Wednesday, July 25, 2012

பாரம்பரிய விதை திருவிழா மற்றும் கண்காட்சி கோவை.- 2012


பாரம்பரிய விதை திருவிழா மற்றும் கண்காட்சி குறித்த நேரத்தில் ஆரம்பித்து பயிர்காப்பு, சுற்றுச்சுழல், இஸ்ரேல் நாட்டு விவசாயம், எளிய கால்நடை வைத்தியம் என்று பல நிகழ்வுகள் பயனுள்ளதாக இருந்தது. முனைவர். கோ.நம்மாழ்வார் ஐயா அவர்கள் அறிவுரை இன்றைய விவசாயத்திற்கு மிகத் தேவை என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்கமுடியாது. கண்காட்சியில் நிறைய பாரம்பரிய தானிய, பருப்பு மற்றும் காய்கறி விதைகள் காட்சிக்கு இருந்தது பயனுள்ளதாகவும் சிறப்பாகவும் இருந்தது. முனைவர்.கோ.நம்மாழ்வார் ஐயா அவர்கள் எழுதிய இனி விதைகளே பேராயுதம் என்னும் நூல் அனைவருக்கும் வழங்கப்பட்டது. முனைவர். நீ. செல்வம் அவர்கள் எழுதிய விவசாயத்தில் பூச்சிகளின் புரட்சி என்ற நூலை ஐயா வெளியிட அடியேன் பெற்றுக் கொண்டேன். பசுமை விகடனில் பூச்சிகளும் நம் நண்பர்களே! என்று தொடராய் வந்ததின் தொகுப்பு. நிகழ்வுகள்  படத்தொகுப்பாய் உங்கள் பார்வைக்கு.  

Tuesday, July 17, 2012

பறவை, மரம் உறவுக்களுக்கு இடையே மனிதன் ?????


டோடோ பறவை
 தாவரங்களுக்கும், பறவைகள்+மிருகங்களுக்கும் உள்ள உறவு ஒன்றுக்கொன்று சார்ந்தது. பறவைகள் மற்றும் மிருகங்களின் உணவுப் பாதையில் சென்று வரும் விதைகளுக்கு முளைப்புத் திறன் அதிகமாக இருக்கும். தாவரங்கள் அவற்றிற்கு உணவளித்து பாதுகாப்பதால் நன்றிக் கடனாக அவைகளின் வித்துக்களை எளிதாக முளைக்கச் செய்து காடெங்கும் பரவச் செய்யும். இந்த நிலையில் மனிதன் இவற்றிக்கிடையே நுழையும் போது இரண்டிற்கும் அழிவு சர்வ நிச்சயமாகிறது.

கல்வாரியா மரம்
1970 களில் மொரீஷிஸ் தீவின் கணக்கெடுப்பு ஒன்றில்  வெறும் 13 கல்வாரியா மரங்களே இருந்தன. அவைகள் அனைத்தும் 300 வருட மரங்களாக இருந்தன. தீவிர ஆராய்ச்சியில் அந்த தீவில் வாழ்ந்த டோடோ பறவையின் அழிவிற்கும் இந்த மரத்திற்கும் இருந்த தொடர்பு தெரிய வந்தது. 1500 ஆம் ஆண்டுகளில் மொரீஷிஸ் தீவில் கால்பதித்த ஐரோப்பிய கடலோடிகள் அதிக எடையுள்ள பறக்க முடியாத இந்த பறவையைப் பார்த்தவுடன் அடித்து உண்ண ஆரம்பித்தனர். அவர்களுடன் வந்த பிராணிகளும் அதன் முட்டைகளை ருசி பார்த்தன.   விளைவு மனிதன் கால் பதித்த 100 ஆண்டுகளில் டோடோ பறவை இனம் இந்த உலகை விட்டு மறைந்தது. 1681 ஆண்டு கடைசி டோடோ பறவை தன் உயிரை விட்டது

கல்வாரியா மர விதை
  அதற்கு பின்பு இம்மரங்களின் விதைகளுக்கு முளைப்புத் திறனின்றிப் போனது. காரணம் கல்வாரியா மரவிதைகளை டோடோ பறவைகள் உணவாகக் கொண்டது. அதன் உணவுப் பாதையில் வெளி வந்த விதைகளே முளைப்புத் திறன் பெற்றிருந்தது. தற்சமயம் வான்கோழியின் உதவியுடன் விதைகளை முளைக்க செய்ய முயற்சிகள் நடை பெறுகின்றன. நமது சந்தன மர விதைகளுக்கு இந்த உறவு பொருந்தும். இதுபோன்று எவ்வளவு ஜீவராசிகளை அழித்திருக்கிறோமோ??? கண்ணுக்கு தெரிந்த உயிரினங்கள் சரி!! கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள்??? இன்னும் சில ஆண்டுகளில் தெரியவரும். அப்போது அவைகள் அழிந்து பல ஆண்டுகள் ஆகியிருப்பது தெரியும்.
படங்கள் உதவி : கூகுள்தளம்

Friday, July 13, 2012

விதை காப்பாளர்கள் – (5)

குதிர் பெரியது.
 இந்திய விவசாயத்தின் மிக பெரிய பலமாக இருந்தது பாரம்பரிய விதை சேமிப்பு, பாதுகாத்தல் மற்றும் பகிர்தல். இந்த சேமிப்பு மற்றும் பாதுகாத்தல் முறைகள் பல அழிந்து விட்ட நிலையில் மண்ணால் செய்யப்பட்ட மிகப் பெரிய குதிர் என்ற பாதுகாப்பு பானையும் விடைப் பெற்றுவருகிறது. அதன் பிரமாண்டத்தை குறிக்க எங்க அப்பா குதிருக்குள் இல்லை என்ற பழமொழி மூலம் அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு வீட்டிலும் விதை பாதுகாப்பு செய்த நம் மக்கள்  இன்று கவலையின்றி விதை உரிமையை விட்டுக் கொடுத்து கம்பெனிவிதைகளால் கலக்கம் அடைந்து வருகின்றனர்.
ஸ்வால்பார்ட் விதை காப்பக முகப்புத் தோற்றம்
இராமநாதபுரம் மாவட்டதில் அளவான குதிர்
எளிமையாகவும் வீட்டிற்கு ஒரு குதிர் என்றிருந்த விதை சேமிப்பு மறைந்து  இன்று கூட்டு முயற்சியில் மிகமிக பிரமாண்டமான அளவில் நார்வேக்கும் வடதுருவத்திற்கும் இடையேயுள்ள  உறை பனிவெளியில் அமைந்துள்ள ஸ்வால்பார்ட் (Svalbard)” என்ற இடத்தில் உலக விதைகள் காப்பகம் நிறுவியுள்ளனர். 94 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு வகையான தாவர விதையினங்கள் இங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.  ஏற்கனவே 6 லட்சம் விதைகளுக்கு மேல் சேகரித்து வைத்துள்ளனர். குளிர் சாதன வசதியின்றி சுமார் 25 வருடங்கள் காப்பாற்ற முடியும் என்கிறார்கள். இதன் மறுபெயர் கூட உலகின் இறுதிநாள் விதை காப்பகம் (Doomsday seed Vault). பாரம்பரிய தானியங்கள் பல்வேறு காரணங்களால் அழிந்து வருகின்றன. நிறைய விதை காப்பகங்களை குறிவைத்து தாக்க ஆரம்பித்துள்ள மனிதன் விதை மூலம் அமைதியின்மையை ஏற்படுத்த முடியும் என நம்புகிறான். விளைவு இது போன்ற விதை காப்பகம் தேவையாகிறது. தற்போது வங்கி லாக்கர் போன்று வைத்து எடுத்துக் கொள்ளும் வசதி என்கிறார்கள். வேகமாக அழிந்து வரும் பாரம்பரிய விதைகளை காப்பாற்றி வருவது மனத்திற்கு மகழ்ச்சிதான் என்றாலும் போகப் போகத்தான் தெரியும் இவர்களின் நோக்கமும் செயலும். வீட்டிற்கு ஒரு குதிர் மறைந்து உலகத்திற்கே ஒரு லாக்கர் என்பது புதிர் தான்.

இன்றைய உலகம் புல்பூண்டு இன்றி அழிந்தாலும், அழிக்கப்பட்டாலும் இந்த காப்பகத்திலிருந்து விதைகளைப் பெற்று திரும்ப ஒரு புதிய உலகை படைக்க இயலும் என்று இதனை நிறுவியுள்ள அமைப்புக்கள் தெரிவிக்கின்றன. இனி மனிதனை அழிக்க ஆயுதங்கள் தேவையில்லை நீரும் விதையும் போதும் ..அழிவை அவன் தேடிக் கொள்வான்.


புகைப்படம் உதவி : 'குதிர்' யெஸ்.பாலபாரதி

விதை காப்பாளர்கள் (1) 
விதை காப்பாளர்கள் (2) 
விதை காப்பாளர்கள் (3)
விதை காப்பாளர்கள் (4)