Wednesday, May 26, 2010

மாணவர்களின் விண்ணப்பமும், வெட்டுக்கு தப்பிய 55 வருட மரமும்.

வெட்டப்படவிருந்த 55 வருட அரச மரம்.

கோவை அவினாசி பிரதான சாலையிலிருந்து 200 மீ தூரத்தில் மசாக்காளி பாளையம் செல்லும் சாலையில் 55 வருட பெரிய அரசமரம் சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட இருந்தது. இதனை கேள்விப்பட்ட மாணவர் திரு. அருண்குமாரும் அவரது நண்பர்களும் குறை தீர்க்கும் நாளன்று (29-03-2010 ) மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் அம்மரத்தை வெட்ட வேண்டாம் என விண்ணப்பம் செய்தனர். அவர்களின் வேண்டுகோள் ஏற்கபட்டு இன்று வரை மரம் வெட்டப்படவில்லை. “சலசல”வென்ற சத்ததுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
அரச இலைகள்.

விஞ்ஞானப் பெயர் : Ficus Religiosa
புனிதமான மரம்.
மரங்களின் அரசன்.
புத்தருக்கு ஞானம் கிடைத்தது இந்த மரத்தடியில்தான் என்பது வரலாறு.
கோவை மாநகரின் கற்பக விருட்சம்,

மாணவர் திரு. அருண்குமாரும் அவரது நண்பர்களும்; குழந்தைகள் தானே என்று இல்லாமல் இயற்கை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அவர்களது குறிகோளை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியரும் போற்றுதலுக்கு உரியவர்கள்.
தந்தை திரு. ப. தண்டபாணியுடன் மாணவர் திரு. த. அருண்குமார்

பணம் மட்டுமே குறிகோளாகக் கொண்டு பெரிய வனங்களையே சூறையாடும் கும்பல்களிடையே திரு. அருண்குமாரும் அவரது நண்பர்களும் தக்க சமயத்தில் இறங்கி இந்த இளம் வயதில் விடிவெள்ளி நட்சத்திரங்களாக இயற்கையை பாதுகாக்க இருப்பது மனதிற்கு ஆறுதல் தருகிறது.
மாணவர் திரு. அருண்குமாரின் கடித்ததின் நகலை இங்கே தருகிறேன்.

மதிப்பிற்குரிய ஐயா,

வணக்கம் ஐயா, எங்கள் பகுதியில் உள்ள 55 ஆண்டுகளாக உள்ள அரசமரத்தை வெட்டக் கூடாது என கேட்டுக் கொள்கிறோம்.

நான் உங்களுக்கு நிழல் தருகிறேன், சுவாசக் காற்று தருகிறேன் பிறகு ஏன் என்னை அழிக்க நினைக்கிறீர்கள். என்னை அழித்துவிட்டு வெயிலில் வாடி அழிந்துவிடாதீர்கள். என்னை அழித்து விட்டால் என் மேல் கூடுகட்டி வாழும் பறவைகளுக்கு என்ன பதில் சொல்வேன். நான் கார்பன்-டை-ஆக்ஸைடை எடுத்து உங்களுக்கு நான் சுத்தமான காற்றை தருகிறேன். ஆகையால் என்னை அழிக்காமல் காத்திடவும்.

இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள குழந்தைகள்,
த. அருண்குமார்.

இடம்: பீளமேடு.
நாள் : 29-03-10

உங்களது வாழ்த்துக்களை திரு. அருண்குமாருக்கு தெரிவிக்கவிக்க விரும்பினால் அவரது தந்தையின் அலைபேசி எண் தருகிறேன். வாழ்த்தி விடுங்கள். ஊக்கமும் உற்சாகமும் அக்குழந்தைகளை மேலும் பல அரிய செயல்கள் செய்ய உதவும்.

ப. தண்டபாணி : 94420-15060

Tuesday, May 18, 2010

குடிநீர் விலைக்கு வந்து 2000 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

கிறிஸ்து பிறப்பதற்கு முன் ( கி.மு. ) காலகட்டத்தில் நம் அரசர்கள் மாதம் மும்மாரி பொழிந்ததா ?? என்று மந்திரிகளை கேட்டுக் கொண்டிருந்த காலத்தில் நம் கிராமங்கள் தன்னிறைவாய் ஆறு, குளம், கிணறு போன்றவைகளை குடிநீருக்காக உபயோகித்து நீர்வளம் மிக்கதாக இருந்தபோது உலகின் ஒரு பகுதியில் குடிநீர் விற்பனையில் இருந்துள்ளது.

இச்செய்தி கிறிஸ்துவ வேதாகமத்தில் (Bible) தெளிவாக எழுதப்பட்டுள்ளது. வேதாகமத்தை இரு பிரிவுகளாக கிறிஸ்து பிறப்பதிற்கு முன் ( கி.மு. ) எழுதப்பட்டவைகள் “பழைய ஏற்பாடு” என்றும் கிறிஸ்து பிறந்ததிற்கு (கி.பி.) பின் எழுதப்பட்டவைகள் “புதிய ஏற்பாடு” ஏற்படுத்தினர். இதில் பழைய ஏற்பாட்டில் உள்ள “புலம்பல் ” (The Book of Lamentations ) என்ற ஆகமத்தில் 5 வது அதிகாரத்தில் 4 வது வசனத்தில் “எங்கள் தண்ணீரைப் பணத்துக்கு வாங்கி குடிக்கிறோம்; எங்கள் விறகு விலைக்கிரயமாய் வருகிறது”. என்று எழுதப்பட்டுள்ளது.

“புலம்பல் ” பழைய ஏற்பாட்டில் இருப்பதால் குடிநீர் விற்பனைக்கு வந்து 2000 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

இன்று நமது நிலைமை என்ன ??? ஆறு, குளம், கிணறு போன்ற நீராதாரங்கள் சீர்கெட்டு அருந்த தகுதியற்றதாய் மாறிக்கொண்டிருந்த காலக்கட்டதில் வந்த குடிநீர் விற்பனை இன்று அமோகமாக நடைபெறுகிறது. இரு பருவமழை, இடையே கோடைமழை என இருந்ததை மரங்களை அழித்து மழையை கேள்விக் குறியாக்கியது நாமல்லவா ? பொருளாதார வேகத்தில் மரங்களை அழித்தும், கழிவுகளால் நீராதாரங்களை பாழ்படுத்தியதும் நாமல்லவா ?

கி.பி இரண்டாம் நூற்றாண்டிலேயே காவிரியின் குறுக்கே கரிகால சோழன் கல்லணை கட்டி பெரிய நீராதாரத்தை நமக்கு தந்தான். இன்று சுகமாக இருக்கிறோம். நம் வருங்கால சந்ததிகளுக்கு என்ன செய்யபோகிறோம் ?????

நீராதாரமா ??? பொருளாதாரமா ??? சிந்திப்போம்.

Monday, May 3, 2010

மாடியில் கீரை வளர்ப்பு.

கீரைகள் வளர்ப்பதற்கு மிக எளிதாக இருப்பதும், மிக குறுகிய காலத்தில் அறுவடை செய்தவுடன் விற்பனையும் என்பதால் புறநகர் பகுதிகளில் கிடைக்கும் நகர கழிவு நீரைக் கொண்டு மிகவும் எளிதாக வளர்த்து விற்பனைக்கு கொண்டு வந்து விடுகிறார்கள். இதனால் மிக பயனுள்ள கீரையை வாங்க தயக்கமாக உள்ளது. காரணம் வளர்க்கப்படும் இடத்தின் நம்பக தன்மை. நன்மை தருவதற்கு பதிலாக சமயங்களில் வயிற்றுபோக்கு, ஒவ்வாமை போன்றவை ஏற்பட்டு விடுகின்றன. இதனை நாமே கிடைக்கின்ற பொருட்களை கொண்டு நகரங்களில் எளிதாக நம்பகத் தன்மையுடன் வளர்க்க முடியும் என்பது எனது அனுபவம். அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன். 10 அடி நீள பையில் காய்ந்த இலைகள் தென்னை நார் கழிவு + மண்புழு உரம் + வேம் ஆகியவற்றை நிரப்பி வைக்கப்பட்டுள்ளது.மெதுவாக முளைக்க ஆரம்பிக்கும் கீரை விதைகள்நன்கு வளர்ந்த கீரை. சமையலுக்கு தயார்

மேலும் காண:
http://maravalam.blogspot.com/2010/08/blog-post_23.html