Saturday, July 25, 2009

குட்டியை காப்பாற்ற தன்னை பலியாக்கிக் கொண்ட தாய் யானை.


இந்த வாரம் மேலும் ஒரு யானை இறந்தது. ஆனால் இறந்த விதம் மேலும் நம்மை சோகத்தில் ஆழ்த்துகிறது. குன்னூர் டைகர் ஹில்ஸ் பகுதியில் ஆண் குட்டி யானை ஓன்று பாறையிடுக்கில் மாட்டிக் கொண்டது. அதனை காப்பாற்ற சென்ற தாய் யானை தவறி பள்ளத்தில் விழுந்து இறந்தது. தகவல் அறிந்த வனதுறையினர் 15 நாட்களே ஆன அந்த குட்டியை காப்பாற்றி முதுமலைக்கு அனுப்பிவைத்தனர். மொத்தத்தில் நன்கு வளர்ந்த யானைகளின் தொகையில் ஒன்று குறைந்தது.

Wednesday, July 22, 2009

வேம்( VAM )என்னும் வேர் பூஞ்சானம்.

இது Vesicular Arbuscular Mycorrhiza (VAM) என்பதன் சுருக்கம். இது தாவரங்களுக்கு பயன் அளிக்கக்கூடிய வேர் பகுதியில் காணப்படும் ஒரு வகை பூஞ்சானம். தாவர வேர்களில் ஒட்டிக்கொண்டு வேரையும் மண்ணையும் இணைத்து மண்ணிலுள்ள பாஸ்பரசை நேரடியாகவும், மறைமுகமாக மற்ற சத்துக்களையும் நீரையும் எளிதாக உறிஞ்சி தாவரங்களுக்கு தரவல்லது. இது வேர்களை அதிக அளவில் உண்டாக்குவதால் விளைச்சல் அதிகரிக்க உதவுகிறது.

வேர் பூஞ்சானத்தால் அடர்த்தியான வேர்கள் உருவாகின்றன.

இதனால் ஏற்படும் நன்மைகள்.

வேர் பகுதி அதிக அளவில் இருப்பதால் தாவரங்கள் ஸ்திரமாக நிலத்தில் இருக்கும்.

வேர்களுக்கு மண்ணிலுள்ள நீரையும் சத்துக்களையும் (குறிப்பாக பாஸ்பரஸ்) எளிதில் உறிஞ்ச உதவுகிறது.

மண்ணிலுள்ள நோய் உண்டாக்கும் பாக்டீரியா மற்றும் பூஞ்சானம் தாக்காமல் தாவரங்களை பாதுகாக்கிறது.

நாற்றங்காலில் இருந்து மாற்றும் போது ஏற்படும் பயிர் எண்ணிக்கை இழப்பை குறைக்கும்.

ஹைபே ( Hypae) உதவியால் சத்துக்கள் உறிஞ்சப்படும் முறை.

வேர்களை தாண்டியுள்ள பகுதிகளிலிருந்து சத்துக்களையும் நீரையும் ஹைபே ( Hypae) உதவியால் தாவரங்களுக்கு அளிக்கிறது. எனவே தாவரங்கள் வறட்சியை சற்று தாங்கி வளரும்.

உர அளவை குறைப்பதுடன் விளைச்சலை அதிகப்படுத்த உதவுகிறது.

நாற்றுப் பண்ணைகளில் குறிப்பாக மரப்பயிர்களுக்கு அவசியம் தேவையானது இந்த வேர் பூஞ்சானம் வேர்கள் நன்கு உருவாகுவதால் மரங்கள் நல்ல வளர்ச்சி பெறும்.

ஹைபே ( Hypae) உதவியால் சத்துக்கள் உறிஞ்சப்படும் முறை.
மண்ணிற்கு ஊட்டம் கொடு தாவரத்திற்கு அல்ல (Feed the Soil Not the Plant) என்பாரகள். இந்த வேர் பூஞ்சானத்தை பொறுத்தவரை இது உண்மை
படங்கள் உதவி : திரு. இராமன்

Tuesday, July 21, 2009

கொல்லபடும் யானைகள்.

இயற்கையாக ஆசியா, ஆப்ரிக்க கண்டங்களில் மாத்திரமே காணப்படுபவை யானைகள். தெய்வமாக வழிபடும் நம் இந்தியப் பாரம்பரியத்தில் அண்மைக் காலங்களில் அவைகளுடன் உண்டான மனிதனின் உறவு சரியாக இல்லை என்பதை கோவை பகுதியிலிருந்து வரும் பத்திரிக்கைச் செய்திகள் நித்தம் தருகின்றன. தந்தத்திற்காக கொல்லப்பட்ட காலங்கள் போய் விபத்தில் இறப்பது அண்மைக் காலங்களில் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக பாலக்காடு - கோவை இடையேயுள்ள சுமார் 25 கீ.மீ வனப்பகுதியிலுள்ள இரயில் பாதையில் நடப்பது. நவீன மின்சார இரயிலின் இரைச்சலில்லாத வேகம் ???? ஒரு வருட காலத்தில் 6 யானைகள் பலி என்பதே உண்மை. இது தவிர வால்பாறை அருகே பயிர்களுக்கு அடிக்க வைத்திருந்த இரசாயன மருந்தை உண்டு 2 யானைகள் பலி. மின்சாரம் தாக்கி ஆண் யானை ஒன்று இருவாரங்களுக்கு முன் இறந்தது. பின்னால் தெரியும் பசுமை மாறாக் காடுகளை அழித்து வணிக பயிர்கள் (இங்கு தேயிலை) பயிரிடப்படுகிறது

அணைகட்டுதல், சுரங்கம் , சாலை அமைத்தல், ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் வனங்களை அழித்து வணிகப்பயிர்கள் பயிரிடுவது போன்ற நம் தேவைக்காக அதன் வாழ்வாதாரமான காடுகளை சுருக்குவது, அதற்கு மேலும் மரங்களை வெட்டி அதன் உணவு மற்றும் நீராதாரத்தை குறைப்பது, அவைகளின் வழக்கமான ,பழக்கமான பாதையை (Elephant Corridor) மறித்து பெரிய கட்டிடங்கள் மற்றும் சுற்றுச்சுவர் நீண்ட தூரத்திற்கு கட்டுவது, வனங்களுக்கு அருகிலேயே அதன் விருப்ப உணவுகளான தென்னை, வாழை, கரும்பு, பலா, மா, மூங்கில் என பயிரிட்டு உள்ளே வரக்கூடாது என மின்வேலி அமைத்து அதனை தடுப்பது, நம்மால் உண்டாக்கப்பட்ட தட்பவெப்ப மாற்றம் என்று அனைத்தையும் மனிதர்களாகிய நாம் செய்துவிட்டு யானைகள் அட்டகாசம், பயிர்களை நாசம் செய்தன என்று செய்திகளில் பழியை அதன் மேல் போடுவது சரி என்று மனதிற்கு படவில்லை ?? படிக்கும் குழந்தைகளிடம் தவறான ஒரு புரிதலை தருகிறோமா ? என்ற சந்தேகம் எனக்கு வரும். காரணம் வேலைகளுக்கு பழக்கி அதனிடம் நாம் வேலை வாங்குகிறோம். இன்றும் பழங்குடி மக்கள் அதனை அனுசரித்து வாழும் போது குறை யாரிடம் ????
பழங்குடி மக்கள் பெரிய மரங்களில் உயரமான இடத்தில் பரண் அமைத்து தங்களையும், ஓரளவிற்கு தங்கள் பயிர்களையும் பாதுகாக்கின்றனர்.
தீர்வு என்பது தெய்வ சிந்தையுடன் கூடிய அணுகமுறையும், அவைகளுக்கு உண்டான வாழ்வாதாரத்தை திரும்ப உண்டாக்குவதும், அதன் வழித்தடத்தை மறிக்காமலும், நமது அதிவேக வாழ்க்கையை குறைந்தபட்சம் அந்த குறிப்பிட்ட 25 கீமீ தூரமாவது குறைப்பதும், மலையோர பகுதிகளில் மாற்றுப் பயிர் செய்வதும், மிகத் தெளிவான புரிதலை குழந்தைகளுக்கு அளிப்பதும் தொடர்ந்தால் இந்த இனம் காப்பாற்றப்படும். இல்லையேல் குறிப்பாக நடுத்தர வயதுள்ள ஆண் யானைகள் இறப்பது தொடர்ந்தால் இனபெருக்கத்தில் பிரச்னையை நாம் எதிர் கொள்ள நேரிடும். சரியான துணையில்லா பெண் யானைகளின் போக்கிற்கு காலம் தான் பதில் கூறும்.
கோவையிலுள்ள “ஓசை” அமைப்பு செஞ்சிலுவை சங்கத்திற்கு முன் இது குறித்த விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்தை 18-07-09 அன்று மாலை நடத்தினர்.
இன்றைய தினசரிகளில்* இரயில்களின் வேகம் குறைக்கப்படும் என்றும் மின்வேலி அல்லது குழி ( trenches ) எடுக்கும் செலவில் பாதியை ஏற்றுக்கொள்வதாகவும் இரயில்வே நிர்வாக (பாலக்காடு) அதிகாரி திரு.Y.P. சிங் கூறியிருக்கிறார். நல்ல செயல்பாடுகளை வரவேற்போம்.

படங்கள் 1 & 3உதவி : வலைதளம் 1 B Ramakrishnan/Wildlife Trust of India. 2 & 5 "Osai " Cbe * The Hindu /cbe dt 21-07-09 page No 7