Tuesday, August 28, 2007

திரு.மாசானபு புகோகா.

அறிவினாலும், ஆராய்ச்சியினாலும் இயற்கையைவிடச் சிறந்த ஒன்றை உருவாக்க முடியும், என்று மனித இனம் நம்புவது கேலிக்குரிய மாயை.
திரு.மாசானபு புகோகா.
தலை சிறந்த ஜப்பானிய இயற்கை ஞானி

பாறையில் வளர்ந்துள்ள ஆலமரம் வனத்துறையின் ஆழியார் மூலிகை பண்ணையில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் சோதனைக்காக பாறையின் மேல் வைக்கப்பட்ட இந்த ஆலமரக் கன்று பாறையிலுள்ள மிக சிறிய வெடிப்பில் தனது வேர்களை விட்டு பிளந்து இன்று பெரிய விருட்ஷமாக மாறத் துவங்கியுள்ளது. கூடவே ஒரு கொடிக்கும் வளரும் சுழலையும் உருவாக்கி தந்துள்ளது. திரு.மாசானபு புகோகா சொன்னது உண்மைதானோ? சுனாமிக்குப் பின் எளிய அலையாத்திக் காடுகளை வளர்க்க வலியுறுத்தாமல் பெரும் பொருட் செலவில் தடுப்பு சுவர் எழுப்பலாம் என்பதும், மரங்களை நட்டு மழையை பெற்று சேமிப்பதை வலியுறுத்தாமல் கடல் நீரை குடிநீராக மாற்றக் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்யலாம் என்பதும் இந்த வகைதானோ? என்ற ஐயம் என்னுள் நீண்ட நாட்கள் இருந்ததுண்டு.


இயற்கை நமக்கு கற்பதற்கு நிறைய தருகிறது. நாம் கற்க மறுக்கிறோம். விளைவுகளை நாம் தினமும் செய்தியாக படிக்கிறோம், பார்க்கிறோம். காலம் தாழ்த்தாமல் கற்க ஆரம்பிப்போம்.

Monday, August 27, 2007

விவசாயத்தில் விந்தை புரியும் இரு நாடுகள்

1. கியுபா
பல நூறு ஆண்டுகள் பழமை கொண்ட வெப்ப மண்டல தீவு நாடு. 1959 ஆண்டு முதல் சோஷியலிச நாடாக மாறியது. திரு. பிடல் காஸ்ட்ரோ அவர்களின் தலைமையில் இன்று வரை வெற்றிகரமாகவும் கம்பீரமாகவும் தனது பொருளாதாரத்தை உயர்த்திய நாடு. அமெரிக்காவின் சிஐஏ (CIA) சுமார் 638 முறை அவரை கொலை செய்ய முயன்று தோற்றது சரித்திரம். இயற்கையாக புயல் அதிகம் வரும் நாடு. பல இன மக்கள் வாழும் நாடு. 1991 ஆண்டு சோவியத் யூனியன் பிரிந்த போது சோவியத் யூனியனிலிருந்து
இறக்குமதி செய்த சுமார் 90000 டிராக்டருக்கு தேவையான டீசல்,இரசாயன உரம் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விவசாயம் கேள்விக் குறியானது. அவர்களின் முக்கிய ஏற்றுமதியான கரும்பு விவசாயம் பாதிக்கப்பட்டது. அமெரிக்காவின் கடும் பொருளாதாரத் தடையும் சேர்ந்து கொண்டதால் உணவு தட்டுபாடு ஏற்பட்டது. ஆனால் விரைவாக இயற்கை விவசாயத்திற்கு மாறி பின் நகர விவசாயத்தை ஊக்கப்படுத்தி இன்று

தன்னிறைவு பெற்று மற்ற தென் அமெரிக்க நாடுகளுக்கு வழிகாட்டியாக உள்ளது. விவசாயத்தில் பழமையும் புதுமையும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. கூட்டுறவின் வயது சுமார் 48 ஆண்டுகள்.
2. இஸ்ரேல்

1948 ஆண்டு தோன்றிய நாடு. தோன்றிய நாள் முதல் இன்று வரை அண்டை
நாடுகளுடன் சண்டையிட்டுக் கொண்டே விவசாயத்தில் விந்தை புரியும் நாடு. இயற்கை வளம், நீர் பற்றாக்குறையுள்ள நாடு. இருக்கின்ற வளத்தை சிறப்பாக பயன்படுத்தி குளிர் பிரதேசத்தில் வளரும் "டுலிப்" (Tulip)மலர்களயே ஹாலந்து நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் நாடு . சொட்டு நீர் பாசனம்,பசுமை கூடம், மூடாக்கு (sheet mulching) என அதிக உற்பத்தியை தரும் தொழில் நுட்பங்கள் இவர்களது சிறப்பு. மற்றொரு சிறப்பு கூட்டுறவு முறையில் உற்பத்தி மற்றும் சந்தை. கிப்புட்ஸ் (Kibbutz),மோஷாவ் (Moshav) என அந்த கூட்டுறவு முறைகளுக்கு பெயர்கள். கிப்புட்ஸ் முறைக்கு வயது சுமார் 90 ஆண்டுகள். (நாடு தோன்றியதிற்கும் கிப்புட்ஸ் முறைக்கும் ஆண்டுகளில் வித்தியாசம் உண்டு.)


விஷயத்திற்கு வருவோம் உற்பத்தி மற்றும் சந்தை இரு நாடுகளிலும் கூட்டுறவு முறையில் நடைபெறுவது அவர்களின் வெற்றி. பன்னாட்டு நிறுவனங்களின் லாப வெறி கொண்ட சுரண்டல்கள் அங்கு இல்லை. நம் நாட்டில் கூட்டுறவு என்பது சமுதாய பிரபலங்களின் கையிலிருப்பதால்
சாதனைகள் இல்லை. அதையும் மீறி வந்து சாதனை செய்தது " அமுல்". ஆனால் அந்த கூட்டுறவு சாதனைக்கு காரணமான திரு.குரியன் சென்ற ஆண்டு நீக்கப்பட்டார். சாதனை தொடருமா? என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கூட்டுறவிற்கு பெயர் பெற்ற கோவையின் " சிந்தாமணி கூட்டுறவு அங்காடி" இன்று இல்லை என்பது வரலாறு.


உலகமயமாக்கல்,தாராளமயமாக்கல் போன்ற பொருளாதார மாற்றத்தால் வரும் 10-20 ஆண்டுகளில் சிறு,குறு விவசாயம் இருக்காது என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.ஒப்பந்த முறை அல்லது கம்பெனி விவசாயம் தான் இருக்கும் என்கிறார்கள் சமுதாய பிரபலங்கள். ஆனால் கூட்டுறவு முறை அதனை முறியடிக்கும் என்பது நிருபிக்கப்பட்ட வரலாற்று
உண்மை. அதற்கு லாப வெறியற்ற சமுதாய வளர்ச்சிக்கு உடன்படும்
மனங்களும், அதையும் மீறினால் தண்டிக்க கடுமையான சட்டமும் தேவை.

கூட்டுறவே நாட்டுயர்வு.

Tuesday, August 21, 2007

பூமி-- 1800 களில் அமெரிக்க சிவப்பிந்திய தலைவரின் பார்வையில்.

இந்த பூமியே நமக்கு தாய். இந்த பூமியில் சம்பவிப்பவைகள் அணைத்தும் இந்த பூமித்தாயின் மைந்தர்களுக்கு சம்பவிப்பவைகளே. பூமி மனிதனுக்கு சொந்தமானதல்ல. மனிதன் தான் பூமிக்கு சொந்தமானவன்.

நாம் அணைவரும் ஓன்று என இணைக்கும் விதமாக அணைவரது உடலிலும் ஓரே சிவப்பு நிற இரத்தம் தான் ஓடுகின்றது அதுபோல இப்பூமியிலுள்ள எல்லா பொருட்களுமே ஓன்றாக பிணைக்கப்பட்டுள்ளது.

மனிதன் இந்த வாழ்கை வலையை நெய்யவில்லை, அவன் அந்த வலைப்பின்னலின் ஓரு இழை மாத்திரமே. அவன் அந்த வலைப்பின்னலுக்கு செய்யும் யாவும் அவனுக்கே செய்து கொள்ளுகிறான்.

எங்கள் இறைவன் உங்களுக்கும் இறைவனே. இந்த பூமி இறைவனுக்கு மிகவும் விலையுயர்ந்தது. நாம் அதற்கு விளைவிக்கும் தீங்கு அதை படைத்தவன் மீது குவிக்கும் அவமதிப்பாகும்.

பிறந்த குழந்தை தனது தாயின் இதயத்துடிப்பை நேசிப்பது போல நாங்கள் இந்த பூமியை நேசிக்கிறோம். ஆகவே நாங்கள் இந்த பூமியை உங்களுக்கு விற்றால் நாங்கள் நேசித்தது போல நீங்களும் நேசியுங்கள். நாங்கள் எவ்வாறு பராமரித்தோமோ அதே போன்று பராமரியுங்கள்.

இந்த பூமியை அணைத்து குழந்தைகளுக்காகவும் பாதுகாத்துக்கொள்ளுங்கள். இறைவன் நம்மை எவ்வாறு நேசிக்கின்றாரோ? அவ்வாறு நீங்களும் இந்த பூமியை நேசியுங்கள்.


சிட்டேல்
சிவப்பிந்தி்ய தலைவர்.
1854 ஆண்டு அமெரிக்க ஜனாதிபதிக்கு எழுதியதாகக் கூறப்படும் கடிதத்திலிருந்து சில வரிகள்.


இந்த பூமியை அணைத்து குழந்தைகளுக்காகவும் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.