Friday, June 26, 2009

மக்கள் கலைஞன் மைக்கேல் ஜாக்சன்


11 வது வயதில் தனது இசை பயணத்தை துவக்கிய மக்கள் கலைஞன் மைக்கேல் ஜாக்சன் தனது நடன அசைவுகளாலும், இனிய குரலாலும், அதிரவைக்கும் இசையாலும் பின்னாட்களில் பாப் இசை பாடல்களின் அரசன் என்று உலக மக்களால் போற்றப்பட்டார். சமுதாய சிந்தனையுடன் கூடிய அவரின் நல்ல பாடல்கள் பல இருப்பினும் “Earth Song” என்ற இவரின் பாடல் நாம் அனைவரும் பார்த்து சிந்தித்து செயல்பட வேண்டிய ஒரு பாடல். இன்று காலமான அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அந்த பாடலை பதிவிடுகிறேன்.



பார்த்துவிட்டு நம்மால் இயன்றதை இப்புவிக்காக செய்வோம். இதுதான் நாம் அவருக்கு செய்யும் மிக சரியான அஞ்சலி என்பதில் ஐயமில்லை

Thursday, June 11, 2009

எளிதில் மரம் வளர்க்க சில உத்திகள்.

1970 களின் பிற்பகுதியில் என் தந்தை இளம் தேயிலை நாற்றுகளுக்கு மூங்கில் வகையை சார்ந்த கணு இடைவெளி அதிகமுள்ள “ஓடை” என்னும் துவாரமுள்ள குச்சியை வெட்டி அதனை நாற்றின் வேருக்கருகே வைத்து கோடை காலத்தில் நீரூற்றி காப்பாற்றியதை நான் பார்த்திருக்கிறேன். நாள்பட அவை மக்கிவிடும் அதற்குள் செடி நன்கு வளர்ந்து விடும். பின்னாட்களில் நாங்கள் தண்ணீர் பற்றாக்குறை மிகுந்த பகுதியில் வீடு கட்டியபோது அவர் எஞ்சிய மின்சார கம்பிகளை நுழைக்க பயன்பட்ட குழாய்களை (PVC) மேற்கண்ட முறையில் உபயோகித்து அருகிலிருந்த சாலை மரங்களுக்கும், வீட்டிலுள்ள தென்னைமரங்களுக்கும் மிக சிக்கனமாக நீரைபயன்படுத்தி வளர்த்தார். இன்று அவைகள் ஓங்கி வளர்ந்து மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.

இந்த முறையுடன் மேலும் சில உத்திகளைப் பயன்படுத்தி எளிதாக மரம் வளர்க்கலாம். அதனை புகைபடங்களாக பதிவிடுகிறேன். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

குழியெடுத்து அதனுள் மக்கிய இலைதழைகளை கொஞ்சம் போடவேண்டும் இவை நீரை எளிதில் தக்கவைக்கவும், உரமாகவும் பயன்படும் அல்லது Ec அளவு ஒன்றுக்கும் குறைவான அளவிலுள்ள தென்னைநார் கழிவுகளையும் உபயோகிக்கலாம். பழைய அல்லது உபயோகமில்லாத 1 அல்லது 2 அங்குல விட்டமுள்ள குழாய்களை எடுத்து தேவையான நீளத்திற்கு வெட்டி அதனை குழியினுள் வைத்து பின் செடிகளை நடவேண்டும். கோடை காலத்தில் இந்த குழாய் வழியாக மிக குறைந்த அளவு நீர் ஊற்றினால் கூட போதும் நீர் வேர்பகுதிக்கு நேராக செல்வதால் களைகள் தோன்றுவது குறைந்து நாற்றுக்கள் நன்கு வளரும். திரவ உரங்களையும் தரலாம். சொட்டு நீர் பாசன வசதியிருந்தால் அதனை குழாயினுள் வைத்தால் போதும். நீர் பற்றாக்குறையுள்ள இடங்களுக்கு மிகவும் ஏற்றது. நடும் போது கண்டிப்பாக வேர் பூஞ்சானம் (வேம் )(Vasicular arbuscular mycorrhizas [VAM] ) உபயோகியுங்கள். அது நல்ல வேர் அமைப்பையும், சத்துக்களை கரைத்து வேர்கள் எளிதில் எடுக்கும் வண்ணம் மாற்றியும் தரும். மண்ணிலுள்ள நோய் உண்டாக்கக் கூடிய பாக்டீரியா மற்றும் புஞ்சானங்களிலிருந்து பாதுகாப்பைத் தரும்.

சரிவுப்பகுதிகளில் பிறை வடிவில் குழியெடுத்து வெட்டிவேர் நாற்றுக்களை நட்டு வையுங்கள். அவை மழைகாலங்களில் மண் அரிப்பை தடுத்து நீரை தக்க வைத்துக்கொள்ளும். வெட்டிவேரின் உதவியால் நீர் எளிதில் பூமியினுள் செல்லும். நன்கு வளர்ந்தால் மிக சிறிய தடுப்பணை போன்று நீரின் வேகத்தை தடுத்து நிறுத்தும். நாற்றுக்களை சுற்றி காய்ந்த இலைதழைகளைக் கொண்டு மூடாக்கு இடுங்கள். அவை களைகளை குறைப்பதுடன் மண் ஈரத்தை காக்கும். நிறைய மரங்களை நட்டு சுற்றுச் சுழலைக் காப்போம்.

Friday, June 5, 2009

புவிப் பந்தைக் காப்போம்; மனிதனைக் காப்போம்!

இரயுமன்துறை - தமிழகத்தின் வரைபடத்தில் பூத கண்ணாடியால் பார்த்தால் கூட ஒரு நுண்ணிய புள்ளியாக தோன்றும் இந்த மீன்பிடி மக்கள் வாழும் கிராமம் இன்னும் சில வருடங்களில் அழிந்துவிடும் அபாயம் பற்றி எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்? கன்னியாகுமரி மாவட்டத்தில் அரபிக்கடலுக்கும் வற்றாத தாமிரபரணி நதிக்கும் ஏவிஎம் கால்வாய் ஆகிய மூன்றுக்கும் நடுவில் அமைந்திருக்கும் சிறிய கிராமம் இது. இதற்கு 700 மீட்டர் தொலைவில் கடலும் ஆறும் இருந்தன. இன்று இந்த இடைவெளி 50 மீட்டராக குறைந்துவிட்டது. தொடர்ந்த கடல் அரிப்பின் விளைவாக 650 மீட்டர் நீள முள்ள மண் பகுதியை கடல் விழுங்கிக் கொண்டது. 1982ம் ஆண்டில் இக்கிராமத்தில் 8 தெருக்களும் 7000 மக்களும் குடியிருந் தனர். கடல் அரிப்பின் விளைவாக 5 தெருக்களில் இருந்த வீடுகள் சிதைந்து விட்டன. மக்களின் எண்ணிக்கை 2500 ஆக ஆகிவிட்டது. வீடுகளை, தொழிலை இழந்த வசதி படைத்த மக்கள் சமத்துவ புரத்திற்கும் நாகர்கோவிலுக்கும் புலம் பெயர்ந்துவிட்டார்கள். வேறு யார் எஞ்சி யிருக்க முடியும். மீன்பிடித்தலைக்கூட கூலிக்கு செய்து பிழைக்கும் ஏழை மக்கள்தான் அங்கு மிஞ்சியுள்ளார்கள். கிராமத்தின் மேற்குபுறத்தில் தடுப்புச் சுவர் கட்டினால்தான் மண்அரிப்பை தடுக்க முடியும். அப்படி கட்டப்படும் சுவரால் தங்கள் கிராமம் பாதிக்கப்படும் என்று அண்டையில் உள்ள கிராமத்தார் தடுப்புச் சுவர் கட்டப்படுவதை எதிர்க் கிறார்கள். இதுபோன்ற அழிவை இப் பகுதியில் வேறு எந்த கிராமமும் சந்திக்கவில்லை. அரசின் கவனத் தையும் அதிகாரிகளின் இரக்கத்தையும் ஈர்க்க மக்கள் செய்த முயற்சிகள் பலிக்கவில்லை.இது ஒன்றும் ஓர் தனிப்பட்ட நிகழ் வல்ல. தரங்கம்பாடியில் மாசிலாமணி நாதர் ஆலயமும், சுந்தரவனச் சதுப்பு நிலத்தீவுகளும் இந்தியாவில் பாதிக்கப்பட்டு வருகின்றன. தன்னை அழிக்கும் மனிதர்களை எச்சரிக்கும் இயற்கையின் சீண்டல்கள் இவை.

மேல் அதிகம் பற்றி அறிந்து கொள்ள கீழ் கண்ட தொடர்பை காணுங்கள்.
http://erayumanthurai.blogspot.com/

Source :தீக்கதிர்/கோவை 05-06-09 புவிப் பந்தைக் காப்போம்; மனிதனைக் காப்போம்! கட்டுரையிலிருந்து.
படம் உதவி : http://erayumanthurai.blogspot.com/