Sunday, February 27, 2011

காய், கனிகளுக்கு மதிப்புக் கூட்டுதல்- ஒருநாள் பயிற்சி.


வேளாண்மை பொருட்கள் குறிப்பாக காய்கள், கனிகள் மிக விரைவாக கெட்டுவிடும். ஆனால் அதனை மதிப்புக்கூட்டி சந்தையில் விற்பனை செய்யும் போது நல்ல விலை கிடைப்பதுடன் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை அதிக நாட்களுக்கு கெடாமல் பாதுகாக்க முடியும். பருவங்களில் குறைந்த விலையில் கிடைக்கும் காய், கனிகளை ஜீஸ், ஜமாம், ஜெல்லி, சாஸ், கெட்சப் மற்றும் ஊறுகாய் என மதிப்பைக் கூட்டி வீட்டு உபயோகத்திற்கு எடுத்துக் கொண்டு எஞ்சியதை விற்பனை செய்து வருவாய் ஈட்ட இயலும். வீட்டிலிருக்கும் பெண்கள், மாணவர்கள், சுய உதவி குழுக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்றது.  இதற்கான ஒருநாள் பயிற்சியை நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம் வழங்குகிறார்கள். 
தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :
பேராசிரியர் மற்றம் தலைவர்,
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்,
44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040.

தொலைபேசி 044 - 2626 3484; 044 - 4217 0506

Wednesday, February 23, 2011

மரம் வளர்ப்போர் விழா, கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் - 2011


இன்றைய காலத்திற்கு தேவையான மரம் சம்பந்தபட்ட விழா. கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை வனமரபியல் மற்றும் மரபெருக்கு நிறுவனம் கோவை, ,தமிழக அரசின் வனத்துறை இணைந்து இம்மாதம் 24 - 25 தேதிகளில் அளிக்கவுள்ளனர். அவசியம் அனைவரும் கலந்து கொண்டு பசுமை பாரதமாக மாற்ற நம்மால் இயன்றதை செய்வோம். குறிப்பாக பெரிய அளவில் தரிசுநிலம் வைத்திருப்போர், பெரிய கல்விநிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் என்று நிச்சயமாக கூறலாம். அவர்களது அழைப்பிதழில் விபரம் அதிகமிருப்பதால் அதனையே பிரசுரித்திருக்கிறேன். திரளாக வந்து கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளுகிறேன்.
 
இடம் :   வனமரபியல் மற்றும் மரபெருக்கு நிறுவனம்
          கவுலி பிரவுன் ரோடு, 
          (மாவட்ட நூலகம் எதிரில்)
          ஆர்.எஸ். புரம்
          கோவை- 641 002

நாள் :    24 மற்றும் 25 பிப்ரவரி 2011



அழைப்பிதழை "கிளிக்" செய்து பெரிதாக்கி படியுங்கள் அல்லது கீழ் கண்ட தொடர்பை உபயோகியுங்கள்:  http://ifgtb.icfre.gov.in/left_details/news/Tree%20Growers_2011.pdf

மரம் நடுவோம், மழை பெறுவோம், வளம் பெறுவோம்

Sunday, February 20, 2011

அழகு தோட்டம் அமைத்தல்- ஒருநாள் பயிற்சி.


தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :
பேராசிரியர் மற்றம் தலைவர்,
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்,
P. 44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040.

தொலைபேசி 044 - 2626 3484; 044 - 4217 0506

Tuesday, February 15, 2011

நீர் சிக்கனம் - காய்ச்சலும் பாய்ச்சலும்.

நகரங்களில் உபயோகத்திற்கே நீர் பற்றாகுறையில் இருக்கும் போது கோடைகாலத்தில் செடிகளுக்கு நீரை காய்ச்சலும் பாய்ச்சலும் முறையில் தந்தால் நீர் சிக்கனமாக பயன்படுத்தப்படுவதோடு நமக்கு பயன் தரும் செடிகளும் ஆரோக்கியமாக இருக்கும். பயன் தரும் செடிகளோடு அதிகமாக நீரை விரும்பும் மென்மையான தண்டுகளுடைய செடிகளையும் சேர்த்தே வளர்ப்பது.
ஈரத் தன்மை குறையும் போது இலைகள் 
தளர்ந்து வளைந்து கீழே தொங்க ஆரம்பிக்கும்.

நீர் ஊற்றிய பின் இலைகள் நன்கு பெரிதாகிறது
சற்று நேரத்தில் செடி நிமிர்ந்து பழைய நிலைக்கு வந்துவிடுகிறது.

ஈரப்பதம் தொட்டியில்  அல்லது மண்ணில் முற்றிலும் காய ஆரம்பிக்கும் முன் இந்த செடிகளின் இலைகள் தளர்ந்து வளைந்து கீழே தொங்க ஆரம்பிக்கும் போது நீர் விட்டால் சற்று நேரத்தில் பழைய நிலைமையை அடைந்துவிடும். நீர் ஊற்றிக் கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பால்சம், கோலிஸ்,சாமந்தி வகை செடிகள் இதற்கு ஏற்றவை. இதே முறையை நாம் விளைநிலங்களிலும் நடைமுறைப்படுத்த இயலும்.

Saturday, February 12, 2011

காளான் வளர்ப்பு - ஒரு நாள் பயிற்சி.


தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :
பேராசிரியர் மற்றம் தலைவர்
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்
44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040

தொலைபேசி 044-2626 3484, 044 - 4217 0506

Friday, February 11, 2011

புகையாகும் பொக்கிஷம்.

புகையாகும்  இலைசருகுகள்.
பனிகாலங்களில் வேம்பு, புங்கன், தூங்குவாகை போன்ற மரங்கள் அதிகமாக இலைகளை உதிர்க்கும். நகரங்களில் பொதுவாக இவற்றை குவித்து தீயிட்டு கொளுத்துவோம். சிறந்த உரமான இதனை தொட்டிசெடிகளுக்கு மூட்டாக்கு இடுவதால் குறைந்த அளவு நீர் ஊற்றினால் போதும் ஈரம் காக்கப்படுவதோடு சிறந்த உரமாகவும் மாறிவிடும். குறிப்பாக வேனிற்காலத்தில் இந்த மூட்டாக்கு சிறப்பாக பயன்தரும்.
மூடாக்கு இட்டு செழிப்பாக வளரும்  செடி அவரை
தொட்டிகளும் அதிகப் பளு இல்லாமல் இருப்பதால் எளிதாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றலாம். தனியாக உரம் இடவேண்டிய அவசியம் இல்லை. பூக்களும், காய்கறிகளும் பெரிதாக நல்ல வனப்புடன் ஆரோக்கியமாக இருக்கும். இயற்கை நமக்கு தரும் பொக்கிஷம் இந்த காய்ந்த இலைகள், அவற்றை புகையாக்கி சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறோம். இந்த குப்பையை உரமாக்கி நகரவிசாயம் செய்வதால் கரிமம் நிலைபடுவதோடு சத்தான இயற்கை காய்,கனிகளும் நமக்கு கிடைக்கிறது. வீட்டின் முன்பு கிடைக்கும்  இலைகளை கொண்டு மாடியில் செடிஅவரை, செடிபீன்ஸ், முருங்கை, கறிவேப்பிலை, கீரைகள் போன்ற உபயோகமான செடிகளை நாம் வளர்க்கலாம்.
பெரிய பூக்களுடன் கூடிய யூபோர்பிய மிலி.

Wednesday, February 9, 2011

போன்சாய் மரங்களின் புகைபடங்கள்.

சீனநாட்டில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இந்த கலை பின்பு ஜப்பான் நாட்டில் வேரூன்றி இன்று எல்லா நாடுகளிலும் பிரபலமடைந்துள்ளது. பெரிய மரங்களின் கன்றுகளை உயரம் குறைந்த தொட்டிகளில் சிறிய அளவுகளில் பல்வேறு அமைப்புகளில் பல ஆண்டுகளாக வளர்ப்பது இந்த போன்சாய் கலை. 100 ஆண்டுகளுக்கு மேல் வயதுடைய மரங்களும் உண்டு. கோவை 2011 மலர் கண்காட்சியில் இந்த போன்சாய் அணிவகுப்பு எல்லோரது கவனத்தையும் கவர்ந்தது.

Thursday, February 3, 2011

அற்பமாக எண்ணப்படும் அற்புத தானியங்கள். ---- (2)


சத்துமிக்க தானியங்கள்.
(அட்டவணையை பெரிதாக்கிப் பார்க்கலாம்.)
  நோய்களுக்கு மூலகாரணம் மலச்சிக்கல் என்பார்கள். பொதுவாக அரிசி, கோதுமையை காட்டிலும் அதிக நார்சத்து (5 முதல் 50 மடங்கு) உள்ள இந்த தானியங்களால் மலச்சிக்கல் தவிர்க்கப்படுகிறது. கால்சிய சத்தைப் பொறுத்த வரையில் சுமார் 30 மடங்கு அரிசியை காட்டிலும் ராகியில் உண்டு எனவே எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியான உடலமைப்பையும், ஆரோக்கியத்தையும் தரும். இந்தியக் குழந்தைகள் சத்துக் குறைபாட்டுடன் இருப்பதாக புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. அதற்கு நிவாரணம் இந்த சத்துமிக்க சிறுதானியங்கள் தான். சத்துகள் பற்றிய அட்டவணையை பாருங்கள்.

நீர்த்தேவை.
மிக குறைந்த நீர்தேவை. (மழையளவு சுமார் 300 மி.மீ முதல் 600 மி.மீ.) பொதுவாக இவைகள் மானாவாரி பயிர்கள் எனவே பாசனவசதிகள் (கிணறு, குளங்கள்) போன்றவை அவசியமில்லை. எனவே மின்சாரம் பயன்படுத்தி பாசனவசதிகள் ஏற்படுத்த வேண்டிய தேவையில்லை. இதனால் மாநில அரசிற்கு மின்சார நெருக்கடி தவிர்க்கப்படுகிறது. இப்பயிர்களை அண்டை மாநிலங்களிலும் பிரபலப்படுத்தினால் நீர் பங்கீடு பிரச்னைகள் அதனால் ஏற்படும் பொருளாதார இழப்புக்கள் தவிர்க்கப்படலாம்.

மண் மற்றும் வளரியல்பு.
சத்தான மண் தேவையில்லை. மலைப்பாங்கான, மணற்பாங்கான மற்றும் உவர் நிலங்களிலும் பயிரிடலாம். இரசாயன உரங்கள் அவசியமில்லை. பூச்சிகள் அதிகம் தாக்குவதில்லை எனவே பூச்சி கொல்லிகளுக்கு வேலையில்லை. அதிகமாகி வரும் வெப்பத்தையும் தாங்கி வளரக்கூடியது.
1966-71 -க்கு பின் குறைந்து வரும் சிறுதானிய பரப்பளவு
1981-86 இல் அதிகமாகி பின்பு குறைந்து வரும் சிறுதானிய உற்பத்தி
 பல்வேறு உபயோகம்.
உணவு தானியங்களில் தன்னிறைவு, விதைப்பிற்கான தானியங்களுக்கு கம்பெனிகளை சார்ந்திருக்க வேண்டியதில்லை. சத்துமிக்க உணவு என்பதைவிட உணவே மருந்து, கால்நடைதீவனம், பலதானிய விதைப்பால் மண்வளம் பாதுகாக்கப்படுதல், இரசாயன உரம், பூச்சிக்கொல்லிகளை தவிர்ப்பதால் சுற்றுச்சுழல் பாதுகாப்பு, பல தானிய விதைப்பு, தோழமை பயிர்களாக பருப்பு வகைகள் பயிர்  செய்யப்படுவதால் சுற்றுச்சுழல் மேம்பட்டு நிலம் வளமாக்கப்படுகிறது.

ஆனால் நிறைய தானியங்கள் இங்கு கிடைப்பதில்லை. இவை அழகுப் பறவைகளுக்கு உணவாக குறைந்த விலையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது என்று கூறுகிறார்கள். அதே சமயம் ஓட்ஸ் போன்ற தானியங்கள் நமது உணவிற்காக இறக்குமதி செய்து 500 கிராம் ரூ100/= க்கு  மேல் பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படுகிறது. பாரம்பரியமாக இயற்கை தந்த இந்த சிறுதானியங்களை விடுத்து  ஓட்ஸ் இறக்குமதிகள் தேவைதானா ? நமது நீராதாரத்தை கணக்கிட்டு சிறப்பாக விவசாயம் செய்தவர்கள் பல்வேறு காரணங்களால் அமைதி காப்பது நமது நாட்டிற்கு நல்லதா ? உயரும் மக்கள் தொகைக்கு மரபணுமாற்ற உணவு உற்பத்திதான் தீர்வா ? குறைந்து வரும் மழையளவு, அதிகரித்து வரும் வெப்பத்திற்கு அரிசி, கோதுமை சாகுபடி தீர்வாகுமா? கொள்ளையடிக்கும் விதை கம்பெனிகள் வசம் நம் விவசாயத்தை அடகு வைக்க வேண்டுமா? பயிர் செய்யும் பரப்பளவு அதிகரித்தும் சிறுதானியம் பயிர் செய்யும் பரப்பளவு குறைந்து வருவது நல்லதா?. தீர்மானம் செய்யவேண்டியது குழந்தைகள் அல்ல நாம்தான். ஒரு வேளையாவது சிறுதானியங்களை உணவாக  கொள்வோம். இதனால் சிறுதானியங்களைப் பயிர் செய்யும் சிறு,குறு விவசாயிகளுக்கு உற்சாகம் தந்து  உற்பத்தி செய்யத் தூண்டும். அது நமது உடல் நலத்தை பாதுகாப்பதோடு நமது நாட்டு நலத்தையும் பாதுகாக்கும். 
மேலும் அறிந்து கொள்ள :-


Tuesday, February 1, 2011

அற்பமாக எண்ணப்படும் அற்புத தானியங்கள். ---- (1)

ஊட்டச் சத்துமிக்க தானியங்களாக நிரூபிக்கப்பட்டாலும், குறைந்த நீரில் எளிய வளர்ப்பு முறைகள் இருந்தாலும் இந்த தானியங்களை (சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு ) சிறுதானியங்கள் என்று அழைத்து அதன் முக்கியத்துவத்தை பசுமை புரட்சிக்குப் பின் மக்கள் மனத்திலிருந்து அகற்றி விட்டோம். இந்தத் தலைமுறை குழந்தைகளிடம் குழந்தைகளிடம் தானியங்கள் பற்றிக் கேட்டால் அரிசி மற்றும் கோதுமை தவிர மற்ற தானியங்களைப் பற்றி தெரிவதில்லை என்பதைவிட நாம் அவற்றை  அவர்களுக்கு காண்பிக்கவில்லை என்பதே உண்மை. மேலும் நாகரீகத்தின் சின்னமாக அவை அடையாளப்படுத்தப்படுவதில்லை. மாறாக அவற்றை உபயோகிப்பவர்களை தாழ்வாக எண்ணக்கூடிய மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள். விளைவு பல்வேறு நோய்களில் சிக்கி மருத்துவதிற்கும், உடலை வளமையாக்குவதற்கும் நிறைய செலவு செய்கிறோம்.

ராகி, குதிரைவாலி, கடுகு பயிர்களுக்கிடையே பாரம்பரிய விதைகளைக் காக்கும் விவசாயி திரு. வெள்ளிக்குட்டி.
பொதுவாக தாய்பால் குழந்தைகளுக்கு கிடைக்காமல் போகும்போது கேழ்வரகுக் கூழ் பரிந்துரை செய்யப்படுவதும் 40 வயதிற்குப் பின் உடல் சீர்கெடும் போது மருத்துவர்கள் பரிந்துரை செய்வதும் இந்த சிறுதானியங்களைத்தான்.

இன்றைய விவசாய தற்கொலைகளுக்கு அடிப்படை சுயசார்பு உணவு (சிறுதானியங்கள்) உற்பத்தியை தவிர்த்து வணிகப் பயிர்களுக்கு மாறி சந்தைப்படுத்துவதில் சிக்கல், அதிக நீர்த்தேவை, விலைமிக்க இரசாயன ஈடுபொருட்கள்  மற்றும் பூச்சிகொல்லிகள் போன்றவைகளுக்கு செலவு செய்யமுடியாமல் போனதுதான் காரணம் என்றால் அது மிகையில்லை.


சிறுதானியங்களின் சிறப்பு அம்சங்கள்.

சத்துமிக்க தானியங்கள்.
மிக குறைந்த நீர்தேவை. மழைநீர் போதும்.
நீர் பாசனம் தேவையில்லை
வளமிக்க மண் தேவையில்லை.
இரசாயன உரம் உபயோக்கிக்க தேவையில்லை
பூச்சி தாக்குதல் குறைவு.
பல தானிய விதைப்பால் சுற்றுச் சுழல் வளமையாக்கப்படுகிறது.
பல்வேறு உபயோகம்.