                                                                                IUCN   Status : Vulnerable (IUCN 2.3) 
பாரம்பரிய இந்திய அடையாளங்களில் ஒன்று அசோகமரம். அசோகமரம் என்றவுடன் பொதுவாக நம் நினைவிற்கு வருவது நெட்டிலிங்க மரம் தான். இராமாயன காலத்தில் சீதையை அசோக வனத்தில் சிறை வைத்ததாக படித்திருக்கிறோம். ஆனால் காலப்போக்கில் அந்த உண்மையான மருத்துவ குணமிக்க அசோகமரத்தை விட்டு நெட்டிலிங்கத்தை அசோகமரம் என்று பின்வரும் சந்ததிகளுக்கு  அடையாளப்- படுத்திவிட்டோம். விளைவு இன்று நெட்டிலிங்கத்தை  அசோகமரம் என்று பெரும்பாலானவர்கள் நம்பிக் கொண்டிருப்பது வேதனை தரும் விஷயம்.                        
அசோகமர விதைகள்
அசோகமர பூக்கள்
 பெண்களுக்கான மரம். இதன் பட்டையும் மலர்களும் நமது மருத்துவத்தில் பயன்படுகிறது. பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறு, சூதகவலிக்கு பட்டையை கஷாயம் செய்து அருந்த குணம் உண்டு என இந்திய மருத்துவ நூல்கள் கூறுகின்றன
அசோகமர காய்கள்
அசோகமரம்


இதன் தற்போதைய நிலைமை அழிந்துவரும் இனத்தில் விளிம்பு நிலையில் உள்ளது. இம்மரம் சோகத்தை மாற்றி அசோகத்தை (மகிழ்ச்சியை) தரும் என்பது வழக்கு. மன்மதனின் மலர்கணையில் உள்ள மலர்களில் இதுவும் ஒன்று. கண்டிப்பாக ஒவ்வொரு பெண்கள் படிக்கும் கல்விநிலையங்களில் இருக்க வேண்டிய மரம் அசோகமரம். வீடுகளிலும் வளர்க்கலாம்
அசோக மர நாற்றுக்கள்

Wednesday, October 19, 2011

வெண்புள்ளி குறைபாட்டிற்கு வெற்றிகரமான வீட்டு வைத்தியம்.


"அழகானவள்" என்று பேரெடுக்க ஆசைப்படாத பெண்ணே உலகில் இல்லை. அழகிற்கு ஒரு ஆபத்து என்றால் அவளைப் பொருத்தவரை வாழ்கையே அஸ்தமனமாகிவிடும். ஆனாலும் சிலரிடம் சித்து விளையாட்டுக்களைக் காட்டி இயற்கை கொட்டமடிக்கும். வெண்புள்ளி நோயால் எந்த ஊனமும் இல்லை என்றாலும் எல்லாம் ஊனமடைந்து விட்டதாக மனம் குறுகிவிடும். மேலும் மனதிற்குள் அழுவது மங்கையர்க்கு கைவந்த கலை. உடல் நோய் உடலை மட்டும் வதைக்கும். உள்ளத்து நோய் உள்ளத்தோடு உடலையும் சிதைக்கும். அழகு தேவதையாய் அடியெடுத்து வைத்தவள்தான் எங்கள் மருமகள் ஹேமா.

 
முகம் சுழிக்கும் முன்னே முத்தொன்றுப் பெற்றுக் கொடுத்தாள் எங்கள் கையில். புதிய உயிர் ஒன்றின் வரவால் புத்துயிர் பெற்றது எங்கள் வாழ்க்கை. எல்லாம் இன்பமயம். யாருக்குமே எந்தக் குறையுமில்லை மருமகளின் காலில் தோன்றிய கடுகளவு வெண்புள்ளி தவிர. சிரிப்பால் மறைத்துக் கொண்டிருந்தாள் சில காலம், பின்னர் சிரிப்பை மறந்தாள் சில காலம். அவளுக்கு ஓர் குற்ற உணர்வு காரணமே இல்லாமல். பூவைத் தொடுவது போல் நாங்கள் அவளைத் தொட்டாலும், தீயைத் தொடுவதுபோல் அவள் எங்களைத் தீண்டினாள். அதிக அன்பு செலுத்திப் பார்த்தும், தோல்வியே மிஞ்சியது எங்களுக்கு.

எங்களைவிட ஆங்கில மருத்துவத்தின் மீது அபார நம்பிக்கை  அவளுக்கு. மருந்துகளின் எண்ணிக்கையும், டாக்டர்களின் எண்ணிக்கையும் கூடக்கூட வெண்தேமல் பரவும் வேகம் அதிகமாயிற்று. முடிவு????  வழக்கம்போல் தான் ---கிட்னி பிராப்ளம், ஹார்ட் பிராப்ளம், மூச்சுத் திணறல்....... பிறகு ஒரு நாள் ஹேமாவுக்கு வந்தது கோமா. அவளாக பயந்து, ஆங்கில வைத்தியத்தை அடியோடு விட்டு விட்டாள்.  அவள் முகத்தில் சிரிப்பு  இல்லாததால் நாங்களும் சிரிக்க முடியவில்லை. ஒரு நாள் சித்த வைத்தியர் வடிவில் தெய்வம் அவளுக்குக் காட்சி அளித்தது.


சின்ன வைத்தியம் ஒன்று சொல்கிறேன் சீரியஸாக எடுத்துக் கொள்வாயா? என்று கேட்டார்.

சீரியஸான வைத்தியங்களே என்னை சின்னப்படுத்திவிட்டபின், சின்ன வைத்தியம் என்னை என்ன செய்துவிடும்? சொல்லுங்கள் செய்கிறேன் என்றாள். 

காலை வெறும் வயிற்றில், கருவேப்பிலை கொழுந்து ஒரு கைபிடி அளவு எடுத்து அத்துடன் கீழாநெல்லி கொழுந்துஇலை ஒரு கைபிடி சேர்த்து, மிக மெதுவாக மென்று விழுங்கிவா என்றார்.

ப் பூ .... இவ்வளவுதானா? என்றாள்.

நிறைய நீர் குடி. உணவைக் குறைத்து பழங்கள் பல சாப்பிடு என்றார்.

பத்தியம் ஏதேனும் உண்டா? என்றாள்

சொல்ல மறந்துவிட்டேன். வெள்ளை சக்கரையை ( White Sugar) வாயால் உச்சரிக்கவோ, கண்ணால் பார்க்கவோ கூடாது என்றார்.

சனியனை விட்டு ஒழித்ததால் பிணியிலிருந்து விடுதலை பெற்றாள் எங்கள் குலமகள்.
 “உலகத்திற்கு இதைச் சொல்லவேண்டும் மாமா என்றாள்.
இணைய தளத்தில் பரிமாரக் காத்திருக்கிறார்கள் இனிய நண்பர்கள், உன்னுடைய போன் நம்பர் கொடுக்கத் தயாரா? என்றேன்.
அதற்கு போட்டோக்களும் தருகிறேன் மாமா என்றாள்.

எத்தனை வேதனைப்பட்டிருந்தால் அடுத்தவர்க்கு இது பயன்படட்டும் என்ற துணிவோடு போட்டோக்களைக் கொடுக்க முன் வருவாள் என்று எண்ணி நாங்கள் பாராட்டினோம் அவளை. நீங்களும் வாழ்த்துங்கள். வாழட்டும் அவள் இன்னுமொரு நூறாண்டு சுமங்கலியாக.

மது. இராமகிருஷ்ணன்
இயற்கை விவசாயி
சந்தோஷ் பார்ம்ஸ்
பொள்ளாச்சி -642 114.

திருமதி. ஹேமா உமாசங்கர்
கைபேசி எண்.85262 32442 ( தயவு செய்து மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை)

இணைப்பு
பலருக்கும் பயன்பட இணைய தளத்தில் இதனை இணைக்க பாடுபட்ட அண்ணன் திரு வின்சென்ட் மற்றும் அண்ணன். திரு ஓசை செல்லா அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள். இதை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்லும் உங்கள் ஒவ்வொருவருக்கும் எங்கள் நன்றிகள்.
மது. இராமகிருஷ்ணன். ஹேமா உமாசங்கர்.

மக்கள் பயனுற வேண்டும் என்ற உன்னத எண்ணத்துடன் வாழ்வில் நடந்த அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டு நமது பாட்டி வைத்தியம் எளிமையானது, சிறப்பானது, அதிக செலவில்லாதது மற்றும் பின்விளைவு இல்லாதது  என்ற நம்பிக்கையை விதைத்த அண்ணன் திரு. மது. இராமகிருஷ்ணன், திருமதி. ஹேமா உமாசங்கர் இருவரின் குடும்பங்களுக்கும் உங்கள் சார்பாகவும் இவ்வலைப் பூவின் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகிறேன். வைத்தியத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி.

Thursday, June 2, 2011

வீட்டுத் தோட்டதில் கஸ்தூரி மஞ்சள்


கஸ்தூரி மஞ்சள்
தாவரவியல் பெயர் Curcuma Aromatica

...... அங்கு கொஞ்சி விளையாடும் எம் குல பெண்களுக்கு மஞ்சள் அரைத்துப் பணி புரிந்தாயா?...........

என்று வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் திரு. சிவாஜி கணேசன் அவர்கள் பேசிய வசனம் இன்னும் நம் மனதில் பதிந்து இருக்க, பல நூறு ஆண்டுகளாக பெண்கள் பயன்படுத்திய அழகு சாதனத்துடன் கூடிய கிருமிநாசினியான மஞ்சள் இன்று பெண்களிடத்தில் தன் மதிப்பை இழந்து மறைந்து வருகின்றது.  முக அழகிற்காக பல்வேறு க்ரீம்பயன்படுத்தி அழகை இழந்தவர்களும், இழந்து கொண்டிருப்பவர்களும் உண்டு. ஆனால் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் இதன் பயன் அறிந்துள்ளனர் என்பதற்கு கீழ் கண்ட பாடல் உறுதி செய்யும்.

புண்ணுங் கரப்பானும் போக்கைக் கிருமிகளும்
நன்னுமந் தாக்கினியும் நாசமாம்- வண்ணமலர்த்
தொத்தே றளகமின்னே சுக்கிலமும் புதிமாங்
கத்தூரி மஞ்சளுக்குக் காண். ( அகத்தியர் குண பாடம் )

இந்தியாவில் மங்கள நிகழ்ச்சிகளுக்கு முதன்மை பெற்றது மஞ்சள். பூமிக்குக் கீழ் விளையும் கிழங்கு வகையைச் சார்ந்தது மஞ்சள். சமையலுக்கு விரலி மஞ்சள். மேனி அழகிற்கு கஸ்தூரி மஞ்சள். சொறி, சிரங்கு, வியர்வை நாற்றத்திற்கு மேல் பூச்சு. மேனி பளபளக்கவும், உடலிலுள்ள சிறு சிறு உரோமங்களை அகற்றவும் பயன்படுத்தப்படும். பெண்கள் இதனை தங்களின் முகப் பொலிவிற்கு உபயோகிக்கலாம்.  கஸ்தூரி மஞ்சளை மிக எளிதாக  இயற்கை முறையில் வீட்டுத் தோட்டதில் வளர்க்கலாம்.

Thursday, September 2, 2010

மூலநோய்க்கு (Haemorrhoids ) பச்சிலை வைத்தியம்.

தவறான உணவுப் பழக்கம், இரவுப்பணி, ஓரே இடத்தில் அமர்ந்து பணி செய்தல், தினமும் நீண்டதூரப் பயணம், உடற் பயிற்சியின்மை, சரியாக தண்ணீர் அருந்தாமல் இருப்பது என்று பல காரணங்கள் இந்நோய் வருவதற்கு கூறலாம். இந்த நோய் உள்ளவர்கள் ஆரம்ப நிலையில் இதனைப் பற்றி பேச தயக்கப்பட்டு பின் நோய் முற்றியபின் அவர்களது நடையில் மாற்றம் ஏற்படும் போது பிறரின் கேலிக்கு உள்ளாவதை பார்க்கிறோம். அறுவை சிகிச்சை என்று வரும்போது நேரம் மற்றும் பணம் விரையமாவதை தவிர்க்க முடிவதில்லை. ஆரம்பநிலையில் இருப்பவர்கள் அதிக நார்சத்துள்ள காய்கறி மற்றும் பழவகைகளை உண்ண நோய்யை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
எனது வீட்டிலிருக்கும் செடி
ஆனால் ஒரு மெக்சிகோ நாட்டுத் தாவரம் ஐயப்பனா (EUPATORIUM TRIPLINERVE Vahl - AYAPANA) அறுவை சிகிச்சை நிலையில் இருப்பவரைக் கூட மிக எளிதாக குணப்படுத்துகிறது. சுமார் 5 இலைகளை காலையில் பல்சுத்தம் செய்து வெறும் வயிற்றில் இதனை உட்கொண்டு சிறிது சுடுநீர் அருந்தவேண்டும். பின் 30 நிமிடங்கள் கழித்து உணவருந்தலாம். நோயின் தன்மையை பொறுத்து 5 முதல் 10 நாட்களில் குணமாகிவிடுகிறது. இதனை நிறைய நண்பர்களுக்கு அளித்து அவர்கள் நலமுடன் இருப்பதை நான் காணுகிறேன். இதனை வளர்ப்பது மிக எளிமையானது. மொரிஷியஸ் நாட்டில் முதன்மை தாவரமாக உள்ள "ஐயப்பனா" தமிழகத்தில் இன்னும் இது பிரபலமாகவில்லை.

Thursday, April 30, 2009

புற்று நோயும் எலுமிச்சம் புல் சாறும்.

2006 ஆண்டு இஸ்ரேல் நாட்டிலுள்ள பென் கூரியன் பல்கலைக்கழகம் எலுமிச்சம் புல் சாறு அருந்துவதால் இதிலுள்ள “சிட்ரால்” என்னும் வேதிப் பொருளால் புற்று நோய் செல்கள் தற்கொலை (#Apoptosis) செய்து கொள்வதாக கூறியுள்ளனர். அதே சமயம் நல்ல செல்களுக்கு ஒன்றும் ஆவதில்லை என்றும் கண்டறிந்தனர். இதனால் இஸ்ரேல் நாட்டு விவசாயி ஒருவர் எலுமிச்சம் புல் விற்பனையில் பயனடைந்ததாக படித்தேன். நல்ல பயனுள்ள செய்தியாக மனதில் பட்டது எனவே உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். எளிதாக தொட்டிகளில் கூட வளர்க்கலாம் என்பது எனது அனுபவம். இதன் எண்ணெய் நமக்கு அந்நியச் செலாவணியை பெற்றுத் தருகிறது. பொதுவாக, வாசனைக்காக இதன் எண்ணெய் சோப்புகளிலும், தரையை துடைக்க உதவும் திரவங்களிலும் பயன்படுத்துவார்கள். தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் சமையலில் பயன்படுத்துகிறார்கள். நானும் எனது நண்பர்கள் சிலரும் தேனீருடன் இதனையும் சேர்த்து அருந்துகிறோம் மிக்க சுவையாகவும், சுறுசுறுப்பையும் தரும். பனிகாலங்களில் இதமாக இருக்கும். சற்று விரிவான வாசிப்பிற்கு கீழ்கண்ட தொடர்பை பயன்படுத்துங்கள்.

http://www.israel21c.org/bin/en.jsp?enZone=Health&enDisplay=view&enPage=BlankPage&enDispWhat=object&enDispWho=Articles%5El1272

“புற்று நோயும் கோதுமைப் புல் சாறும்” என்ற எனது பதிவினை படிப்பதற்கு கீழ்கண்ட தொடர்பை பயன்படுத்துங்கள்
http://maravalam.blogspot.com/2007/09/blog-post.html

#Apoptosis--noun: a type of cell death in which the cell uses specialized cellular machinery to kill itself; a cell suicide mechanism that enables metazoans to control cell number and eliminate cells that threaten the animal's survival. In other words, cell commits suicide.)

Friday, March 13, 2009

மூலிகை வளர்ப்பு மற்றும் சந்தை படுத்துதல் பற்றி ஒரு நாள் கருத்தாய்வு கூட்டம்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம், கோவை மற்றும் கோயமுத்தூர் மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கம். இணைந்து மூலிகை வளர்ப்பு மற்றும் சந்தை படுத்துதல் பற்றி ஒரு நாள் கருத்தாய்வு கூட்டத்தை நடத்தவுள்ளனர். வேகமாக வளர்ந்து வரும் இந்த மூலிகை துறைக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.

இடம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்
தொழில் நுட்ப பூங்கா -4 (முதல் கேட் அருகில்)

நாள் : 16-03-09.

நேரம் : காலை 10 மணி முதல் மாலை வரை

கட்டணம் : இலவசம்.

சிறப்புரை : பத்மஸ்ரீ திரு. P.R. கிருஷ்ணகுமார்
தலைவர், ஆரிய வைத்திய பார்மசி (லிட்) கோவை.

விருப்பமுள்ள அன்பர்களை கலந்து கொள்ளுமாறு இவ்வலைப் பூ அன்புடன் அழைக்கிறது.

Tuesday, November 25, 2008

பதிமுகம்- Cesalpinia sappan

2003 முதல் தமிழக விவசாய்களிடையே நிறைய எதிர்பார்ப்புகளுடன் 7- 10 ஆண்டுகளில் ஒரு ஏக்கருக்கு 50லட்சம் - 60 லட்சம் என பரபரப்பாக பேசப்பட்ட சிறு மரம் “பதிமுகம்”. இதன் இயற்கை சாயத்திற்காக ஐரோப்பியர்கள் விரும்பினர். தென்அமரிக்காவில் பிரேசில் நாட்டில் அதிகம் இருந்தது. அதன் உரிமைக்காக ஐரோப்பிய நாடுகள் சண்டையிட்டுக்கொண்டது வரலாறு. வரலாற்று சிறப்புமிக்க அம்மரத்தைப் பற்றி சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.


Uploaded on authorSTREAM by vincent2511


முதன் முறையாக PPT யில் இதனை வலையேற்றுகிறேன். ஆங்கிலத்தில் இருக்கும் பொறுத்துக் கொள்ளுங்கள்.

Friday, November 14, 2008

உலக சர்க்கரை நோய் தினம் மற்றும் நோயை குறைக்க உதவும் தாவரங்கள்.

டாக்டர். பிரடரிக் கிரண்ட் பாண்டிங் என்ற கனடா நாட்டு மருத்துவர் தன் சகாக்களுடன் ஆராய்ச்சி செய்து இன்சுலின் கண்டுபிடித்தார். அவர் பிறந்த தினமான நவம்பர் 14 ஐ உலக சர்க்கரை நோய் தினமாக கடைபிடித்து நிறைய கண்காட்சிகளும், விளக்கக் கூட்டங்களும் நடைபெறுகிறது. இந்த ஆண்டு குறிப்பாக குழந்தைகளுக்கு என விசேஷமாக நடைபெறுகிறது. ஒரு நாளைக்கு 200 குழந்தைகள் இவ்வியாதிக்கு ஆளாவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் சுமார் 40 மில்லியன் சர்க்கரை நோயாளிகள் இருப்பதாகவும், 2025 ஆண்டு அது 60 மில்லியனை தொடும் என கூறுகிறார்கள்.

சர்க்கரை நோய் அறிகுறிகள்.
அதிக தாகம் (Excessive thirst)
அடிக்கடி சிறுநீர் கழித்தல் (Frequent urination)
அதிக பசி (Increased hunger)
எடை குறைதல் (Weight loss)
உடற்சோர்வு (Tiredness)
ஆர்வம், கவனம் குறைதல் (Lack of interest and concentration)
பார்வை குறைபாடுகள் (Blurred vision) போன்றவை.

நோயை குறைப்பதற்கான வழிகள்.
உணவுக் கட்டுப்பாடு.
யோகா, உடற்பயிற்சி.
மருந்து.

இந்த நோய் முற்ற கால்களில் புண்கள் (சமயங்களில் காலை எடுக்கவேண்டிவரும்.), கண்நோய், மற்றும் சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படும்.


நோயைக் குறைக்க உதவும் சில தாவரங்கள் இன்சுலின் செடி
இன்சுலின் தாவரத்தின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலே போதுமானது.. இந்த தாவரத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக் கூடிய மாற்றங்கள் குறித்து முழுமையாக ஆராய்ச்சி செய்து வரும் ஐரோப்பியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு காஸ்டஸ்பிக்டஸ் அதிக பலன்களைத் தருகிறது என தங்கள் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். கேரளாவில் அதிகம் உபயோகிக்கின்றனர்.
கள்ளிமுடையான்.
கள்ளிமுடையானின் மெல்லிய் தண்டை நீரில் சுத்தம் செய்து மூன்று அங்குலத் தண்டுகள் இரண்டை தினம் அதிகாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடல் மெலிவதுடன் சர்க்கரை வியாதியைக் குணப்படுத்துகிறது. வருங்காலத்தில் இதற்கு நல்ல மதிப்பு உண்டு.
சர்க்கரைக்கொல்லி
கசப்புச் சுவையுடையது. பெயருக்கேற்ப இலையை சாப்பிட்ட பின் சர்க்கரையை வாயிலிட்டால் இனிப்பு சுவை தெரிவதில்லை. இலையை காய வைத்து பொடியாக்கி இதனை தினமும் அருந்துகின்றனர். கொடிவகையை சார்ந்தது.
சிறியாநங்கை
கசப்புச் சுவையுடையது. இதன் இலையையும் சிலர் சாப்பிடுகிறார்கள். சிறு செடி வகையை சார்ந்தது.
ஸ்டீவியா என்னும் சீனித்துளசி.
தென்அமெரிக்காவை தாயகமாக் கொண்ட இனிப்புச் சுவையுடைய இதன் இலைகள் சர்க்கரைக்கு மாற்று. இலையை காய வைத்து பொடியாக்கி டப்பாக்களில் அடைத்து வைத்து சர்க்கரைக்கு பதிலாக இதனை உபயோகிக்கலாம். பூஜ்யம் கலோரி (Zero Calorie) மதிப்புடையது. எனவே இனிப்புடன் அருந்த வேண்டுமெனில் தாராளமாக இதனை உபயோகிக்கலாம். அதிக சூரிய ஒளியை விரும்பும் தாவரம். தமிழகத்தில் நன்கு வளர்கிறது.


இதனை தவிர்த்து காலையில் வெந்தயப் பொடி சாப்பிடுதல், பாகற்காய் சாரு அருந்துதல், வெள்ளரி விதைகளை சாப்பிடுதல், சீந்தில் சர்க்கரை பொடி என நிறைய தாவரங்கள் சார்ந்த எளிய சர்க்கரை நோயை குறைக்க உதவும் வழிமுறைகள் உண்டு.


முக்கிய செய்தி மேற்கண்ட அனைத்து தாவரங்களையும் நாம் வீடுகளில் வளர்க்கலாம்.
நன்றி: முதல் இரண்டு படங்கள் வலைதளம்

Wednesday, August 20, 2008

மருத்துவத் தாவர கருத்தாய்வுக் கூட்டம், கோவை.


மாநில மருத்துவத் தாவரங்கள் வாரியம், தமிழ் நாடு
STATE MEDICINAL PLANTS BOARD TAMILNADU

மற்றும்

தேசிய மருத்துவத் தாவரங்கள் இயக்கம்
NATIONAL MISSION ON MEDICINAL PLANTS

இணைந்து மருத்துவத் தாவரங்களை வளர்ப்போர், சேகரிப்போர், வணிகப்படுத்துவோர் ஆகியோரைக் கொண்டு ஒரு கருத்தாய்வுக் கூட்டத்தை கோயமுத்தூரில் நடத்தவுள்ளனர். மேற்கண்ட கருத்தாய்வுக் கூட்டத்தில் வலையுலக நண்பர்களை கலந்துகொண்டு பயன்பெறுமாறு இவ்வலைப்பூ அன்புடன் அழைக்கிறது.

இடம் : கொடிசியா வணிக வளாகம், அவினாசி சாலை, பீளமேடு, கோவை.
நாள் : 24-08-2008. ஞாயிற்றுக் கிழமை.
நேரம்: காலை 9.30 மணி முதல் 2.00 மணி வரை.
தொடர்புக்கு : Dr. ஐயப்பன்---98942-46446.

Sunday, September 9, 2007

புற்று நோயும், கோதுமை புல் சாறும்.

மனிதன் இயற்கையை விட்டு விலக விலக பாதிப்புகளும், நோய்களும் தவிர்க்க முடியாத தொடர்கதை தான். குறிப்பாக உணவு - உற்பத்தி முறை, பாதுகாக்கும் முறை, தயாரிக்கும் முறை, தவிர்க்க ,உட்கொள்ள வேண்டிய உணவு, அதன் அளவு, பயிற்சி, கிரியை என சில சாதாரண காரியங்களில் நாம் கவனம் செலுத்தினாலே 75% நோய்களை நாம் தவிர்க்க முடியும். இவைகளில் நாம் கவனம் செலுத்தாமல் போனதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, நோய் வர காரணமாகிறோம்.இவைகளில் அதிகமாக தாக்குவதும் அதிக பணச் செலவு வைப்பதும் இரு நோய்கள். 1. இருதய நோய் 2. புற்று நோய்.

புற்று நோய் :

இன்றைய வேளாண்மையில் அதிக இரசாயன உரம், களை, பூச்சி கொல்லி மருந்து உபயோகித்ததின் விளைவுகளை ஓரளவு நாம் மருத்துவமனை நோக்கி வரும் கிராம மக்களின் தொகையை கொண்டு உணர முடியும்.தங்களின் பெரும் பகுதி சேமிப்பை தற்சமயம் மருத்துவமனைகளில் மேற்கண்ட நோய்களுக்காக செலவிடுகிறார்கள்.நகர மக்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். ஆனால் ஆரம்ப நிலைகளில் தடுக்கவும், பின் நிலைகளில் தாக்கத்தை குறைக்கவும் கோதுமை புல் சாறு சிறந்த நிவாரணி என நிருபிக்கப்பட்டுள்ளது. இதனை பச்சை ரத்தம் என அழைக்கிறார்கள். எளிதாக இதனை நாமே வளர்த்து தயாரிக்க முடியும்.10 தொட்டிகளில் இயற்கை எரு இட்டு கோதுமை மணிகளை (70-100 கிராம்) தினம் ஒரு தொட்டி வீதம் விதைக்க பத்தாவது நாளில் முதல் நாளுக்குரிய புல் கிடைத்து விடும்.இதனை கொண்டு சாறு பிழிந்து வெறும் வயிற்றில் பருக வேண்டும்.அறுவடை செய்த தொட்டியில் திரும்ப விதைக்க வேண்டும். இதனை தொடர்ந்து செய்யவேண்டும் அவ்வளவே. தற்சமயம் பெருநகர அங்காடிகளில் கோதுமை புல் கிடைக்கிறது.

இதனை தவிர வெண்நுணா (Morinda citrifolia ) என்ற தாவரத்தின்
பழச்சாறும் மிகவும் சிறந்தது.இதனை நோனி (Noni)என்ற பெயரில் விற்பனை
செய்கிறார்கள்.இந்திய தாவரம். நாம் இதனை மறந்து விட்டோம்.பசிபிக் பெருங்கடல் அருகேயுள்ள நாடுகள் சிறப்பாக வியாபாரம் செய்கின்றன.


வீடியோ காட்சி காண Click

ஆங்கில கட்டுரை படிக்க Click

மேலும் அறிய கூகிள் தேடுதளத்தை பயன்படுத்துங்கள்.


புற்று நோயை எதிர்க்கும் மேலும் சில உணவுகள் பற்றிய விபரங்களை கீழேயுள்ள வலைதளம் விரிவாக கூறுகிறது. படித்து பயன்பெறுவீர்.

http://www.cancure.org/cancer_fighting_foods.htm

பதிவர் திருமதி.அனுராதா அவர்களின் உறுதியான போராட்டத்திற்கு இந்த பதிவு உபயோகமாக இருக்கும் என எண்ணுகிறேன்.அவர் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.